சென்னை: தமிழகத்தில், போகி பண்டிகையன்று, சென்னை, துாத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், காற்றின் தரத்தை கண்காணிக்க, மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், வரும், 14ம் தேதி, போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை நேரத்தில், பழைய பொருட்களுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் பொருட்களும் எரிக்கப்படுகின்றன. பனிக்காலம் என்பதால், புகை மாசு அதிகரிக்கிறது. வானம் புகைமூட்டமாக காணப்படுவதால், பலருக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, புகையில்லா போகி கொண்டாடும் வகையில், பொது மக்களிடையே, மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.மேலும், வரும், 13 முதல், 15ம் தேதி வரை, சென்னை, துாத்துக்குடி, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், தொடர்ந்து காற்றின் தரம் கண்காணிக்கப்பட உள்ளது. சென்னையில், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட, 15 இடங்களில், காற்று தரம் கண்காணிக்கப்பட உள்ளது
இதுகுறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2018ம் ஆண்டை விட, 2019ல், காற்று மாசு பாதிப்பு, 40 சதவீதம் குறைந்து காணப்பட்டது. இந்தாண்டு போகி கொண்டாட்டத்தின் போது, காற்று மாசு அளவை, மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'பிளாஸ்டிக், டயர், டியூப்' உள்ளிட்ட பொருட்கள் எரிப்பதை தடுக்க, மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி, போலீசார் அடங்கிய குழுவினர், அதிகாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதியை மீறுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE