சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

லஞ்ச பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு பரிசு!

Added : ஜன 10, 2020
Advertisement
லஞ்ச பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு பரிசு!

''புகழ்ச்சி எல்லாம் குறைஞ்சிடுத்து ஓய்...'' என, காபியும், கையுமாக பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''எங்க நடந்த விஷயத்தைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சட்டசபையில, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேச ஆரம்பிக்கறச்சே, ஜெயலலிதா, முதல்வர் மற்றும் துணை முதல்வரை, சில நிமிடங்கள் புகழ்ந்து தள்ளிட்டு தான், சப்ஜெட்டுக்கே போவா... இப்ப, காட்சி மாறிடுத்து ஓய்... ''பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர், இ.பி.எஸ்.,சை மட்டும் தான் புகழ்ந்து பேசறா... அப்பறமா, 'அவருக்கு உறுதுணையா இருக்கற துணை முதல்வருக்கும் நன்றி'ன்னு சொல்லிட்டு, மேட்டருக்கு போயிடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கட்சியில, இ.பி.எஸ்., கை ஓங்குதுன்னு சொல்லாம சொல்றாங்க போல...'' என்ற அந்தோணிசாமி, ''மாங்கு மாங்குன்னு உழைச்சவங்களுக்கு, இன்னும் அதுக்கான ஊதியம் கிடைக்கலைங்க...'' என, வேறு விஷயத்தை ஆரம்பித்தார்.

''யாருக்கு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''பள்ளிக்கல்வி துறையில, போன வருஷம், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாட திட்டத்தை அமல்படுத்துனாங்களே... புதிய பாடத் திட்டத்தை உருவாக்குற குழுவுல, ஏராளமான ஆசிரியர்கள் இருந்தாங்க... ''குறிப்பா, தமிழ் பாடங்களை தயாரிக்கிற குழுவுல, 12 ஆசிரியர்கள், ராப்பகலா வேலை பார்த்தாங்க... புது பாடத் திட்டம் அமலுக்கு வந்து, ஒரு வருஷமாகியும், இந்த தமிழாசிரியர்களுக்கு, இன்னும் உழைப்பூதியம் வரலைங்க... இதை தராம, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இழுத்தடிச்சிட்டு இருக்குங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''முறைகேடு அதிகாரிக்கு, பதவி உயர்வு குடுத்துட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை, காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துல, உயர்கல்வித் துறை முன்னாள் இயக்குனர் ஒருத்தரிடமே, சொத்து விற்பனையை பதிவு செய்றதுக்கு, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிட்டாங்க பா... ''இதுக்காக, அங்க இருந்த பெண் அதிகாரி மேல நடவடிக்கை எடுக்கணும்னு, பதிவுத்துறை தலைவருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கடிதமே எழுதினாங்க... அதுல, 'லஞ்சப் பணத்துல செழிப்பா இருக்கிற பெண் அதிகாரியின் சொத்து குவிப்பு தொடர்பா விசாரிச்சு, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்'னு கேட்டிருந்தாங்க பா...

''ஆனாலும், அந்த பெண் அதிகாரிக்கு, துறையில இருக்கிற பெரிய அதிகாரிகளே உதவியா இருக்காங்க... ''இதனால, அவங்க மேல நடவடிக்கை எடுத்தோம்னு சொல்லிக்கிறதுக்காக, அங்க இருந்து, முதல்ல டம்மியான ஒரு இடத்துக்கு மாறுதல் போட்டாங்க... சமீபத்துல, அவங்களை, பதவி உயர்வோட பக்கத்து மாவட்டத்துல நியமிச்சுட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''என்ன தம்பி, உங்க அக்கா விஜயசாந்தி, ஊருக்கு போயிட்டாங்களா...'' என, எதிரில் வந்தவரிடம் விசாரித்தபடியே, அந்தோணிசாமி நடக்க, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X