எழுத்தாளனுக்கு பேனா தான் ஆயுதம் அதன் வழியாகவே புரட்சி செய்வான்!

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 'சூல்' நாவலை எழுதியவர் சோ.தர்மராஜ் எனும் சோ.தர்மன். 'ஈரம், துார்வை, சோகவனம்' உள்ளிட்ட நுால்களை எழுதியவர். அவரிடம் பேசியதிலிருந்து...உங்களின் இளமை கால வாசிப்பு பற்றி சொல்லுங்கள்? என் அப்பா, ஒயில் கும்மிக் கலைஞர். அவர், ஊரில் ராமர் வேஷம் கட்டி ஆடுவார். நான் எட்டாம் வகுப்பு படித்தவரை, அவர் தான்
 எழுத்தாளனுக்கு பேனா தான் ஆயுதம் அதன் வழியாகவே புரட்சி செய்வான்!

கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 'சூல்' நாவலை எழுதியவர் சோ.தர்மராஜ் எனும் சோ.தர்மன். 'ஈரம், துார்வை, சோகவனம்' உள்ளிட்ட நுால்களை எழுதியவர்.
அவரிடம் பேசியதிலிருந்து...


உங்களின் இளமை கால வாசிப்பு பற்றி சொல்லுங்கள்?


என் அப்பா, ஒயில் கும்மிக் கலைஞர். அவர், ஊரில் ராமர் வேஷம் கட்டி ஆடுவார். நான் எட்டாம் வகுப்பு படித்தவரை, அவர் தான் எனக்கு ஹீரோ. அவர் நடிப்பின் வழியாகத் தான், ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் எனக்கு அறிமுகமாயின. அந்த ரசனை தான், என்னை வாசிப்பு பக்கம் திருப்பியது. நான் முதலில், வார, மாத இதழ்களைத் தான் வாசித்தேன். அதில் உள்ள கதைகளின் மீது, எனக்கு அதிக நாட்டம் இருந்தது. பின், கதைகளை தேடிப் படித்தேன். கடைசியாக, 1975 - 76களில், கி.ராஜநாராயணனின் படைப்புகளில் மனம் நின்றது. அவரின் படைப்புகளில், எங்கள் பிரதேச மக்களின் வாழ்க்கை இருந்தது. அதுவரை மிகச் சாதாரணம் என நினைத்த, விவசாயக் குடும்பக்கதைகள் எல்லாம், அவர் படைப்புகளில் பிரமிப்பூட்டின. அது தான், சாமானியர்களின் வாழ்க்கையும் எழுதக்கூடியது தான் என்பதைப் புரிய வைத்தது.


நீங்கள் எழுத்தாளராக மாற, அவர் தான் அடித்தளமா?


நிச்சயமாக. எனக்குள் விதைத்தவர் அவர் தான். பின், ஒரு விதை முளைக்க, ஈரப்பதமும், சூரிய வெளிச்சமும் தேவையில்லையா. அப்படி, எனக்கு எல்லாமாக இருந்தது என் தாய்மாமாவும், எழுத்தாளருமான பூமணியின் வீடு. அவரும், கோவில்பட்டியில் தான் இருந்தார். நான் அடிக்கடி அவர் வீட்டுக்கு செல்வேன். அவரின் புத்தகங்களை படிப்பேன். அப்படித் தான் நான் வளர்ந்து, 1980களில், கதை எழுதத் துவங்கினேன். என் கதைகள் பிரசுரமாயின. தொடர்ந்து எழுதினேன்.


எழுத்தாளர் பூமணியிடம் இலக்கிய ஆலோசனைகள் நடத்தியதுண்டா?


என் மாமாவிடம் இதுவரை, இலக்கியம் குறித்து எதையும் பேசியதில்லை.


கி.ராஜநாராயணனிடம் நீங்கள் கற்ற விஷயங்கள் என்ன?

அப்போதைய விவசாய நிலங்கள் பற்றியும், விவசாயம் நவீனமயமாவது பற்றியும் அவர் எழுதினார். விவசாயம் நவீனமயமாவதால் ஏற்படும் பாதிப்புகள், மழையில்லாததால் ஏற்படும் வறட்சி, வெள்ளத்தால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட விவசாயிகளின் அன்றாட வாழ்வியலைத் தான் நான் எழுதுகிறேன்.நானும், 10 ஏக்கர் காடும், 3 ஏக்கர் தோட்டமும் வைத்துள்ள விவசாயி தானே! தற்போது, சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், 'சூல்' நாவலும் அதைத் தான் பேசுகிறது.காலத்தின் தேவையை, இலக்கியம் தானாகவே பதிவு செய்யும்.


துவக்க கால வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீங்கள் சொல்ல நினைப்பது?


நுண்கலைகளான ஓவியம், நாட்டியம், பாட்டு உள்ளிட்டவற்றை, குருவால் கற்பிக்க முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பையோ, எழுதுவதையோ, யாரும் கற்பிக்க முடியாது. சிலர், 'அதைப் படி, இதைப் படி' எனச் சொல்வர். ஆனால், அது, சொல்பவரின் விருப்பமாகத் தான் இருக்கும். வாசிப்பும், இலக்கிய நேசிப்பும் சுயம்புவானது.


உங்கள் பார்வையில் நல்ல இலக்கியம் என்பது எது?


காலத்தின் தேவைக்கேற்ப படைக்கப்படுவது; காலத்தால் அழிக்க முடியாதது தான் நல்ல இலக்கியம். எந்த வெள்ளத்திலும் அது மூழ்காது. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் வெளியிடப்படும் என் புத்தகங்களை, பலரும் தேடிப்பிடித்து வாங்க அது தான் காரணம். மத்திய, மாநில அரசுகள் என் எழுத்துக்களை அங்கீகரிக்கவும், அசல் சரக்காக இருப்பது தான் காரணம்.


பொழுதுபோக்கு இலக்கியங்கள் பற்றி?


பயண நேரத்தை கடக்க, பொழுது போக்கு இலக்கியங்கள் அவசியம். வெகுஜனங்களின் ரசனைக்கேற்ப, அவ்வப்போது எழுதப்படுபவை, அப்போது, 'ஆஹா... ஓஹோ...'வென ரசிக்கப்பட்டு விற்கப்படும். அந்த சூழல் கடந்தால், அதை யாரும் படிக்க மாட்டார்கள். இப்படி, ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு வகை எழுத்துக்கள் உள்ளன.


நீங்கள் பொழுதுபோக்கு இலக்கியங்கள் எழுதுவீர்களா?


நான் எழுத மாட்டேன். நான், ஒரு நாவலை, மனதுக்குள் கருவாக்கி, உருவாக்கி, 10 ஆண்டுகளுக்குப் பின் தான் எழுதுகிறேன். அதனால், அது வீரியமிக்கதாக உள்ளது. அது, காலத்தால் அழியாது. கால தாமதத்துக்காகவோ, உடனடி அங்கீகாரத்துக்காகவோ, பிரமாண்டமான வெளியீட்டு விழாவுக்கோ நான் ஏங்கியதில்லை. அப்படி எழுதப்போவதுமில்லை.


உங்களின் எழுத்து பாணியை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?


கற்க கற்கத்தான் ஒரு வித்தை புரிபடும். அது போல தான் எழுத்தும். முதலில், சாதாரணமாக தான் தொடங்கினேன். பின் தான், 'நேச்சுரலிசம், ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், சர்ரியலிசம், மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம், எக்சலிசம், கியூபிசம்' என, பல எழுத்து பாணிகள் உள்ளதை அறிந்தேன். நாம் எதைப்பற்றி எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து, எழுத்து பாணியை தேர்ந்தெடுக்கிறேன்.வெளிப்படையாக சொல்ல முடியாத விஷயங்களை, கொஞ்சம் மறைத்து சொல்ல வேண்டும். அதை படிக்கும் வாசகனுக்கு, நாம் எதைப்பற்றி, யாரைப் பற்றி எழுதியுள்ளோம் என்பது புரியும்.


நேரடியாக எழுதாவிட்டால், வாசகனுக்கு குழப்பம் ஏற்படாதா?


குழப்பத்திற்குப் பின் தெளிவு கிடைத்துவிடும். மேலைநாடுகளில், சர்வாதிகாரப் போக்கை எடுத்துச் சொல்லவும், போராடவும், அதுபோன்ற எழுத்துக்கள் தான் உதவின. இங்கும், அதற்கான தேவை உள்ளதால், அந்த எழுத்து பாணியை தேர்வு செய்கிறோம்.


படைப்பாளன், தன் படைப்பில், அரசியல் பேச வேண்டுமா?


அரசியல்வாதிகள் வேறு, கலைஞர்கள் வேறு. கலைஞர்களுக்குள்ளும் அரசியல் இருக்கும். ஆனால், கலைஞன் நேரடியாக, கொடி பிடித்து, கோஷம் போட மாட்டான். எழுத்தாளனுக்கு பேனா தான் ஆயுதம். அதன் வழியாக அவன் புரட்சி செய்வான்.


துாண்டிலில் மீன் பிடிப்பது தான் உங்கள் பொழுதுபோக்கா?


துாண்டில் போடுவது ஒரு கலை. துாண்டில் போடும் போது, மனம் ஒன்றுகிறது. அப்போது, என் கதாபாத்திரங்களுடன் உரையாடுவேன். துாண்டிலில் பிடிக்கும் மீன்களை, யாருக்காவது கொடுத்து விடுவேன்.முன்பெல்லாம், துாண்டில் போட்டால், கண்மாய்களில் இருந்து, வகை வகையான நாட்டு மீன்கள் நிறைய கிடைக்கும்.


இப்போது, அவை இல்லை.நாட்டு மீன்கள் அழிய என்ன காரணம்?


தொடர்ந்து தண்ணீர் இல்லாதது ஒரு காரணம். மற்றொன்று, திலோப்பியா என்ற ஜிலேபிக்கெண்டையை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது. அந்த மீன், நன்னீர், உவர்நீர், கழிவுநீர் என, எல்லாவற்றிலும், அபரிமிதமாக வளரும். அது, மற்ற மீன் முட்டைகளை உண்டு, அதிக முட்டையிட்டு, குஞ்சுகளை காக்கும். நாட்டு மீன்களைப் போல சன்னமாக இல்லாததால், அதை பறவைகளும் உண்ணாது. ஆஸ்திரேலியாவில் கங்காருவை மீட்டது போல், மீண்டும், நம் பாரம்பரிய மீன்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான ஆய்வுகளை செய்து வருகிறேன்.


உங்களின் அடுத்த படைப்பு?


தற்போது, கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகளைப் பற்றிய, 'பதின்மூன்றாவது மையவாடி' என்ற நாவல் வெளிவந்துள்ளது. 1730க்குப் பின், மதுரைக்கு தெற்கில் நடந்த சம்பவங்களை உள்ளடக்கிய நாவல் ஒன்றை தற்போது எழுதி வருகிறேன்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X