சொன்னபடி கேட்காத சங்கத்துக்காரன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னபடி கேட்காத சங்கத்துக்காரன்

Added : ஜன 11, 2020

பேரன்பு கொண்ட தாய்மார்களே, பெருமதிப்புக்குரிய சான்றோர்களே, எட்டுத்திக்கும் இருந்து வந்து, என் உரையை கேட்க காத்திருக்கும் அன்பு இளவல்களே, உங்கள் அனைவருக்கும், இந்த தீப்பொறி திருமுகத்தின் முரட்டு வணக்கங்கள்!நித்தமும் நெஞ்சைத் துளைக்கும் சொல்லம்புகளையும், நஞ்சை கக்கும் நல் அரவங்களையும், கடந்து வந்துதான், இந்த மேடையிலே நின்று கொண்டிருக்கிறான், இந்த திருமுகம்.நேரா மேட்டருக்கு வருகிறேன்....பஸ் ஓடுகிறது; 'பந்த்' என்கிறான். கட்டாயம் பஸ் ஓடும்னு தெரியும். ஆனாலும், பந்த் நடத்துவோம்னு சொல்றான். ஏப்பா, புள்ளைங்க, பொம்பளைங்க, நம்பி பஸ்சுல போலாமா, வேண்டாமா, கரெக்டா சொல்ல வேண்டாமா?நீ சொல்றத உன் சங்கத்துக்காரனே கேட்க மாட்டேங்குறான். அப்புறம் என்ன சங்கம், அப்படின்னா உன் கோரிக்கை எல்லாம் தப்புன்னு தானே அர்த்தம்? இதை நாம சொன்னா, நம்மள பைத்தியக்காரன்னு சொல்வான். இது ஒரு முக்கியமான பிரச்னை.ஒரு காலத்துல எழுத்தாளர்னும், கவிஞர்னும் ஊருக்கு ஒருத்தர் ரெண்டு பேர்தான் இருப்பாங்க. இப்ப கொஞ்ச நெலமை மாறிடுச்சு. அம்பானி புண்ணியத்துல, வீட்டுக்கு ரெண்டு பேர், மூணு பேர் கவிஞர்களாவும், எழுத்தாளர்களாவும், ஏன் பாடகர்களாக்கூட வளந்துட்டாங்க.ஊருக்குள்ள குண்டூசி விக்குறவன்லாம் தொழிலதிபர் ஆயிட்டான்னு, கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரு. அந்த மாதிரி, இப்ப, மொபைல் போன் வெச்சுருக்கிற எல்லோரும், கவிஞர், எழுத்தாளர், பாடகரா அவதாரம் எடுத்துட்டாங்க.இப்படி ஊருக்குள்ள எல்லாப்பயலும் பாட ஆரம்பிச்சுட்டா, அப்புறம் உண்மையாவே பாட்டுப்பாடுறவனுக்கும், கதை, கட்டுரை, கவிதை எழுதுறவனுக்கும் என்னய்யா மரியாதை? இது ரெண்டாவது பிரச்னை.இதைச்சொன்னா, 'ஒரு நாளைக்கு ஒன்றரை 'ஜிபி' டேட்டாவ வெச்சுட்டு, அவங்களும் என்னதான் பண்ணுவாங்க தலைவரேன்னு' நம்ம கட்சிக்காரனே கேக்குறான்.சரி, நம்ம அடுத்த பிரச்னைக்கு போவோம். இந்த வைகுண்ட ஏகாதசி வந்துச்சு பாருங்க. அன்னிக்கு கோவிலுக்குப் போனாக்கூட, நம்மாளுங்க, செல்பி எடுத்து தள்ளுறாங்க.சொர்க்கவாசல் திறந்து, பெருமாள் வெளியில வர்றாரு, பூராப்பயலும் மொபைல் போனோட தயாரா இருக்கான். 'கோவிந்தா'ன்னு கோஷம் போடுற வேலையெல்லாம் அஞ்சாரு பெருசுங்கதான் பாக்குது. பெருமாளுக்கே எப்பேர்ப்பட்ட சோதனை பாருங்க!கோவிலுக்குள்ளே மொபைல் போன கொண்டு போகக்கூடாதுன்னு, உத்தரவு போட்டாத்தான் என்ன தப்புன்னு தெரியலை.அப்புறம் ஒரு முக்கியமான பிரச்னை. 'யூடியூப் பாத்து கள்ள நோட்டு அடிச்ச பெண் கைது'ன்னு பத்திரிகையில நியூஸ் வருது. அதைப்பாத்துட்டு, 'இந்த யூடியூப் பாத்து, சமையல் பண்ற பொம்பளைங்களை எல்லாம் அரெஸ்ட் பண்ண மாட்டீங்களா' அப்படின்னு ஒருத்தன் கேட்குறான். பாவம், அவம் பிரச்னைதானே, அவனுக்கு பெரும் பிரச்னை!நாட்டுல எந்த மாதிரியான பிரச்னை எல்லாம் இருக்குது, எப்படியெல்லாம் அப்பாவி குடிமக்கள் பாதிக்கப்படுறாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்குறதுக்கு, இது எல்லாம் ஒரு சாம்பிள்.அப்புறம் இந்த பொங்கல் பரிசு கொடுக்குற வேலையெல்லாம், ரேஷன் கடைகள்ள ஜம்முனு நடந்துகிட்டு இருக்குது. நீங்கபாட்டுக்கு, ஆயிரம் ரூபா கெடைச்சுதா, கரும்பும், சர்க்கரையும் வாங்குனமான்னு வந்து சேராம, ரேஷன் கடைக்காரன்கிட்ட, 'நல்ல கரும்பா குடுய்யா'ன்னு வம்பிழுக்காதீங்க... அவனே கோந்தாழைக்குத்தான் ரேட்டு பேசி வாங்கி வெச்சுருக்கான்.ஆகவே, தை பிறந்தால் வழி பிறக்கும்ங்கற தமிழ்க்குடி மக்களின் தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, 'தை பிறக்கட்டும்; கூடவே நாட்டுக்கு நல்ல வழியும் பிறக்கட்டும்' என்று வாழ்த்துக்கூறி, விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.(தீப்பொறி இன்னும் பறக்கும்)

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X