சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஜெ.,வின் பேச்சை அ.தி.மு.க., வினர் கேட்கலை!

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (3)
Advertisement
ஜெ.,வின் பேச்சை அ.தி.மு.க., வினர் கேட்கலை!

என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தே.மு.தி.க., - பா.ம.க., வை கூட்டணியிலிருந்து கழற்றி, தனித்துப் போட்டியிட்டு, சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும், அமோக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!
வேட்டி கட்டிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு வராத துணிச்சல், சேலை கட்டிய ஜெயலலிதாவுக்கு வந்தது, உண்மையிலேயே பாராட்ட வேண்டும். 'குறைவான இடங்களை ஒதுக்கி, அ.தி.மு.க., எங்களை அசிங்கப் படுத்தி விட்டது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறி இருக்கிறார். இது போதாது என்று, தன் பங்கிற்கு, 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து நின்று இருந்தால், அதிக இடங்களில் அமோகமாக வெற்றி பெற்று இருக்கும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் ஆதரித்த, அ.தி.மு.க.,வுக்கு, இப்படிப்பட்ட விமர்சனம் தேவை தான். கூட்டணியில் இருந்தபடியே, இவ்வளவு கேவலமாக பா.ஜ.,வினர், இழிவாக விமர்சனம் செய்தாலும், அ.தி.மு.க., தலைவர்களுக்கு, ஞானோதயம் எல்லாம் வருமா என்பது, சந்தேகம் தான். தமிழக தேர்தலில், 'நோட்டா'வை விட குறைவான ஓட்டுக்கள் பெற்று, போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம், டிபாசிட்டை பறிகொடுத்த கட்சி என்ற பெருமை உடையது, பா.ஜ., தான். தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், அதை வெற்றிகரமான தோல்வி என்போர், தமிழக பா.ஜ., தலைவர்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், 'எவ்வளவு அடிச்சாலும், நாங்கள் தாங்குவோம்' என, அ.தி.மு.க., தலைமை, மத்தியில் ஆளும் பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர்கின்றனர்.

'பா.ஜ.,வுடன், இனி எந்த ஜென்மத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்று சொன்னது, எவ்வளவு நியாயமானது என்பது, இப்போது அ.தி.மு.க., வினருக்கு விளங்கவில்லையே!


மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு 'ராயல் சல்யூட்!'


அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனி நாடாக, வங்கதேசம் உருவான போது, அங்கு ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட சில லட்சம் பேர், இந்திய மாநிலமாக, அசாமில் அகதிகளாக நுழைந்தனர். இன்று வரை, அந்த மாநில மக்களுக்கு இது, மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. வேலை வாய்ப்பு முதல், பல வகைகளில், மாநில மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு, அகதிகளால் பிரச்னை நிலவி வருகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளின், சிறுபான்மை மதத்தினர்கள் மட்டும் அல்ல; இஸ்லாமியர் கூட, திருட்டுத்தனமாக, நம் நாட்டிற்குள் வந்தபடியே உள்ளனர். உலகளவில், அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. எப்படி, நாட்டில் மறைந்து வாழும் சட்ட விரோத கும்பலை அடையாளம் காண்பது... நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட, தொடர் குண்டு வெடிப்பு உயிர் பலிகள், பொருட்செலவுகள், நஷ்டங்கள் சொல்லி மாளாது.

இலங்கையில் இருந்து, தமிழகம் வந்தோரை, அங்கு மீண்டும் வாழ வைக்க உதவ வேண்டும். அதை தான், இலங்கை அகதிகளும் விரும்புகின்றனர். அவர்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கினால், அவர்கள் அங்கு குடியுரிமை இழந்து விடுவர். பின், எப்போதும் அங்கு செல்ல முடியாது.

இன்று, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும், தி.மு.க., மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த போது மவுனமாக இருந்தனர். இப்போது, இலங்கை அகதிகளுக்கு குரல் கொடுப்பதை, எந்த ஒரு உண்மையான இலங்கை தமிழனும் விரும்ப மாட்டான்.

'இஸ்லாமியர் அனைவருக்கும் எதிரானது, குடியுரிமை திருத்த சட்டம்' எனக் கூறி, குடும்பத்துடன் வீதியில் நிற்க வைத்து, போராட்டம் நடத்த துாண்டுகின்றனர். இப்படி செய்வது, நிச்சயம் மிகப்பெரிய பிரிவினையை நம்மிடையே உருவாக்கி விடும். நாட்டை, 65 ஆண்டுகள், காங்கிரஸ் ஆட்சி செய்தது. மத்தியில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தும், மாநிலத்தில் தனியே ஆட்சி செய்தோர், தி.மு.க., வினர்.

அப்போது, எல்லாம் செய்ய துணிவில்லாமல் இருந்த, குடியுரிமை திருத்த மசோதாவை, சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதற்கு, 'ராயல் சல்யூட்' தான் அடிக்க வேண்டும்!


வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக நாத்திவாதிகளா?


சி.இரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து மதத்துவேஷத்தில் திளைத்திருக்கும், தி.மு.க. கூட்டணிக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக வாக்காளப் பெருமக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். தி.மு.க.,வின் சார்பில் போட்டியிட்ட, 2,100 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட குழு உறுப்பினர்களாக, 243 பேரும் தேர்வாகி உள்ளனர்.

சமீப காலமாக, தமிழகத்தில் ஹிந்து -சனாதன எதிர்ப்பு விவகாரத்திலும், ஹிந்து கடவுள்களையும், மதக் கோட்பாடுகளையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த சர்ச்சைகளில், தி.மு.க. தலைவர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் பெருவாரியாக பேசப்படுகின்றனர். இந்த நிலையிலும், தி.மு.க.,விற்கு அளிக்கப்பட்டுள்ள, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியின் சூட்சுமம் என்னவென்று புரியாமல் இருப்பது, வேடிக்கையாக உள்ளது. அதை, தங்கள் நாத்திக வாத கொள்கைகளுக்கு ஆதரவு என எண்ணி, மேலும் ஹிந்து மதத்துவேஷத்தில் ஈடுபடக் கூடாது. மத விவகாரங்களில், சற்று அடக்கி வாசிக்க, தி.மு.க., தலைவர்கள் பழகி கொள்ள வேண்டும்.

ஹிந்து -சனாதன தர்மமும், அதன் மக்களும், சகிப்புத்தன்மையும் பொறுமையும் உடையோர். ஆனால், இவர்களின் பொறுமையை மேன்மேலும் சோதனைக்கு ஆட்படுத்தாது, தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வாரே யானால், அவர்களின் எதிர்காலமும் சீர்பட வழிபிறக்கும். சதா சர்வ காலமும், ஹிந்து கோவில்களிலும், விழாக்களிலும் மக்கள் கூட்டம் இன்றும் அலைமோதுகிறது. அவர்களின் மனதில் துளிர் விட்டுத் தழைத்திருக்கும் பக்தி மார்க்கம், முதிர்ச்சியை காட்டுகிறது. ஆனால், கடவுள் மறுப்பு கொள்கைகளில் திளைத்திருக்கும், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, இவ்வளவு பெரிய வெற்றி கனிகளை தந்துள்ள, தமிழக வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக நாத்திவாதிகளா... அதுவும் கிடையாதே!


திருக்குறளை வளர்த்த லட்சணம் இப்படி தானா!


எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, திராவிடர் கழகம் சார்பில், மாநாடு நடத்தப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏராளமானோர், ஈ.வெ.ரா., வின், பேச்சைக் கேட்கக் குழுமி இருந்தனர். மேடைக்கு வந்த, ஈ.வெ.ரா., கூடியிருந்த பெண்களை பார்த்து, 'உங்கள்ல பத்தினிகள் எல்லாம் கை துாக்குங்கள்' என்றார். கூடியிருந்த அனைவரும் கைகளை துாக்கினர். அடுத்து,- 'உங்கள்ல யாராவது எழுந்து போய், மழை வரச் செய்யுங்கள் பார்க்கலாம்' என்றார். எந்தப் பெண்ணும், துணிந்து எழுந்து, மழையை வர வைக்க முடியவில்லை. தலையை குனிந்தவாறு, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிப்புடன் பெண்கள் அமர்ந்து இருந்தனர்.

அப்போது, ஈ.வெ.ரா., தொடர்ந்து, 'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' ன்னு, அந்த தாடிக்கார கிழவன் திருவள்ளுவன் எப்படி சொல்லி இருப்பான். இதைப் போய், அறநெறி அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு திரியறானுவ. இதை மனுஷன் படிப்பானா' என, போட்டு, தாக்கு தாக்கென்று, தாக்கி பேசி இருக்கிறார்.

திருக்குறள் மாநாட்டை நடத்தி, திருவள்ளுவரை புகழ்ந்து, திருக்குறளை மக்கள் மத்தியில், ஈ.வெ.ரா., கொண்டு சென்ற லட்சணம் இது தான்... இத்தருணத்தில், 'திருக்குறள் மற்றும் தமிழர் நெறி விளக்க மாநாட்டை நடத்தி, வீடுகளின் பரண் மீதும், புலவர்கள் மத்தியிலும் இருந்த திருக்குறளை, மக்கள் மத்தியிலும், ஈ.வெ.ரா., கொண்டு சென்றார்' என, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன் கூறி உள்ளார். 'தட்டி கேட்க ஆளில்லா விட்டால், தம்பி சண்டப் பிரசன்னன் ஆவான்' என, தமிழில் ஒரு சொலவடை உண்டு.

மக்கள் ஞாபக மறதி மீதும், இந்த விபரமெல்லாம் யாருக்கு நினைவில் இருக்கப் போகிறது என்ற ஆணவமும், திராவிடர் கழகத்திற்கும், அதன் வழித் தோன்றலான, தி.மு.க.,விற்கும், எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தால், இது போன்ற 'புருடா'க்களை, கூச்ச நாச்சமின்றி அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பர்!


'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு யாரால் நஷ்டம்?


சுப்ர.அனந்தராமன், சின்னகாஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 1997ல் இருந்தே மத்திய அரசு, 'ஏர் - இந்தியா' மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் நேரடியான ஊழியர் நியமனங்களுக்கு தடை விதித்து, அது, இன்னமும் அமலில் உள்ளது. பின், 2007ல், 'ஏர் இந்தியா'வையும், 'இன்டியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தையும், அன்று, ஆட்சி செய்த ஐ.மு., கூட்டணி அரசு, ஒன்றிணைத்தது; அதற்கு, 'ஏர் இந்தியா' என, பெயரிட்டது.

'நஷ்டத்துக்கு ஒரு பெரிய காரணம் இது' என நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதைய, 'ஏர் - இந்தியா'வின் மேனேஜிங் டைரக்டரும், இதை ஒப்புக் கொள்கிறார். தற்போது, 3,000 பணியாளர்களுக்கு மேல், தற்காலிக அடிப்படையில், மிகக் குறைந்த தொகுப்பு ஊதியத்திலேயே பணியில் இருக்கின்றனர். பெருமளவு நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். பணியில் இருக்கும் குறைந்த அளவு நிரந்தரப் பணியாளர்கள், மிகக் கடினமாக உழைக்கின்றனர். அவர்களுக்கு, மாதாந்திர ஊதியமும் சரிவரக் கொடுப்பது இல்லை.

'ஏர் - இந்தியா' இயக்கும் விமானங்கள், 2007ல் தான் வாங்கப்பட்டன; நல்ல, 'கண்டிஷனில்' தான் இருக்கின்றன. பின், நஷ்டத்துக்கு என்ன காரணம்? கடந்த, 2007ல் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேல், புதிதாக, 111 விமானங்கள் வாங்க, 'ஆர்டர்' செய்தார். இந்த ஆணையை அவர், தன்னிச்சையாக, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றினார். பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த விமானங்களை வாங்குவதென்றால், முதலில், 'ஏர் - இந்தியா'வின் இயக்குனர்கள் குழுமம், அரசின் ஒப்புதலைக் கோர வேண்டும்.

எந்தவிதமான உடன்படிக்கையோ, முதல் குறிப்போ, 'புரோடோகாலோ' இன்றி, இந்த விமானங்கள் வாங்கும் ஆர்டர்களை, பிரபுல் படேல் பிறப்பித்தார். இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான விமானங்களை வாங்க, 'ஏர் - இந்தியா' பெரும் அளவு திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு, கடன் வாங்கி உள்ளது. அதற்கான வட்டி, கோடிக்கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது. இப்படி தான், 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் நஷ்ட கணக்கு துவங்கியது.

இந்த நஷ்டங்கள், அலை அலையாகப் பெருகி, இன்று பிரம்மாண்டமான அளவு வளர்ந்திருக்கிறது. இன்னும் எத்தனையோ புதிய, 'நிரவ் மோடி'களும், 'விஜய் மல்லையா' க்களும் உருவாக, மத்திய ஆட்சியாளர்கள் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளனர். அன்று, முன்னாள் முதல்வர் சரத்பவாரும், முன்னாள் விமான போக்குவரத்து துறை பிரபுல் படேலும், ஒன்று சேர்ந்து, 'ஏர் - இந்தியா'விற்கு நஷ்ட கணக்கை துவக்கி வைத்தனர். இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏர் - இண்டியா இம்சையில் சிக்கி போராடுகிறார்!


புத்தாண்டு பரிசாக எதிர்பார்த்தது இதுவா!


அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 2020ல் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து, வாணவேடிக்கைகள், ஆலய வழிபாடுகள் என, நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த வேளையில், நள்ளிரவில், மத்திய அரசின் அறிவிப்பாக, ரயில் கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வெளியாகி உள்ளது. இரண்டும், நேரடியாக ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.

ஒரு காஸ் சிலிண்டருக்கு, 20 ரூபாய் ஏற்றி இருப்பது, குடும்ப பெண்களுக்கு பெரும் சுமையாக அமைந்து விட்டது. மத்திய, மாநில அரசுகள், ஏதோ வரி வசூல் செய்யும் ஏஜென்ட் போல செயல்படுகின்றன. நாடு முழுவதும், சில ஆண்டுகளாக விவசாயிகள், தொழிலதிபர்கள், நடுத்தர ஏழை எளியோர், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, வருவாயை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, மக்களை வஞ்சிக்கும், இதுபோன்ற வரிகளை விதிக்கக்கூடாது. ரயில் கட்டண உயர்விற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது மகன் அன்புமணிக்கு, பா.ஜ.,வின் தோழமை கட்சியான, அ.தி.மு.க.,வின் தயவால், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைத்துள்ளதற்கு, நன்றி தெரிவிப்பது போல, இது உள்ளது.

ரயில் கட்டணம், கி.மீ.,க்கு, 5 பைசா உயர்வுக்கு பயணியர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த ஏற்றம், இதே ஆமை வேகத்தில் இருக்காது; இன்னும் வேகம் எடுக்கும் என, பலர் அஞ்சுகின்றனர்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
13-ஜன-202008:49:22 IST Report Abuse
Siva மட்டமான சாய டீ ஒரு கிளாஸ் 10 ரூ...200 கி.மீ. பயணம் செய்ய10ரூ அதிகரித்தால் என்ன செய்வது....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜன-202010:25:05 IST Report Abuse
D.Ambujavalli வரிச்சலுகைகள், லட்சம் கோடிக்கணக்கில் வங்கிக் கடன்கள் என்று கர்ண மஹாப்ரபுவாக கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்கி விட்டு மாத சம்பளம், தொகுப்பு சம்பளம், அன்றாடக்கூலி, கரடாய்ப்போன நிலத்துடன், தண்ணீருக்குப் போராடி உயிரை விடும் விவசாயி போன்றோரின் கழுத்தை நெறிக்கும் ரயில் கட்டண உயர்வு, எரிவாயு விலையேற்றம் என்று சுமத்தி, தங்களுக்கு நிதியளிப்போருக்கு நன்றியைக் காட்ட ஏழைகளை வதைப்போர், அந்த ஏழைகளின் வாக்குகள்தான் தங்களை பதவியில் அமர்த்தியுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜன-202007:27:29 IST Report Abuse
Loganathan Kuttuva ஒரு காஸ் சிலிண்டர் ஒரு மாதத்திற்கு ஆகும் செலவில் இருபது ரூபாய் அதிகரித்து இருப்பது பெரிய தொகை அல்ல.மேலும் பேருந்து போக்குவரத்து கட்டணம் ரயில் கட்டணத்தை விட மிக அதிகம். பேருந்துகளில் சீசன் டிக்கெட்டும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X