வீழ்ச்சி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புளி விளைச்சல்:குத்தகை எடுத்தவர்கள் தொடர் நஷ்டம் | Dinamalar

தமிழ்நாடு

வீழ்ச்சி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புளி விளைச்சல்:குத்தகை எடுத்தவர்கள் தொடர் நஷ்டம்

Added : ஜன 11, 2020

தியாகதுருகம்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவிய வறட்சியால் புளிய மரங்களில் விளைச்சல் குறைந்து குத்தகை எடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளின் ஓரம் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் உள்ளன. கடும் வறட்சியை தாக்குப் பிடித்து நிழல் தரும் புளிய மரங்கள் பல ஆண்டுகள் வரை பயன் தரக்கூடியது.உளுந்துார்பேட்டை - சேலம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் போது ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் வேரோடு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

அதேபோன்று பலத்த காற்று, சமூக விரோதிகளால் தீ வைப்பு போன்ற காரணங்களால் ஏராளமான புளிய மரங்கள் விழுந்து விட்டன.புளியமரங்களில் விளையும் புளிக்கு எப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது. சாலையோர புளிய மரங்கள் நெடுஞ்சாலைத் துறை மூலம் புளி மகசூல் அறுவடை செய்ய குத்தகை விடப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நுாற்றுக்கணக்கான புளிய மரங்கள் ஆண்டுதோறும் அந்தந்த துறை மூலம் குத்தகை விடப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது.இதனால் மரங்களில் மகசூல் குறைந்தது.

புளிய மரங்கள் ஜூன் மாதம் பூக்கத் தொடங்கும். இத்தருணத்தில் கடந்தாண்டு கடும் வறட்சி நிலவியதால் மரங்களில் எதிர்பார்த்த அளவு காய்கள் காய்க்கவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் மழை பெய்த போதும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பின்றி போனது. தற்போது மாவட்டத்தில் சாலைகளின் ஓரம் உள்ள பெரும்பாலான புளிய மரங்களில் காய்கள் இன்றி தழைகள் மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது.

அதேபோல் சில இடங்களில் 80 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களில் காய்ப்புத் திறன் குறைந்து போனது. குறைந்த அளவில் காய்த்து தொங்கும் காய்களையும் குரங்குகள் கடித்து பதம் பார்த்து வருகிறது.இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் குத்தகை எடுத்தவர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X