மதுரை, மதுரை பாரதி உலா ரோட்டில் வீடு புகுந்து லாவண்யா,35, என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் குமரகுரு 42, மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த ரோட்டில் வசிப்பவர் குமரகுரு. லட்சுமிபுரத்தில் பாத்திர கடை வைத்துள்ளார். இவரது மனைவி லாவண்யா. இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜன.8 அதிகாலை வீட்டினுள் புகுந்த 2 பேர், லாவண்யாவை வெட்டிக்கொன்றனர். குமரகுருவின் தாயார் சீனியம்மாளையும் 60, வெட்டிவிட்டு தப்பினர். இவ்வழக்கில் குமரகுரு மூளையாக செயல்பட்டதை தொடர்ந்து அவரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:குமரகுரு 'செலவாளி' என்பதாலும், அவரது நடவடிக்கைகள் சரியில்லாததாலும் 5 ஆண்டுகளுக்கு முன் தந்தை மாரியப்பன் சொத்தின் பாதியை மருமகள் லாவண்யா, பேரன், பேத்திக்கு எழுதி வைத்தார். அதிலிருந்து லாவண்யா, குமரகுரு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே மாரியப்பன் இறக்க, குடும்பத்தை கொலை செய்துவிட்டு மொத்த சொத்தையும் அபகரிக்க குமரகுரு திட்டமிட்டார்.ரூ.11 லட்சம் கூலி இதற்காக தனது கடையில் வேலை செய்த மேலுார் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை அணுகினார். அலெக்ஸ்பாண்டியனுக்கு ஏற்கனவே அறிமுகமான செல்வகுமாரிடம் தெரிவிக்க, கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக ரூ.11 லட்சம் கூலி பேசப்பட்டது. செல்வகுமார் மேலுார் பகுதியைச் சேர்ந்த சூர்யா 21, அவரது சகோதரர் மூக்கன் 22, மூலம் கொலையை அரங்கேற்ற கடந்த டிச.24ல் நாள் குறிக்கப்பட்டது.டிச.24ல் கொலை முயற்சி அன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு லாவண்யா சென்ற போது அங்கு அவரை வெட்டினர். இதில் அவருக்கு கை, தொடையில் காயம் ஏற்பட்டது. 'நகைபறிப்பு திருடன்களாக இருக்கும்' எனக்கூறி அவரை போலீசில் புகார் கொடுக்காமல் குமரகுரு பார்த்துக்கொண்டார். வெட்ட முயன்றவர்களுக்கு ரூ.30 ஆயிரம் கூலி கொடுத்தார்.இதன்பிறகு வீட்டிலேயே 'காரியத்தை' முடிக்க திட்டமிட்ட குமரகுரு ஜன.7 நாள் குறித்தார். இதற்காக கொலையாளிகளுக்கு ரூ.ஒரு லட்சம் 'அட்வான்ஸ்' தந்துள்ளார். அன்றிரவு 2:30 மணி வரை ஹாலில் இருந்த சீனியம்மாள் துாங்கவில்லை. அவரை துாங்குமாறு குமர குரு சத்தம்போட, சிறிது நேரத்தில் சீனியம்மாள் துாங்கினார். இதன்பிறகு மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய கொலையாளிகளை அழைத்துள்ளார். இதற்காக மெயின் கேட்டையும் திறந்து வைத்தார்.நாடகமாடிய குமரகுருஜன.8 அதிகாலை 4:00 மணிக்கு சூர்யா, மூக்கன், அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் மாடியில் படுத்திருந்த லாவண்யாவை வெட்டிக்கொன்றனர். அருகில் இருந்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அலறியவாறு கீழ்தளத்திற்கு தப்பி ஓடிவந்து சீனியம்மாளிடம் தெரிவித்தனர். அவர் மாடிக்கு சென்றபோது அலெக்ஸ்பாண்டியன் கத்தியால் சீனியம்மாள் கழுத்தில் வெட்டினார். பின்னர் கொலையாளிகள் தப்பிச்சென்ற பின், அறையில் இருந்து வெளியே வந்த குமரகுரு, எதுவும் தெரியாதது போல் நாடகமாடி அழுதுள்ளார். எங்கள் 'விசாரணையில்' கொலைக்கு நான்தான் காரணம் என ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து கொலையாளிகள் 4 பேரையும் கைது செய்தோம் என்றனர்.போலீசிடமே 'டீலிங்'கொலையாளிகள் போலீசில் சரணடைய முடிவு செய்தனர். இதற்காக போலீசை அணுகிய சிலர், 'குமரகுரு தர ஒப்புக்கொண்ட ரூ.11 லட்சத்தில் ரூ.10 லட்சம் தரவேண்டியுள்ளது. அதை வாங்கித்தந்தால் கொலையாளிகள் சரணடைந்து விடுவார்கள். அந்த தொகை வழக்கு செலவுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பயன்படும்' என தெரிவித்துள்ளனர். இந்த 'டீலிங்' ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க, தனிப்படை மூலம் கொலையாளிகளை தேடி கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். உதவிகமிஷனர் காட்வின் ஜெகதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் மலைச்சாமியை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE