பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்து விட்ட பொறுப்பின்மை

Added : ஜன 11, 2020
Advertisement

காலையில் கண் விழித்ததும், நாம் செய்யும் முதல் வேலை, மொபைல் போனை எடுத்துப் பார்ப்பது. மொபைல் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான், எழுந்திருக்கிறோம்.'வாட்ஸ் -ஆப், முகநுால், ஆன் - லைன் செய்தி சேனல்கள்' என்று, எல்லா சமூக ஊடகங்களிலும், பல வகையான கருத்துக்களை, பலரும் பகிர்வதை பார்க்கிறோம்; படிக்கிறோம்; கேட்கிறோம்.

அப்படி படிப்பதால், அதனடிப்படையில் நமக்குள், அபிப்ராயம் உருவாகி விடுகிறது.இந்தக் கருத்தை யார் சொல்லி இருக்கின்றனர்; குறிப்பிட்ட விஷயத்தில் அவர் நிபுணத்துவம் பெற்றவரா; அதைப் பற்றிய அறிவு அவருக்கு இருக்குமா என்று, எந்த கேள்வியையும் நாம் கேட்பதில்லை. வெறுமனே படித்து, அதன் அடிப்படையில், ஒரு கருத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். அது தான், நம் கருத்தும் என்றாகி விடுகிறது.அதன்பிறகு, குறிப்பிட்ட துறையில் படித்து, பயிற்சி பெற்று, பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஒருவர், அதே விஷயம் பற்றி கூறும் எதையும், நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை.

காரணம், குறிப்பிட்ட விஷயத்திற்குச் சம்பந்தமோ, தொடர்போ இல்லாதவர், முதலில் சொல்லும் கருத்து, நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுவதால், சரியான கருத்தை வேறு ஒருவர் சொன்னாலும், மனம் ஏற்பதில்லை.சபை நாகரீகம்பொது வெளியில் பேசும் போது, சபை நாகரிகம் இருக்கிறது. சமுதாயத்தில், குறிப்பிட்ட துறை, சாதனையாளர்கள் இருவர் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், தனிப்பட்ட முறையில், அவர்களுக்குள் ஒருமையில் பேசிக் கொள்வர். அதே நபர்கள், பொது இடங்களில், சபை நாகரிகத்தை மனதில் வைத்து, ஒருமையில் பேச மாட்டார்கள்.

மரியாதையாகவே, ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வர்.இந்த சபை நாகரிகம், எழுத்து, பேச்சு நாகரிகம் குறைந்து கொண்டே வந்து, பொது வெளியில், தகாத வார்த்தைகளை எல்லாம் சகஜமாக பேசும் அளவிற்கு ஆரம்பித்து விட்டது.இப்படி பேசும் வார்த்தைகளை, நாம் செய்திகளில் படிக்கிறோம்; இது, சரியான வெளிப்பாடு இல்லை என்பது, நமக்கு தெரியும். ஆனால், அதைப் படிக்கும், 10ம் வகுப்பு பையனுக்கோ, பிளஸ் 2 மாணவிக்கோ, அப்படியே மனதில் பதியும்; அவர்கள் பேச்சில், அதே கெட்ட வார்த்தை வெளிப்படும்.அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், போலீஸ்காரர்கள், பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் என்று, பொது வெளியில் இருக்கும் யாரையுமே, மரியாதை கொடுத்துப் பேசுவதில்லை.

எல்லாரையும் அவமரியாதையாக பேசுவது, எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவரையும் மரியாதை இல்லாமல் பேசுவது, தவறு என்றே புரியாத அளவிற்கு, சாதாரணமாகி விட்டது.நடிகர்களை குறிப்பிடுவதைப் பற்றி சொல்லவே வேண்டாம்... நடிகர் வருகிறார் என்றால், அவரைப் பார்க்க, ஊரே திரண்டு நிற்கும்; ஆனால், அவன், இவன் என்று தான் நடிகரைப் பேசுவர். இந்த அவல நிலை தற்போது, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் வந்து விட்டது.நிபுணத்துவம்பத்திரிகைகளையே எடுத்துக் கொள்வோம். பத்திரிகை நிருபர்களுக்கு என்று, சில அடிப்படை தகுதிகள் உண்டு.

செய்தி சேகரித்து எழுதும் போது, அரசியல் பற்றி ஒருவர் எழுதுவார்; சினிமா பற்றி இன்னொருவர் எழுதுவார்.சினிமா எழுதுபவர், அரசியல் பற்றி எழுத மாட்டார். காரணம், அவர் அரசியல் செய்திகள், கட்டுரைகள் எழுதுவதில் பயிற்சியோ, அனுபவமோ பெற்றிருக்க மாட்டார். அரசியல் சாசனம், வரலாறு அவருக்கு தெரியாது.பத்திரிகை நாகரிகத்தை மனதில் வைத்து, தெரியாத விஷயத்தைப் பற்றி எழுத மாட்டார்கள். காரணம், தாங்கள் எழுதுவதை மக்கள் படிப்பர்; இதன்அடிப்படையில் அவர்களுக்கு, கருத்து ஏற்படும் என்ற பொறுப்புணர்வு இது.

ஆனால், ஒரு செய்தியை, கட்டுரையை அல்லது ஊடகத்தில் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசுபவர், குறிப்பிட்ட விஷயத்தை படித்து, அனுபவ ரீதியிலும் அறிவு பெற்றவர், இதைப் பற்றி பேச தகுதியானவர் என்ற நிலை மாறி, எந்த விஷயத்தையும், யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை வந்து விட்டது.பேசும் விஷயத்தைப் பற்றிய பார்வையோ, புரிதலோ இல்லாதவர்கள் பேசுவதால், எல்லை கடந்த பேச்சுக்கள் மலிந்து விட்டன.சமீபத்தில் நடக்கும் சம்பவங்களையே எடுத்துக் கொள்வோம். குடியுரிமை திருத்த சட்டம் - சி.ஏ.ஏ., பற்றி பலரும் கருத்து சொல்வதைக் கேட்கிறோம்.

இது ஏதோ, புதிதாகக் கொண்டு வரப்பட்டதாக பலர் நினைக்கின்றனர். சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மசோதா நிறைவேறி இருப்பதே தெரியாமல், கருத்துக்களை வெளியிடுகின்றனர். அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களுக்கு, அரசியல் சாசனம் படித்த, அதில் முழுமையான அறிவு பெற்ற, ஒரு வல்லுனரிடம் கருத்து கேட்டு, அதனடிப்படையில் எழுத வேண்டும்; கருத்து சொல்ல அவரை அழைக்க வேண்டும்.குறுகிய மனப்பான்மையுடன், தன்னுடைய சுய, விருப்பு, வெறுப்பை சேர்த்து, புரிதலே இல்லாமல் கருத்து சொல்வதால், சமுதாயத்தில், பல குழப்பங்கள், தேவையில்லா பிரச்னைகள், வன்முறைகள் ஏற்படுகின்றன.

யார் சொல்வது சரி, யார் கருத்தின் அடிப்படையில் அபிப்ராயம் வளர்த்துக் கொள்ளலாம் என்ற வரையரையே இல்லாமல் போய்விட்டது. ஆயிரம் அபிப்பிராயங்கள் வருவதால், எதன் அடிப்படை யில் நம் கருத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நியதி இல்லாமல் போய்விட்டது. தலைவலி வந்தால், ரோட்டோரத்தில் தைலம் விற்பவரிடம் போய், மாத்திரை வாங்கி சாப்பிட மாட்டோம். தகுதியான டாக்டரை அணுகி, மருத்துவ ஆலோசனை பெறுவோம்.அதுபோல், சமுதாய, அரசியல் விஷயங்களில், அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை அணுகி தெளிவு பெற வேண்டும்.

அதற்காக, படித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களிடம் கருத்து கேட்க வேண்டுமே தவிர, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று, அபிப்ராயத்தை வளர்த்துக் கொள்வதுஆபத்தானது.பகிர்வதற்கு முன்...மொபைல் போனில் வரும் செய்தியை முழுக்க படிக்காமல், என்ன தகவல் என்றே தெரியாமல், உடனே பகிர்ந்து கொள்வதால், பல பிரச்னைகளை சந்தித்தவர்களும் உண்டு.ஒரு செய்தி, தகவல், கருத்தை பார்த்தால், உடனே, யார் இவர், எந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார், நிபுணத்துவம் பெற்றவரா, தனக்கு தொடர்புடைய விஷயத்தைப் பற்றி தான் பேசுகிறாரா என்று ஆலோசித்து, மற்றவர்களுக்கு இதனால் பலன் இருக்கும் என்றால் மட்டுமே பகிர வேண்டும்.

தேவையில்லாத கருத்துக்களை விட, பகிர்ந்து கொண்டதாலேயே பாதிப்புகள் வருகின்றன. அவசியம் இல்லாதவற்றை, முதலில் பார்த்தவர்கள் பகிராமல் இருந்திருந்தால், நாலு பேருடன் போயிருக்கும்.அநாகரிகமான வார்த்தைகள், சொற்கள், வெளிப்பாடுகள், அவமரியாதையான பேச்சு, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களை ஒருமையில் பேசுவது, இது மாதிரியான குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்ளவே கூடாது.இது போன்ற தகவல்களை பகிர்வதன் மூலம், தவறான கருத்தை மற்றவர்கள் மனதில் வளர்க்கிறோம்;

குறிப்பாக, இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது. ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் போது, சமுதாயம் பாதிப்படையும்; நாட்டின் வளர்ச்சி பாதிப்படையும்.நாட்டின் நலனை, பொது நலனை மனதில் வைத்து, ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X