சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 10, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அவர், 'ஷாப்பிங்' போன விவகாரம் அம்பலமான பிறகு, ரஜினி, மூன்று படங்களில் நடித்து விட்டார். அந்த படங்களிலும் அரசியல், 'டயலாக்' இருந்தன. எனவே, இதற்கு வேறு ஏதும் அர்த்தம் இருக்கும்...' என, சந்தேகம் கிளப்ப வைக்கும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ரஜினியின், தர்பார் படத்தில், பணம் இருந்தால், சிறையிலும், 'ஷாப்பிங்' போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அது, ஜெ., முன்னாள் தோழி சசிகலா பற்றியதாக இருக்கலாம். பணம் இருக்கிறது என்பதற்காக, எதையும் சாதிக்க முடியும் என, எண்ணக் கூடாது.

'இரட்டை வேஷங்களின் சூத்திரதாரி என, காங்கிரசை தான் பொதுவாக கூறுவர். ஆனால் நீங்கள், அ.தி.மு.க.,வை கூறுகிறீர்களே...' என, கிடுக்கி போட வைக்கும் விதமாக, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: தமிழகத்தில், 'நீட்' தேர்வு திணிப்பிற்கு, மத்திய, பா.ஜ., அரசு தான் காரணம். ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு போலவும், மறுபுறம் அந்த தேர்வை அமல்படுத்தியும், தமிழக, அ.தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறது.

'அந்த வரலாறு மறக்கடிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தை சேர்ந்த சிலர் மட்டும் தோன்றிய மாநிலமாக மாற்றப்படும் அவலம் அல்லவா நடக்கிறது...' என, வருத்தத்தை தெரிவிக்க தோன்றும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேச்சு: அறிவின் நிலமாக திகழும் தமிழகத்தில், பல முக்கிய தலைவர்கள் உதித்துள்ளனர். குறிப்பாக, கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியார், முன்னாள் ஜனாதிபதிகள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்றோர் தோன்றிய மாநிலம் இது.

'நல்ல திட்டம்; கல்வி தான் முக்கியம். தமிழகமும் பின்பற்றினால் நல்லது தான்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு: குடும்ப வறுமை காரணமாக, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் தாய்மார்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்.

'இதை எல்லாம், யுத்தம் என்றால், காலம் காலமாக, காஷ்மீர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதலை என்ன சொல்வது...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: குமரி மாவட்டத்தில், போலீஸ் எஸ்.ஐ., சுட்டுக் கொல்லப்பட்டதை, தமிழக போலீசார் மீது நடத்தப்பட்ட நேரடி யுத்தமாக நான் கருதுகிறேன். போலீஸ் மீது கை வைத்தவர்களை, மீண்டும் அவ்வாறு செய்ய முடியாத அளவுக்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X