பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 11, 2020
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'எந்தப் பட்டியலில் வைத்தாலும், படிக்க வேண்டியது மாணவர்கள் தானே...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் பேச்சு:நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள், கல்வியை, மாநில பட்டியலில் வைத்தனர். அதனால், நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும் என நம்பினர். அதை மாற்றி, பொதுப்பட்டியலுக்கு மாற்றினார், முன்னாள் பிரதமர் இந்திரா. எனினும், கல்வி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

'உங்கள் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி அமையும் போது, வாலை விட்டு தும்பை பிடியுங்கள்...' என, கிண்டலாக கூற தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: கருணாநிதி, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், தமிழகத்தில், 'நீட்' தேர்வை, மத்திய அரசால் நடத்தி இருக்க முடியுமா... இன்று, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், மத்திய அரசுக்கு சலாம் போடுபவர்கள். எனினும், நீட் விண்ணப்பதற்கான கடைசி நாளில், உச்ச நீதிமன்றம் சென்று தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். தும்பை விட்டு, வாலைப் பிடிப்பதா?

'தாக்குதலில் ஈடுபட்டது யார் என, ஸ்டாலினுக்கு அரசல் புரசலாக தெரிந்ததால் தான், சத்தம் காட்டாமல் இருக்கிறார்...' என, உண்மையை சொல்ல வைக்கும் வகையில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் பேட்டி: களியக்காவிளை சோதனை சாவடியில், எஸ்.ஐ., வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது, தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதுாக்க முயற்சிப்பது போல உள்ளது. அதை ஒடுக்க வேண்டும். இந்த துணிகரம் குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

'நீங்கள் சொல்வது, ஸ்டாலின் சகோதரர் அழகிரியை பற்றித் தானே...' என, போட்டுக் கொடுக்க தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் பேச்சு: தி.மு.க.,வில், 'நானும் என் மகனும் மட்டும் தான்' என்ற ரீதியில் குடும்ப கட்சியாகவே இருக்கிறது. அந்த கட்சித் தலைவர், தன் சகோதரர் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவர். ஆனால், சமூகத்தைப் பற்றி கவலைப்படுவது போல, பிற நாட்டு முஸ்லிம்கள் குறித்து கவலைப்படுகிறார்.

'இதை கவனித்துக் கொள்ள, அறநிலையத் துறை உள்ளது. நீங்கள், வழக்கம் போல, இலங்கைத் தமிழர் பற்றி, கழுத்து நரம்பு புடைக்க பேசுங்கள்; இதில் தலையிட வேண்டாம்...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தஞ்சை கோவிலில், பிப்ரவரி, 5ல் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதை, முழுக்க தமிழ் முறைப்படி தான் நடத்த வேண்டும். தேவாரம், திருவாசகத்தை பாடியே, குடமுழுக்கு செய்ய வேண்டும். கல்வெட்டுகள், சிற்பங்களுக்குள் இடைச்செருகல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

'இது தான், உலகம் அறிந்த உண்மையாயிற்றே; 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்பது, கம்யூ., கட்சிகளுக்குத் தான் பொருத்தம்' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நடந்த தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மத்திய அரசின் தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

'இப்ப தான், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்கள் இருக்கையில் போய் அமர்ந்துள்ளனர்; அதற்குள் அவர்களுக்குள், 'இடி'யை இறக்குகிறீர்களே...' என, 'லந்து' பண்ணும் வகையில், காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் அறிக்கை: மஹாத்மா காந்தி, அண்ணாதுரை, காமராஜர் விரும்பியபடி, தமிழகத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் மது விற்பனை, மது குடிப்பது போன்ற தீய பழக்கங்களுக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

'உங்கள் அமைப்பின் செயல்பாட்டை கண்டித்து, வேறு யாரும் பேசியதை, 'ரிபீட்' செய்கிறீர்களா...' என, மடக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: பாசிசம், காலித்தனம் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை. மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, முகமூடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், பாடம் புகட்ட மக்கள் தவற மாட்டார்கள். இது, வரலாற்று உண்மை.

'ஆனால், அவர் மட்டும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினைப் பார்த்து, பேசலாம், சிரிக்கலாம், அடுத்த வியூகம் வகுக்கலாமா...' என, நெத்தியடி கொடுக்கும் வகையில், அ.ம.மு.க., பொருளாளர் வெற்றிவேல் பேட்டி: ஜெ., மீது பொய் வழக்குகள் போட்டு, அவரை சிறைக்கு அனுப்பியது, தி.மு.க., அவர் இறப்பிற்கும், அந்த கட்சி தான் காரணம். அதனால், எங்கள் கட்சியின் அதிருப்தியாளர்கள், தி.மு.க.,வுக்கு செல்வதை, பொதுச் செயலர் தினகரன் விரும்புவதில்லை. அதனால் தான் பலர், அ.தி.மு.க.,வுக்கு செல்கின்றனர்.

'இதை விட, பிறக்கும் போதே, நான் அரசியல்வாதி தான் என, அடுத்த பேட்டியில் கூறினாலும் கூறுவீர்கள் போலிருக்கிறதே...' என, சொல்ல வைக்கும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசனின், சிரிப்பு வரவழைக்கும் பேட்டி: நான் இப்போது தான் அரசியலுக்கு வந்தேன் என, கூறுவது சரியில்லை. ஹே ராம் என்ற படத்தை நான் எடுத்த போதே, அரசியலுக்கு வந்தது மாதிரி தான். அது போன்ற படத்தை, இப்போதைய காலக்கட்டத்தில் எடுக்க முடியாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X