மஞ்சுவிரட்டு நடத்த நிபந்தனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சுவிரட்டு நடத்த நிபந்தனை

Added : ஜன 10, 2020

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டுகளை நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி இம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இது குறித்து சிவகங்கையில் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது.அவர் தெரிவித்ததாவது:

அரசு அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுகளை நடத்த வேண்டும். அதற்கான நாள், இடம், வீரர்கள் மற்றும் காளைகளின் விபரங்களுடன் ஒப்புதல் பெறவேண்டும். அனுமதி பெறாத இடங்களில் கட்டுமாடுகளை அவிழ்க்ககூடாது. மீறி அவிழ்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமாடுகளை அவிழ்ப்பதன் மூலம் விபத்து ஏற்படும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் காளைகளையும்,மாடுபிடி வீரர்களையும் பதிவு செய்யவேண்டும்.காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தால் அனுமதிக்கப் படாது. பொதுப்பணித்துறையின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உறுதித்தன்மை சான்று வழங்கிய பின்னரே இடத்துக்கான அனுமதி வழங்கப்படும், என்றார். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X