தென்பெண்ணையாறு வழக்கு தமிழகம் பதில் அளிக்க 2 வாரம் அவகாசம்

Added : ஜன 10, 2020
Advertisement

தென்பெண்ணை நதி நீர் பங்கீட்டு வழக்கில், கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க, தமிழகத்துக்கு, உச்ச நீதிமன்றம், இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக, 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.இந்நிலையில், தமிழகத்தின் எல்லையை ஒட்டி, கர்நாடகா பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான, மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு, 2012ல் அணை கட்ட துவங்கியது. இதற்கு தடை கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு, தென்பெண்ணையாறு நதி நீர் பகிர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தது.அதில், 'தென்பெண்ணையாறு தமிழகத்திலும் ஓடுவதால், அதற்கு, கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது; மாநிலங்கள் இடையிலான நதிநீர் விவகாரங்கள் சட்டத்தின் கீழ், நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தீர்ப்பாயம் அமைக்கப்படும் வரை, தென்பெண்ணையாறு பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்' என. கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் 'தமிழகத்தில் ஓடும் தென்பெண்ணையாறு தண்ணீரை, கர்நாடகா எந்த விதத்திலும் பயன்படுத்த வில்லை. மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் பணி, 80 சதவீதம் முடிந்து விட்டது.'இப்போது, இடைக்கால தடை விதித்தால், ஈடு செய்ய முடியாத இழப்பை கர்நாடகா சந்திக்கும். தமிழக அரசின் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நேற்று நீதிபதிகள் உதய் உமேஷ் லலித், வினித் சாரநாத் ஜோர்னத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கர்நாடக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய, தமிழகத்துக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கினர். விசாரணை, பிப்., 14க்கு தள்ளி வைக்கப்பட்டது
- நமது நிருபர் - .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X