இந்த செய்தியை கேட்க
ஐதராபாத்: ஆந்திராவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, 'ஜெகனண்ணா அம்மா வோடி' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் 43 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும். இதற்காக நடப்பாண்டில் ரூ.6455.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் வரையில் இந்த பணம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தாய்மார்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட இருக்கிறது.

ஆனால், இத்திட்டத்தின் மூலம் பணம் பெறுவதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள். மாணவருக்கு 75 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. ஆதரவற்றோர் மற்றும் தெருவோர குழந்தைகளை பராமரித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பொருந்தும். ஆனால், உரிய விசாரணை மற்றும் தகவல் சரிபார்ப்புக்கு பின்னர் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE