பொது செய்தி

தமிழ்நாடு

விரிவாக்கம்! திருத்தணி அரசு மருத்துவமனை ரூ.5.16 கோடியில்... அதிநவீன வசதிகளுடன் இம்மாதம் திறக்க வாய்ப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

 திருத்தணி : திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, 5.16 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதலாக ஓர் அடுக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. கூடுதல் படுக்கைகள், ஆய்வகங்கள், ரத்த சேமிப்பு வங்கி மற்றும் புற்றுநோய் பிரிவு ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம், இம்மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது என, மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். உள்நோயாளிகளாக, 129 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் பிரசவ வார்டும் உள்ளது.இதுதவிர, திருத்தணி வருவாய் கோட்டத்தில் நடக்கும் விபத்துகளில் சிக்கியோருக்கு, இந்த மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு, ரத்தப் பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மற்றும் சி.டி., ஸ்கேன் போன்றவையும் பார்க்கப்படுகிறது.
ஆனால், நோயாளி வருகைக்கு ஏற்ப, மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை.குறிப்பாக, கூடுதல் படுக்கை வசதி, ஆய்வகம், பரிசோதனை கூடங்கள் ஆகியவை இல்லாததால், நோயாளிகள், திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.இந்நிலையில், 2018ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்ட, தேசிய சுகாதார திட்டத்தில், 5.16 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியது.

இந்த நிதியில், அரசு மருத்துவமனையில் தரைத் தளம், முதல் தளம் என, கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.மேலும், சென்னை சுகாதாரம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் குருநாதன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் தயாளன் உள்ளிட்டோர், கட்டடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். கடந்தாண்டு, மே மாதம், புதிய கட்டடம் கட்டும் பணியில், பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர்.முதற்கட்டமாக, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழுதடைந்த கட்டடத்தை, ஜே.சி.பி., இயந்திரத்தால் இடித்து, பணிகள் துவங்கப்பட்டன.

இப்பணிகள், துரித வேகத்தில் நடந்து முடிந்து, திறக்க தயார் நிலையில் உள்ளது. இது குறித்து, திருத்தணி மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி அரசு மருத்துவமனையில், 5.16 கோடி ரூபாயில், 30 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளம் மற்றும் முதல் அடுக்கு கட்டடம், கட்டி முடிக்கப்பட்டுள்ளது.தற்போது, மின்கம்பிகள், மின் விளக்குகள் அமைக்கும் பணிகளும் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகளை, அடுத்த வாரத்திற்குள் முடிந்து, கட்டடத்தை, ஒப்பந்ததாரர் எங்களிடம் ஒப்படைப்பார்.

இக்கட்டடத்தில், ஆண், பெண் புறநோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், ரத்த வங்கி, தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை மையம், புற்றுப்பிரிவு உட்பட பல்வேறு பரிசோதனை மையங்கள் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.புதிய கட்டடத்தால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு, இட பிரச்னை இனி இருக்காது.கட்டடம் தயார் நிலையில் உள்ளது குறித்து, மாவட்ட சுகாதார துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, இம்மாதம் இறுதிக்குள் கூடுதல் மருத்துவ கட்டடம் திறந்து, நோயாளிகள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X