சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

பத்திரிகை செய்தி: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை, 2012ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவதுாறாக பேசியதாக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு, கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

'டவுட்' தனபாலு: இதுபோல, மேலும் பல வழக்குகள், விஜயகாந்த் மீது உள்ளதால், அந்த வழக்குகளையும், தமிழக அரசு வாபஸ் பெறும் என்ற நம்பிக்கை, தே.மு.தி.க.,வுக்கு உள்ளது. அதனால் தான், உள்ளாட்சி தேர்தலில், குறைந்த இடங்களை, அ.தி.மு.க., ஒதுக்கிய போதும், சத்தம் காட்டாமல் இருந்ததாகவும், கட்சி வட்டாரங்களில், 'டவுட்' நிலவுகிறது. தே.மு.தி.க., தான், உண்மையை சொல்ல வேண்டும்!

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு: தமிழக முதல்வர் இ.பி.எஸ்., சாணயக்கியத்தனத்துடன் செயல்படுகிறார். எங்கள் அரசு மீது எந்த புகாரும் கூற முடியாத வகையில், அருமையாக ஆட்சி செய்கிறார். அதனால், பொய் பிரசாரங்களை, தி.மு.க., கட்டவிழ்த்து விடுகிறது. இதனால், வெளியே புலி போலவும், சட்டசபையில் எலியாகவும், அக்கட்சி செயல்படுகிறது.

'டவுட்' தனபாலு: உங்களின் எதிரி கட்சியான, தி.மு.க.,வை சாடும் போது, முன்யோசனையுடன், முதல்வர் இ.பி.எஸ்.,சை வானளாவ புகழ்வதால், முதல்வர் உங்கள் மீது, 'சாப்ட் கார்னர்' கொள்வார் என்பது, உங்களின் பேச்சில், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதற்காக, தி.மு.க.,வை எலி போல மாறி விட்டது என கூறுவது, புலி வேஷம் போடும் அக்கட்சியினருக்கு, டவுட்டே இல்லாமல் கோபத்தை ஏற்படுத்துமே!

தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம்: எனக்கு அளிக்கப்பட்டு வந்த, மத்திய படை பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளதில், எந்த உள்நோக்கமும் இல்லை. தேவையில்லை என, மத்திய உள்துறை கருதியதால், விலக்கி கொள்ளப்பட்டது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் மாநிலமாக, தமிழகம் தொடரும்.

'டவுட்' தனபாலு: உங்களுக்கு மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை என்பது, இப்போது தான், மத்திய அரசுக்கு தெரிந்ததோ என்பது, முதல், 'டவுட்!' உங்களுடன் சேர்த்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், அதை எதிர்க்க முடியாமல், தி.மு.க.,வினரை அமைதி காக்க, மத்திய அரசு வைத்து விட்டதோ என்பது, இரண்டாவது டவுட்டாக உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு, மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கும், சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு, 2019 நவம்பரில், மத்திய அரசு திரும்பப் பெற்றது. இது, அப்பட்டமான, பாரபட்ச நடவடிக்கை.

'டவுட்' தனபாலு: 'ஆதரவாளர்களில் ஒருவரை, ரயில் மீது கத்தியை வீசச் செய்து, அதன் மூலம், 'இஸட் பிளஸ்' பாதுகாப்பை, ஸ்டாலின் பெற்றார்' என, அ.தி.மு.க., பேச்சாளர்கள் கூறுகின்றனர். சரி, அது எப்படியோ போகட்டும். ராகுல், பிரியங்காவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால், அவர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் வராததால், ஸ்டாலினுக்கு கண்டிப்பாக வராது என்ற எண்ணத்தில் மத்திய அரசு நீக்கியிருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஏதோ கூடினோம்; கலைந்தோம் என, தமிழக சட்டசபை முடிவடைந்திருக்கிறது. மாநில மக்களின் நலன்களைக் காக்கவும், உரிமைகளை மீட்கவும், சட்டங்களையும், திட்டங்களையும் வகுக்க வேண்டிய சட்டசபையை, ஆளும் தரப்பினரின் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திடும் போக்கே தொடர்கிறது.

'டவுட்' தனபாலு: நான்கே நாட்கள் நடந்த, சட்டசபையில், மூன்று நாட்களும், உங்கள் கட்சி வெளிநடப்பு செய்தது. அமைச்சர்கள் பதில் கூறினால், 'பொதுக்கூட்டத்தில் பேசுவது போல நீளமாக பேசுகின்றனர்' என, உங்கள் கட்சியினர் புகார் கூறினர். அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்காத நிலையில், மக்கள் நலன் திட்டங்களை தீட்ட முடியுமா என்ற, 'டவுட்' எழுகிறதே; பதில் சொல்லுங்க!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தர்மபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு, இரு ஆசிரியர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும், இந்த தீயச் செயல்களுக்கு, உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் பலாத்கார குற்றங்கள், நடுநிலையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக, அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் மட்டும் குரல் கொடுத்தால் போதாது. அரசியல் கட்சிகளும் கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் உணர்வு, 'டவுட்' இல்லாமல் வெளிப்படுத்துகிறது. ஆனால், பிற கட்சித் தலைவர்களின் மவுனம், அவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை இல்லையோ என்ற, 'டவுட்'டையும் ஏற்படுத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜன-202005:56:41 IST Report Abuse
D.Ambujavalli பன்னீரை நாசுக்காக ஓரம் கட்ட வேண்டும் நீங்க மட்டுமில்லை, பாருங்க, எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பையும் திரும்பப் பெற்றிருக்கிறோமென்று அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டி, ஆட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டார் முதல்வர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X