இளைய பாரதத்தின் வழிகாட்டி: ஜன.,12 விவேகானந்தர் பிறந்தநாள்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்தவர் வீரத்துறவி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் பெருமை மிக்க பழங்காலத்துக்கும் அதன் எதிர்காலத்துக்கும் இடையே ஓர் அற்புதமான இணைப்புச் சங்கிலியாக விளங்கியவர். சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் உன்னதமான ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் என்று இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும்
இளைய பாரதத்தின் வழிகாட்டி: ஜன.,12 விவேகானந்தர் பிறந்தநாள்

பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்தவர் வீரத்துறவி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் பெருமை மிக்க பழங்காலத்துக்கும் அதன் எதிர்காலத்துக்கும் இடையே ஓர் அற்புதமான இணைப்புச் சங்கிலியாக விளங்கியவர். சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் உன்னதமான ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் என்று இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் பதிந்துவிட்ட பெயர் ஆகும். இளைய தலைமுறையைத் தட்டியெழுப்பி விழிப்புணர்வு ஊட்டிய பகலவன்; நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கச் சிந்தனைகளை நல்கிய கொடையாளன்; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனக் கருதி, மக்களின் துயர் துடைக்கும் பணியை அருட்பணியாகக் கொண்ட அருளாளர்; இந்தியத் திருநாட்டின் ஒளிமிக்க எதிர்காலம் பற்றிக் கனவு கண்டவர்; சிறந்த தேச பக்தர்; உயரிய சிந்தனையாளர்.


விளையும் பயிர்


நரேந்திரநாத் என்பது அவருக்குச் சூட்டப் பெற்ற பெயர்; செல்லமாக 'நரேன்' என்று அழைக்கப்பட்டார். சிறு வயதில் சிறுவன் நரேன் செய்த குறும்புகளுக்கு அளவே இல்லை. எனினும் தன் தாயார் புவனேசுவரியிடமிருந்து பல நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டான் நரேன்; மகாபாரதத்திலிருந்தும், ராமாயணத்திலிருந்தும் பல கதைகளை அவனுக்குக் கூறுவார் புவனேசுவரி தேவி. ராமரின் கதை நரேனுக்கு மிகவும் பிடிக்கும். அழகிய ராமர், -சீதை பொம்மை ஒன்றை வாங்கி, அதற்கு மலரிட்டு வழிபட்டு வந்தான் நரேன். நரேனுக்குத் தியானம் செய்வது மிகவும் பிடித்த விளையாட்டு. கண்களை மூடி, தியானம் செய்யும் பொழுது இறைவனைப் பற்றிய நினைவுகளிலே மெய்மறந்து விடுவான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.

இந்தத் தியானம் தான், பின்னாளில் ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீக இயல்பு மறைந்திருப்பதையும், அதை வெளிப்படுத்தி ஆற்றல் நிறைந்தவனாக மனிதன் வெளிப்பட முடியும் என்பதையும் போதிப்பதற்குக் காரணமாக அமைந்தது “உன்னுள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்து. மற்றவை அதைச் சுற்றி இயைபாக ஒழுங்குபடுத்தப்படும்” என்று மனிதனுக்கு நம்பிக்கையூட்ட முனைந்தார் விவேகானந்தர்.


எழுமின்! விழுமின்!


பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை தட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் விவேகானந்தர். நாட்டு மக்களை அறியாமை இருளிலிருந்தும், நீண்ட உறக்கத்திலிருந்தும் விடுவித்து, விழித்தெழச் செய்வதையே பணியாகக் கொண்டிருந்தார் அவர். இளைஞர்கள் விழித்தெழுவதையே, தம் பேச்சிலும், எழுத்திலும் பல இடங்களில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“உடலில் உறுதி இல்லாமலும், மனத்தில் ஊக்கம் இல்லாமலும், உயிரில்லாத களிமண் உருண்டைகள் போல் இவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள்? உற்சாகப்படுத்தித் துாண்டி விடுவதன் மூலமாக இவர்களிடம் நான் உயிர்ப்பு உண்டாக்க விரும்புகிறேன். எழுமின்! விழுமின்! என்னும் இந்த அச்சமற்ற செய்தியை இவர்களிடம் அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணிக்காக நான் என்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன்” என்பது விவேகானந்தரின் எழுச்சிமிகு வாக்கு.

இந்தியர் ஒவ்வொருவரும் தமது நீண்ட, நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்பதே அவரது விருப்பம். உலகப் பயணத்தில் சீன மக்களிடம் கண்ட பழக்க-வழக்கங்களைக் கண்டு புகழ்ந்தார் அவர்; அவர்கள் ஓயாது உழைத்து வேலை செய்ததும் மெய் வருந்தப் பாடுபட்டுப்பொருள் சம்பாதித்ததும் அவருக்கு மனநிறைவை அளித்தன. சோம்பித் திரியும் இந்தியர்களும் அவர்கள் போன்று மனமுவந்து பாடுபட்டாலொழிய நாட்டில் தாண்டவமாடும் வறுமையை ஒழிக்க முடியாது என்று அவர் எண்ணினார்.

“நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால், எதற்கும் அஞ்சி, ஸ்தம்பித்து நின்று விட மாட்டீர்கள். நீங்கள் சிங்க ஏறுகளைப் போலத் திகழ்வீர்கள். இந்தியாவையும், இந்த உலகம் முழுவதையுமே நாம் தட்டியெழுப்பியாக வேண்டும். தங்களுடைய பணியைச் செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிப்பதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்” என்று உணர்ச்சியுடன் முழங்கியவர் விவேகானந்தர்.


அஞ்சாதீர்


“எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி விடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்குக் காரணம். மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே. இந்தப் பயம் தான் நம் துயரங்களுக்கு எல்லாம் காரணம். பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்க வல்லது” என்று அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

“எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்” என அவர் குழந்தைகளுக்குக் கட்டளையிட்டார்.இளைஞர்கள், அச்சமும், பேடிமையும், அடிமை சிறுமதியும் அடியோடு தவிர்த்து, நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத் திறத்தோடும் அஞ்சாமல் செயலாற்றுவதையே பெரிதும் விரும்பினார் விவேகானந்தர்.


உயர்ந்த குறிக்கோள்


மனிதன் வாழ்வாங்கு வாழவேண்டும் எனில் உயர்ந்த குறிக்கோளும் நல்ல நோக்கமும் கொண்டவனாக இருக்க வேண்டும். மக்கள் எங்கு துன்பத்தில் வாடினாலும் அவர்களின் துயர் துடைப்பதற்குக் தயாராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் விவேகானந்தர். 1898ல் கல்கத்தாவில் கொடிய பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்தது. தங்களுக்கும் நோய் பரவி விடுமோ என்று பயந்த பலர் கூட்டம் கூட்டமாக நகரை விட்டு வெளியேறினர். விவேகானந்தர் உடனடியாக நிவாரணப் பணிகளைத் தொடங்கினார். சேரிகளில் தங்கினார். பிளேக் நோய் பரவிய இடங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் எழுதி அச்சிட்டு மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

நிவாரணப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், வந்தது விவேகானந்தரின் பதில் “ஏன், மடத்திற்காகத் தற்போது வாங்கியுள்ள நிலத்தை விற்போம்! நாம் துறவிகள். பிச்சை உணவை ஏற்று மரத்தடியில் துாங்குவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படித்தானே நாம் வாழ்ந்திருக்கிறோம்! நம் கண் முன்னால் பரிதவிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களின் துயர் துடைப்பதற்காக இந்த மடத்தையும் மற்ற உடைமைகளையும் விற்பது ஒரு பெரிய விஷயமா என்ன?” என்று கேட்டார் என்றால், சொல்வதோடு அமையாது செய்தும் காட்டினார் விவேகானந்தர்.


பாரதத்தை அறிய


“நீங்கள் பாரத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரின் நுால்களைப் படியுங்கள். அவரிடத்தில் எல்லாமே ஆக்கபூர்வமானவை, அழிவை நோக்கி எடுத்துச் செல்லும் எதுவும் அவரிடமே கிடையாது. மனிதன் முழுமையான ஆண்மை உருக்கொண்டு விழித்து எழுவதையே விவேகானந்தரின் நற்செய்திகள் கற்பிக்கின்றன. ஆகவே தான் அவருடைய உபதேசத்தால் நம் இளைஞர்கள் துாண்டப்பட்டு, தொண்டின் மூலமும், தியாகத்தின் மூலமும் விடுதலைக்கான வழிகளில் பணிபுரிந்தனர்,” என்றார் ரவீந்திரநாத் தாகூர். நாளைய பாரதம் எழுச்சிமிகு பாரதமாக உருவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

--முனைவர் நிர்மலா மோகன், பேச்சாளர், மதுரை
94436 75931

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - KARAIKUDI,இந்தியா
10-ஜன-202012:50:02 IST Report Abuse
Nesan அருமையான கட்டுரை இன்றைய இளைஞர்களுக்கு தேவையானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X