இன்று உறுப்பினர்கள் ஏலம்! ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல்:அதிக தொகை தருவோருக்கே ஆதரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று உறுப்பினர்கள் ஏலம்! ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல்:அதிக தொகை தருவோருக்கே ஆதரவு

Added : ஜன 11, 2020
Share

அன்னுார்:ஊராட்சியில் பல முறை உறுப்பினராக இருந்தவர், பல சாதனைகள் செய்தவர் என்பதற்கு மரியாதை இல்லாமல், யார் அதிக தொகை தருகிறார் எனப் பார்க்கும் நிலை, ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் உருவாகியுள்ளது.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களும், 228 ஊராட்சிகள் உள்ளன. இதில், கோவை வடக்கு புறநகர் மாவட்டத்தில், ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் காரமடை, பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியங்களில் அ.தி.மு.க., மெஜாரிட்டி பெற்றுள்ளது.ரூ.25 லட்சம் வரைமற்ற ஒன்றியங்களில், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் பதவிகளுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பேரம் பேசப்படுகிறது. அதிகபட்சமாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 25 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுகின்றனர். அன்னுார் ஒன்றியத்தில் 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.இத்துடன், அன்னுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஏழு, பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஒன்பது, காரமடை ஒன்றியத்தில், 17, சூலுார் ஒன்றியத்தில், 17, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 20 என, 91 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், 91 ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இதற்கு உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பேரம் நடக்கிறது.மூன்று முறை வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் நடக்க துவங்கியதிலிருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில், பணம் விளையாடி உள்ளது. ஊராட்சி தலைவர் பதவிக்கு ஓட்டுக்கு, 200 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கொடுத்துள்ளனர். குவாட்டர், சிக்கன், அரிசி சிப்பம் என, வாரி வழங்கியுள்ளனர். மூன்று முறை உறுப்பினராக இருந்தவர்கள், சேவை மனப்பான்மை உள்ளவர்கள் பலர் இந்த தேர்தலில் காணாமல் போய் விட்டனர். இந்நிலையில், இன்று நடக்கவுள்ள ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் விலை பேசி முடித்துள்ளனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு, 30 லட்சம் ரூபாய் செலவழித்து வரும் தலைவர் நேர்மையாக இருப்பார் என, எப்படி எதிர்பார்ப்பது. துணை தலைவர் பதவியை பிடிக்க வார்டு உறுப்பினர்களுக்கு, தலா ஒன்றரை லட்சம் என, ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து பதவிக்கு வரும் துணை தலைவர் எப்படி நேர்மையாக பணிபுரிவார்.இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் சாதாரண மனிதர்கள் ஊராட்சி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதற்கு தீர்வு கிராம சபை கூட்டங்கள் தான்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கேள்வி கேட்க வேண்டும்!வரும், 26ம் தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில் முந்தைய கால கட்ட வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். எந்த பணியாக இருந்தாலும் கிராம சபையில் ஒப்புதல் பெற செய்ய வேண்டும். பணிகளை மக்கள் கண்காணித்து கேள்வி கேட்க வேண்டும். அனைத்து பணிகளும் நடக்கும் இடத்தில் பணி விவர பலகை வைக்கப்பட வேண்டும். பணிகள் குறித்து கண்காணிக்க மக்கள் குழு அமைக்கப்பட வேண்டும்.இவற்றை செயல்படுத்தினால், ஊராட்சி நிர்வாகம் நேர்மையாக நடக்கும். முறைகேடு செய்ய முடியாது என, உணர்ந்தால் ஓட்டுக்கு பணம் தருவது நின்று போகும். மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்திற்கு வந்து கேள்வி கேட்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X