சென்னை: அதிகாலையிலேயே, ரேஷன் கடைகளுக்கு படையெடுத்த கார்டுதாரர்கள், பல மணி நேரம் காத்திருந்து, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பை, ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி கார்டுகளுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு மற்றும் 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அவை, 35 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக, பயனாளிகளுக்கு வழங்கும் பணி, நேற்று துவங்கியது. இதனால், கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, தினமும், 200 - 300 கார்டுகளுக்கு மட்டும், பொங்கல் பரிசு வழங்கும் வகையில், அந்த கார்டுகளின் எண்கள், கடைகள் முன் ஒட்டப்பட்டு இருந்தன.பொங்கல் பரிசை வாங்க, நேற்று பெரும்பாலான கார்டுதாரர்களும், அதிகாலை முதல் ரேஷன் கடைகள் முன் குவிந்தனர். அவர்களிடம், 'இன்று பொருட்கள் வாங்க உள்ளவர்களின் வரிசை எண்கள் ஒட்டப்பட்டு உள்ளன; மற்றவர்கள், உங்களுக்கு உரிய தேதியில் வரவும்' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால், பலர் கலைந்து சென்றனர். நேற்று வழங்க கூடியவர்களுக்கு மட்டும், ஏற்கனவே, ஒவ்வொரு துணி பையிலும் போட்டு வைத்திருந்த, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை, ஊழியர்கள் வழங்கினர். பின், இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளாக, 1,000 ரூபாய் ரொக்கமும், கரும்பும் வழங்கப்பட்டன. வரும், 13ம் தேதி வரை, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதனால், 'தாமதமாக வந்தால் கிடைக்காது என்ற, தவறான தகவலை நம்ப வேண்டாம்' என, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உணவு துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசு வாங்கியவர்களின் மொபைல் போன் எண்களுக்கு, அவர்கள் பொருட்கள் வாங்கியதை உறுதிப்படுத்தும் வகையில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அ.தி.மு.க., தலையீடு! ரேஷன் கடைகளுக்குள், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும், துணை தலைவர்களாக உள்ள அ.தி.மு.க., வினரும்; அக்கட்சியின் மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் நுழைந்து, 1,000 ரூபாய் ரொக்கத்தை, பயனாளிகளிடம் தாங்கள் தான் வழங்குவோம் என, கூறுகின்றனர். இதனால், பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE