இந்தியா

ஆம்புலன்ஸ்களுக்கு தடையின்றி டீசல் : சுகாதாரத் துறை நடவடிக்கை

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020
Advertisement
ஆம்புலன்ஸ்களுக்கு தடையின்றி டீசல் : சுகாதாரத் துறை நடவடிக்கை

புதுச்சேரியில் விபத்தில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லவும், 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது.
இதற்காக, புதுச்சேரி முழுவதும் 8 இடங்களில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 27 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.இதுமட்டுமல்லாமல், அரசு பொது மருத்துவமனையில் 3, அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.ஆம்புலன்ஸ்களை பொறுத்தவரை, அவசர நேரங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதுடன், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த காலங்களில், சாரத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரில் அமைந்திருந்த அரசு பணிமனை பெட்ரோல் பங்க்கில் ஆம்புலன்ஸ்களுக்கு டீசல் நிரப்பப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், அரசு பணிமனைக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது. தொடர்ந்து, அரசு பெட்ரோல் பங்க்கும் இழுத்து மூடப்பட்டது.இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளில் ஆம்புலன்ஸ்களுக்கு டீசல் நிரப்பப்பட்டு வந்தது.இதற்கிடையே, கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன பெட்ரோல் பங்க்குகளுக்கு பல கோடி ரூபாயை அரசு துறைகள் செலுத்தாததால் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதில், ஆம்புலன்ஸ்களும் விதிவிலக்கல்ல.டீசல் நிரப்ப முடியாததால், ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது. ஆம்புலன்ஸ்களுக்கு தங்கு தடையின்றி டீசல் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தினர்.
இயக்குனர் உறுதி
உயிர்களை காக்கின்ற அத்தியாவசியமான சேவையாக ஆம்புலன்ஸ் சேவை திகழ்வதால், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் கூறியதாவது:ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு தேவையான நிதி சுகாதாரத் துறையில் உள்ளது. பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, 8ம் தேதியில் (நேற்று முன்தினம்) இருந்து ஆம்புலன்ஸ்களுக்கு டீசல் நிரப்பப்படுகிறது.அமுதசுரபி பெட்ரோல் பங்க்கில் தடையின்றி டீசல் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'ஸ்மார்ட் கார்டு' வசதி செய்யப்பட உள்ளது. எனவே, அரசு ஆம்புலன்ஸ்கள் இயங்குவதில் எந்த சிக்கலும் கிடையாது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் தேவையான அளவுக்கு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகள் சிலவற்றில் தேவைக்கு அதிகமாக மருந்துக்களை சிலர் பெறுவதால் செயற்கை பற்றாக்குறை ஏற்படுகிறது. அதாவது, வாரந்தோறும் வந்து தேவையான மருந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்கு தேவையான நீரிழிவு நோய், ரத்தம் அழுத்தம் போன்றவற்றுக்கான மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனைகளில் மருந்து வினியோகத்தை செம்மைப்படுத்தவும், கண்காணிக்கவும் 'பயோ மெட்ரிக்' வசதியை விரைவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு முன்னுரிமை தந்து அரசு நிதி ஒதுக்குகிறது. எனவே, மருந்து பற்றாக்குறை எதுவும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X