இந்தியா

கவர்னர் கிரண்பேடி மீது ஐகோர்ட்டில் வழக்கு ★ முதல்வர் நாராயணசாமி தகவல்

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என, அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் காங்., ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுமக்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச அரிசியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். சமீபத்தில் மத்திய குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். கடிதமாக கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்ட குடிமைப் பொருள் துறை அமைச்சர், மாநில அரசு விரும்பினால் அரிசி கொடுக்கலாம் என்றார்.

ஆனால், அதற்கான கோப்பை, கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்திவிட்டார்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை முடக்கும் வேலையை கிரண்பேடி தொடர்ந்து செய்து வருகிறார். அரிசி வழங்குவதில் முறைகேடு இருந்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

பக்கத்து மாநிலங்களில் அரிசி வழங்கும்போது புதுச்சேரியில் மட்டும் தடுக்க, கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.நியமனம் செய்யப் பட்ட கவர்னர் கிரண்பேடியால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் திட்டங்களை நிறுத்த அதிகாரம் இல்லை. அவர், தொடர்ந்து இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கலாம் என மத்திய குடிமைப்பொருள் துறை அனுமதி கொடுக்கிறது. மத்திய உள்துறை பணமாக வழங்க வேண்டும் என்கிறது. இப்படி மத்திய அரசு இரண்டு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறது. உள்துறையின் உத்தரவை சுட்டிக்காட்டி கவர்னரும் இலவச அரிசி வழங்குவதை தடுக்கிறார்.

அரிசிக்கு பதிலாக பணம் வழங்க நடவடிக்கை எடுத்த கிரண்பேடியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கும் ஏற்று கொள்ளப்பட்டு, அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமனத்தில் கவர்னர் தன்னிச்சையாக விதியை போட்டு, ஆணையர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். புதுச்சேரி சட்டசபையில் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, மாநில அரசால் புதிய ஆணையர் நியமிக்கப்பட்டு பணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து கடிதம் பெற்று, மீண்டும் தேர்தல் ஆணையர் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு. அரசியலமைப்பு மீறி கிரண்பேடி எப்படி செயல்பட முடியும்?

அதிகார துஷ்பிரயோகத்தின் கடைசி எல்லை.மாநில தேர்தல் ஆணையரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்தது. அவரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை.இதை எதிர்த்து உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கவர்னருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனவேலு மீது மேலிடத்தில் புகார்

ஆளும் காங்., கட்சியை சேர்ந்த பாகூர்எம்.எல்.ஏ., தனவேலு, ஆளும் அரசை விமர்சித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்திற்கு, பல்வேறு பிரிவுகளில் மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. இந்நிலையில், காங்., அரசின் செயல்பாட்டை பற்றி தனவேலு எம்.எல்.ஏ., எங்களுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அவரைப் பற்றி கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X