இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Added : ஜன 10, 2020
 இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், 2019 டிசம்பர், 23ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், elections.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, டிசம்பர், 23ல் துவங்கியது; வரும், 22ம் தேதி வரை நடக்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, www.nvsp.in என்ற இணையதளத்திலும், 'VOTER HELPLINE' என்ற, 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம். கடந்த, 4, 5ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் கோரி, ஒன்பது லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும், இன்றும், நாளையும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் விண்ணப்பம் அளிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளையும், சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அரசு அல்லது அரசு சார் நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றின் நகலை வழங்கலாம்.வயது சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றிதழின் நகல் அளிக்கலாம். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கண்டிப்பாக வயது சான்றிதழ் அளிக்க வேண்டும். ஜனவரி 1 அன்று, 18 வயது பூர்த்தியானவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இறுதி பட்டியல்: பிப்ரவரி மாதத்தில் வெளியீடு''இறுதி வாக்காளர் பட்டியலை, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிட முயற்சித்து வருகிறோம்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறினார்.

தேசிய வாக்காளர் தினம், வரும், 25ல், கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக, சென்னை மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, 'வலிமையான ஜனநாயகத்தை அமைக்க, அனைவரும் ஒட்டளிக்க வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தி, பள்ளி, கல்லுாரிகள் உட்பட, பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.

தமிழகம் முழுவதும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியிட முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X