ஈரோடு: ஊரக உள்ளாட்சியில் தலைவர், துணை தலைவர் தேர்வில் போட்டி ஏற்பட்டால், அம்புக்குறி இட்ட முத்திரையை, ஓட்டுச்சீட்டில் பதிவு செய்து தேர்வு செய்யப்படுவர்.
இதுபற்றி, தேர்தல் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறை விபரம்: மாவட்ட பஞ்., மற்றும் யூனியன் தலைவர், துணை தலைவர், பஞ்., துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்பம் தரப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இரு கவுன்சிலர்கள் முன் மொழிந்து கையெழுத்திட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். போட்டி ஏற்பட்டால், தேர்தல் நடக்கும். தேர்தல் நடத்த, மொத்த கவுன்சிலர்களில் பாதிப்பேர் வந்திருக்க வேண்டும். வருகை குறைவாக இருந்தால், 30 நிமிடங்கள் காத்திருக்கலாம். அப்போதும் பாதி எண்ணிக்கை வரவில்லையேல் தேர்தல் ஒத்தி வைக்கப்படும். தேர்தல் நடத்த முடிவானால், போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் அச்சிட்டு, ஓட்டு சீட்டு தயாரிக்கப்படும். அச்சீட்டின் முன், பின்புறம் தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திடுவார். ஓட்டுச்சீட்டில் வேட்பாளர் பெயருக்கு நேராக உள்ள கட்டத்தில் குறியிட இடம் இருக்கும். வாக்களிக்கும் மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும், அம்பு குறியிட்ட ரப்பர் முத்திரையில் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையில் குறியிட்டாலும், அந்த ஓட்டு செல்லாது. அனைத்து கவுன்சிலரும் ஓட்டுப்போட்ட உடன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஓட்டை எண்ணி முடிவு அறிவிப்பார்.
இரு வேட்பாளர்களும் சமமான ஓட்டு பெற்றால், குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்வர். வேட்பாளர்கள் எண்ணிக்கை, மூன்றாக இருந்தால், மொத்த ஓட்டில் பாதி எண்ணிக்கைக்கு மேல் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். மூவரில் ஒருவர் கூட பாதிக்கு மேல் ஓட்டு பெறாவிட்டால், குறைவான ஓட்டு பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார். மீதி இரு வேட்பாளர்களுக்கு இடையே, தேர்தல் நடத்தி, அதில், பாதி எண்ணிக்கைக்கு அதிகமாக பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில், பாதி எண்ணிக்கைக்கு மேல் ஓட்டுகளை ஒரு வேட்பாளர் பெறும் வரை தேர்தல் நடைமுறை தொடர்ந்து நடத்தப்படும். இதே முறையில் துணைத்தலைவர் தேர்தலும் நடக்கும். பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலில், இரு வேட்பாளர்கள் சமமான ஓட்டை பெற்றால், தலைவர் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். இந்த நடைமுறை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE