சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., விரும்பிய புகைப்படத்தை மறக்கலாமா?

Added : ஜன 10, 2020
Advertisement
 எம்.ஜி.ஆர்., விரும்பிய புகைப்படத்தை மறக்கலாமா?

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரை காண, அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து, இரு கரம் கூப்பி, சிரித்தபடியே வணங்கினார். அந்த புகைப்படத்தை நாளிதழ்களில் பார்த்தவுடன், எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது. அன்று முதல், அந்த புகைப்படம், அரசு ஒப்புதல் படமானது. செய்தித்துறை வாயிலாக வெளியிடும், தமிழக அரசு விளம்பரங்களில், இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, அரசு அமைக்கும் பொருட்காட்சி பந்தல்கள் முகப்பில், இந்த புகைப்படம் வைக்கப்படும். எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ, அங்கெல்லாம் அந்த படத்தை பார்க்கலாம். ஆனால், அந்த படம் இப்போது வைக்கப்படுவதில்லை. மதுரை, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும் வரும் இளைய தலைமுறையினருக்கு, எம்.ஜி.ஆர்., யார் என்றே தெரியாமல் போய் விடும். அதற்காக தான், சென்னை, சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனுக்கு, பிரதமர் மோடி, எம்.ஜிஆர்., பெயரை சூட்டினார்.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன் பங்களிப்பாக, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கும், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டினார். அதுபோல், சென்னை ரயில்வே ஸ்டேஷன், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வரவேற்பு நுழைவு வாயிலில், மக்கள் பார்வைக்கு பெரிய அளவில் எம்.ஜி.ஆர்., விரும்பிய, அவரது படத்தை வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் வைக்க, அனைத்து ஏற்பாடுகளையும், தமிழக முதல்வர் செய்ய வேண்டும்!

***


வீண் சிரமத்தை தவிர்க்க முடியும்!

மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாணவர்களின் கல்வியிலும், கலாசாரத்திலும் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்களை, தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி போன்ற, வேறு சில பணிகளுக்கும், அரசு பயன்படுத்திக் கொள்கிறது. அந்தப் பணிகளோடு சேர்த்து, குழந்தைகளுக்கு பாடமும் கற்றுத் தந்து, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும், ஆசிரியர்கள். பணிக்கு சற்றும் தொடர்பில்லாத, மற்ற வேலைகளை, ஆசிரியர்களின் தலையில் கட்டினால், எப்படி செய்ய முடியும்?

ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில், பிரசன்னமாக அவர்கள் என்ன அவதாரங்களா... உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடக்கும் தேதியும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான திறனறி தேர்வு தேதியும், ஒன்றாக அறிவிக்கப்பட்டன. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். அங்கே வருவதா, இங்கே இருப்பதா என, திகைத்து நின்றனர். தமிழக தேர்தல் ஆணையம் முதலிலேயே, இந்த தேதியை வெளியிட்டிருந்தாலும், தேர்வுத் துறை அதை கவனிக்காமல், அதே தேதியை, தேர்வுக்கும் அறிவித்ததால் வந்த குழப்பம். அவசர அவசரமாக ஆசிரியர்களை, தேர்வுப் பணியிலிருந்து விடுவித்தது, தேர்வுத் துறை.

அங்கிருந்து, உடனே தேர்தல் பயிற்சிக்கு செல்லுமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இப்படி, இரண்டு துறைகளாலும், இவர்கள் அலைக்கழிக்கப்படக் காரணம், தேர்தல் துறை மற்றும் தேர்வு துறைக்கு இடையிலான தகவல் தொடர்பு இடைவெளி. 'ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோவில் ஆண்டி; அவனுக்கும், இளைத்தவன் பள்ளிக்கூட வாத்தியார்' என்ற சொலவடை உண்டு. ஆசிரியர்கள், மிகக்குறைந்த ஊதியம் பெற்றதால், 'ஐயோ பாவம், வாத்தியார்' என, முன்பெல்லாம் பரிதாபத்துக்கு உரியவர்களாக இருந்தனர்.

தற்போது, ஆசிரியர்கள் அதிக ஊதியம் வாங்குவதை பார்த்து, 'ஐயோ, அப்பா...' என, வயிற்றெரிச்சல் அடைகின்றனர், மற்ற துறையினர். ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியை மட்டும் செய்யவில்லை; நாட்டின் வருங்காலத் துாண்களான மாணவர்களுக்கு நல்ல பண்பும், ஒழுக்கமும் கற்றுத் தரும் ஆசான்களாகவும் உள்ளனர். அதனால் தான், இதை மிகவும் உன்னதமான தொழில் என, போற்றுவர். இதை உணர்ந்து, அரசின் துறைகள் எதிர்காலத்தில் புரிதலோடு செயல்பட்டால், வீண் சிரமம் தவிர்க்கப்படும்!

***


தமிழக அரசுக்கு அக்கறையில்லை!

அ.பூங்கோதை, செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், 1987 அக்டோபர், 14ல், உலகமே வியக்க வைத்த சம்பவம் நடந்தது. அங்கு, 22 அடி ஆழம், 8 அங்குலம் அகலம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 3 வயது சிறுமி, ஜெசிகா தவறி விழுந்தாள்; 58 மணி நேரம் போராடி அவளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அந்த பெண்ணுக்கு, தற்போது, 33 வயதாகிறது. அதன் பின், அமெரிக்காவில், 30 ஆண்டுகளாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது. இதற்கு, அங்கு வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கின்றனர்.

ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம், 10 ஆண்டுகளில் தமிழகத்தில், 12 முறை நிகழ்ந்துள்ளது. அந்த வரிசையில், 13வது சம்பவமாக, திருச்சி மாவட்டம், மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டியில், 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளான். ஆழ்துளை கிணறு சம்பந்தமாக, 2010 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் கடுமையான ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணை வெளியான பின், இந்தியாவில், 10 ஆண்டுகளில், 70 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில், ௨௦௧௪ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அனுமதியின்றி கிணறு தோண்டுவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதி அளித்தோர், அதை கண்காணிக்க தவறி விட்டனர். மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில், ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அனுவலர், தாசில்தார், கலெக்டர் என எந்த அதிகாரியும் அக்கறை செலுத்தவில்லை. இதனால், உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

ஆழ்துளை கிணறு அமைத்த நிலத்தின் உரிமையாளர்களையே உயிரிழப்புகளுக்கும், மீட்பு பணிக்கான செலவுகளுக்கும் பொறுப்பேற்க செய்ய வேண்டும். அப்போது தான், இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டம், இந்தியாவிலும் உருவாக்கப்பட்டால், மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X