சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளை

Added : ஜன 10, 2020
Advertisement
 பா.ஜ., பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளை

பொன்னேரி: பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வீட்டின் பூட்டை உடைத்து, 385 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றோரை, பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், 55; பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்.இவரது தம்பி ஆர்.எம்.ஆர்.ரமேஷின் மகள் திருமணம், வரும், 20ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது.இதற்காக, வெளிநாடுகளில் இருந்து ஜானகிராமனின் மகன், மகள், மருமகள் மற்றும் உறவினர்கள், அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.நேற்று முன்தினம், கட்சியில் இருப்போரை பார்க்க, ஜானகிராமன் வெளியூர் சென்றார். வீட்டில் இருந்த மற்றவர்கள், உறவினர்களை பார்க்கவும், திருமண ஏற்பாடுகளை செய்வதற்காகவும், சென்னைக்கு சென்றனர்.இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று, நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று காலை, வீட்டுக்கு வந்த ஜானகிராமன், பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே, மூன்று அறைகளில் இருந்த, நான்கு பீரோக்கள், சூட்கேஸ்கள் ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு இருந்தன.திருமண நிகழ்ச்சிக்காக, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த நகைகள், வெளிநாடுகளில் இருந்து வந்த குடும்பத்தினர் நகைகள் என, மொத்தம், 385 சவரன் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து அவர், கொள்ளை குறித்து, பொன்னேரி போலீசில் புகார் அளித்தார்.

தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேன்மொழி, மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர், கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்ட பின், கொள்ளையில் ஈடுபட்டோரை பிடிக்க, மூன்று தனிப்படைகளை அமைத்தனர்.பொன்னேரி- - திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி, ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் வீடு இருப்பதால், வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். எனினும், இக்கொள்ளை நடந்திருப்பது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X