சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தே.மு.தி.க.,வை 'கழற்றி' விட அ.தி.மு.க., திட்டம்?

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 தே.மு.தி.க.,வை 'கழற்றி' விட அ.தி.மு.க., திட்டம்?

''பத்து வருஷமா, ஒரே இடத்துல பெஞ்ச் தேய்ச்சவங்களால, எதையும் கணிக்க முடியலைங்க...'' என, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ்ல, எல்லாரும், 10 வருஷங்களுக்கும் மேலா, ஒரே இடத்துல வேலை பார்க்கிறாங்க... இவங்களால பல ரகசிய தகவல்களை திரட்ட முடியலைங்க..

''திருப்பூர்ல, வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பனியன் தொழிலாளர்களா வேலை பார்க்கிறாங்க... இவங்கள்ல பலருக்கு குற்ற பின்னணி இருக்குதுங்க...

''அதுலயும், வங்க தேசத்துக்காரங்க பலர், மேற்கு வங்கம் வழியா வந்து, போலி அடையாள அட்டைகளை தயாரிச்சு, இந்தியர்கள் போர்வையில திருப்பூருக்கு வந்துடுறாங்க... இவங்களை எல்லாம், நுண்ணறிவு போலீசாரால துல்லியமா கண்டறிய முடியலைங்க...

''அதனால, இந்தப் பிரிவுல எல்லா போலீசாரையும் கூண்டோடு மாத்திட்டு, இளமையும், துடிப்புமா இருக்கிற போலீசாரை, இந்தப் பிரிவுல நியமிக்கணும்னு, போலீஸ் தரப்புலயே பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''மோசடி பேர்வழிகளை காப்பாத்திண்டே இருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், குப்பண்ணா.

''எங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழக மின் வாரியத்துல, தேசிய, மாநில விளையாட்டு வீரர்களுக்கு வேலை தரா... பத்து, இருபது வருஷங்களுக்கு முன்னால, விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டுல, வேலைக்குச் சேர்ந்த சிலர், போலி சான்றிதழ்களை குடுத்து இருக்கா ஓய்...

''இது தொடர்பா பல புகார்கள், வாரிய உயரதிகாரிகளுக்கு போயிடுத்து... அவாளும், விளையாட்டு பிரிவுல வேலைக்கு சேர்ந்தவாளோட சான்றுகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும்படி, பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கார்... அவாளோ, தப்பு செஞ்சவாளை காப்பாத்தற விதமா, சான்றிதழ் சரிபார்ப்பை தள்ளி போட்டுண்டே போறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி தான் இருக்குன்னு சொல்லியிருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், அன்வர்பாய்.

''ஏதாவது பார்சல் கம்பெனி விவகாரமாங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.

''முழுசா கேளுங்க... சமீபத்துல முடிஞ்ச உள்ளாட்சித் தேர்தல்ல, ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வை விட, தி.மு.க., அதிக இடங்கள்ல ஜெயிச்சிருக்கே...

''இது சம்பந்தமா, அ.தி.மு.க., தலைமை, மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன், கட்சி அலுவலகத்துல ஆலோசனை நடத்துச்சு பா...

''அதுல பங்கேற்ற நிர்வாகிகள் சிலர், 'நம்ம கூட்டணியில, பா.ம.க.,வால, சமுதாய ஓட்டுகள் கிடைக்குது... அந்தக் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும், ஓடியாடி வேலையும் பார்க்கிறாங்க... ஆனா, தே.மு.தி.க., தலைமையில இருந்து கிளை வரைக்கும், நமக்கு எந்த பயனும் இல்லை... அவங்களுக்கு ஒதுக்குன இடங்கள்லயும் நாமே போட்டியிட்டிருக்கலாம்'னு சொல்லியிருக்காங்க...

''இருந்தாலும், 'கூட்டணி விஷயத்துல எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவு எடுக்க முடியாது'ன்னு மூத்த அமைச்சர் ஒருத்தர் சொல்லி, பிரச்னையை இப்போதைக்கு முடிச்சு வச்சிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.

பெரியவர்கள் கிளம்ப, வேறு சிலர் பெஞ்சில் அமர்ந்தனர்.


கவுன்சிலர்களுக்கு கச்சிதமாக, 'கட்டிங்' தந்த நேரு!


''அடம் பிடிச்சு அதிகாரியை மாத்தியும், தேர்தல்ல முட்டை தான் வாங்கியிருக்காங்க...'' என, சுவையான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல, பொது சொத்துகள் சேதம், கொலை மிரட்டல் புகார்ல, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது, இன்ஸ்பெக்டர் அம்மாதுரைன்னு ஒருத்தர், எப்.ஐ.ஆர்., போட்டாருங்க... கொதிச்சு போன ஆளுங்கட்சி நிர்வாகிகள், 'இன்ஸ்பெக்டரை உடனே மாத்தலைன்னா, தேர்தல் வேலை பார்க்க மாட்டோம்'னு அமைச்சர் வேலுமணி வரைக்கும் போய் புலம்பியிருக்காங்க...

''வேற வழியில்லாம, இன்ஸ்பெக்டரை சேலத்துக்கு மாத்திட்டாங்க... இவ்வளவு பண்ணியும், உள்ளாட்சி தேர்தல்ல ஏனோதானோன்னு வேலை பார்த்ததால, குன்னூர் ஒன்றியத்துல இருக்கிற எட்டு கவுன்சிலர் பதவிகள்ல, ஒண்ணை கூட, அ.தி.மு.க., ஜெயிக்கலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''உதவித் தொகையை மட்டும் வாங்கிட்டு, தனியார் மருத்துவமனைக்கு பறந்துடுதாவ வே...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழகத்துல இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல, நிறைய பிரசவங்கள் நடக்கணும்... ஏழைகளுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கணும்னு, சுகாதார துறை உத்தரவு போட்டிருக்கு வே...

''இதுக்காகவே, பல ஆரம்ப சுகாதார நிலையங்களை, நவீன வசதிகளோட மேம்படுத்திட்டு இருக்காவ... இருந்தாலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகள்ல, குழந்தைகள் பிறப்பு குறைஞ்சிட்டு இருக்கிறதா கணக்கெடுப்புல தெரிஞ்சிருக்கு வே...

''விசாரிச்சா, கர்ப்பிணிகள், அரசு வழங்குற மகப்பேறு உதவித்தொகையை மட்டும் வாங்கிடுதாவ... ஆனா, பிரசவத்துக்கு, கரெக்டா, தனியார் மருத்துவமனைகள்ல போய் சேர்ந்துடுதாங்கன்னு தெரியவந்திருக்கு...

''ஆனாலும், 'ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல, பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்'னு, சுகாதார துறை அறிவுறுத்தியிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''கவுன்சிலர்கள் எல்லாம், மாவட்டச் செயலர் புகழ் பாடிட்டு இருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.

''எந்தக் கட்சியில வே ...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருச்சி மாவட்டத்துல நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, மாவட்ட பஞ்., தலைவர் பதவி, 14 யூனியன் சேர்மன் பதவிகளை பிடிக்கிற அளவுக்கு, தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி கிடைச்சது...

''சேர்மன் பதவிக்கு நின்னவங்களுக்கு, மாவட்டச் செயலர் நேரு ஓர் உத்தரவு போட்டிருக்கார்... அதாவது, 'ஒன்றிய கவுன்சிலர்களா ஜெயிச்ச, தி.மு.க.,வினர், தி.மு.க.,வுக்கு ஆதரவா ஓட்டு போடுற சுயேச்சை கவுன்சிலர்களுக்கு, தலா, 2ல இருந்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும் குடுத்துடுங்க'ன்னு, சொல்லிட்டாராம் பா...

''சேர்மன் பதவிக்கு நின்னவங்களும், இந்த தொகையை குடுத்துட்டாங்க... தன் கட்சிக்கு ஓட்டுப் போட, லட்சக்கணக்குல பணம் வாங்கி குடுத்த நேருவை, சுயேச்சை கவுன்சிலர்கள் வாயார பாராட்டிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

அரட்டை முடிய, பெஞ்ச் மவுனமானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜன-202006:42:22 IST Report Abuse
Siva நீலகிரி மாவட்டத்தில் திமுக ஜெயிக்க பணம் தான் பிரதானம் என்பது ஊருக்கே தெரியும்... 2ஜி பணம் நீலகிரி எம்பி யிடம் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X