கட்டுரையாளர், இ.பொன்னுசாமி, தமிழகத்தின் சிதம்பரம் லோக்சபா தனித் தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1999 - 2001 வரை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசில், பெட்ரோலியத் துறை இணைஅமைச்சராக இருந்துள்ளார்.அதன்பின், இரண்டு முறை, அந்த தொகுதியின், பா.ம.க., - எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த இரண்டாண்டுகளாக, பா.ஜ.,வில் உள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், நாட்டுக்கு மிகவும் அவசியம் என, இந்த கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
மாணவர் சக்தி, மஹா சக்தி; ஆக்கவும், அழிக்கவும் செய்யும். என் முன், கடவுள் தோன்றி, 'உனக்கு ஒரே ஒரு வரம் தான் தருவேன்' என்றால், 'மீண்டும் கல்லுாரி மாணவனாக பிறக்க வேண்டும்' என கேட்பேன். அப்படிப்பட்ட அற்புதமான பருவம், கல்லுாரி மாணவ பருவம்.மாணவர் சக்தியை சரியான முறையில், திறமையாக பயன்படுத்தும் தலைமையில்லை. அதனால், எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாணவர்கள் உள்ளனர். எந்த நிலையிலும் மனம் தளராமல், எதையும் எதிர்பார்க்காமல், எதற்கும் அஞ்சாமல் செயல்படும் இப்பருவம், இருமுனை கொண்ட கத்தி போன்றது; கவனமாக கையாளப்பட வேண்டும்.உணர்ச்சிபூர்வமாக செயல்படும் நிலை தோன்றுவதால் தான், மாணவ இளைஞர் சக்தி, வீணான வழிகளில் திருப்பி விடப்படுகிறது.
தங்களின் சுயநலத்திற்காக அவர்களை, பகடைக்காய்களாக பயன்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் பழக்கம், நம் அரசியல் தலைவர்களிடம் உள்ளது.இதை, டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பார்க்க முடிகிறது; தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் காண முடிகிறது.குறிப்பாக, தமிழக அரசியல்வாதிகள், மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான வழிகளில் திசை திருப்பி, தங்களை வளப்படுத்திக் கொள்வதில் வல்லவர்கள். எளிதில் தீப்பற்றும் கற்பூரம் போன்ற மாணவர்களை பயன்படுத்தி, ஆட்சி கட்டிலை பிடித்தவர்கள், நம் திராவிட கட்சித் தலைவர்கள்.அதுபோல, கல்லுாரி மாணவர்களின் கண்களை கட்டி, அவர்களை தடம் மாற வைத்து, முன்னேற்றத்தை கெடுத்து, தங்களுக்கு ஆதரவாக, 'வாழ்க' கோஷமிடவும், எதிராளிகளுக்கு எதிராக, 'ஒழிக' கோஷமிடவும், திராவிட கட்சிகள், மாணவர்களை பயன்படுத்தி வருவது கண்கூடு.இளைஞர்களை சீரழிக்கும் விதமாக, மதுபான கடைகளை திறந்து விட்டு, அவர்களுக்கு மதுவை பழக்கி விட்டதும், நம், 'தலைவர்கள்' தான்.
லஞ்சம், ஊழலில் திளைத்து, தமிழகத்தை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்து வருவதும் இவர்களே!'இது, பெரியார் மண், சிறியார் மண்...' என, வசனம் பேசும் இவர்கள், இந்த மண், இந்திய மண், எல்லாருக்கும் சொந்தமான மண் என்பதை புரிந்து கொள்ளார். இவர்கள், பெரியார் எனக் கூறும், ஈ.வெ.ரா., ஜாதியை ஒழிக்க உழைத்தார் என்கின்றனர்; இல்லவே இல்லை. தமிழகத்தில் ஜாதிகளும், ஜாதி கொடுமைகளும் தான் அதிகமாயின.தீண்டாமை ஒழிக்க அவர் பாடுபட்டார் என்கின்றனர்; உண்மையிலேயே இல்லை. தமிழக கிராமங்களில் இன்னும் நிலைமை மாறவில்லை. மேலும், அவர், கடவுள் மறுப்பு போராட்டம் நடத்தினார் என்கின்றனர். கடவுள் பக்தி அதிகமாயிற்று. அந்த நபர், 'தமிழ், காட்டுமிராண்டி மொழி' என்றார்; யாராலும் ஒழிக்க முடியாது என்ற நிலைக்கு, தமிழ் வளர்ந்துள்ளதே!இதை இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
தேச பக்தியின்றி, குறுகிய மனப்பான்மையுடன் திராவிடம் என்ற இனவெறி, தமிழ் என்ற மொழிவெறியை துாண்டி, தமிழகம் முழுவதும், ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும், குறுநில மன்னர்கள் போல, அட்டூழியம் செய்யும் கட்சியினரை உருவாக்கியது தான், திராவிட தலைவர்கள், இந்த நாட்டுக்குத் தந்தவை.பழங்கதைகளை பேசி, தேசிய நீரோட்டத்தில் மாணவர்களை சேர விடாமல், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அவர்களை பலியாக்கி, நேர்மைத் திறனும், நெஞ்சில் உரமும் இல்லாமல், கோழைகளாகவும், சோம்பேறிகளாகவும், ஜாதி வெறியர்களாகவும் பெரும்பாலான தமிழக இளைஞர்களை உருவாக்கி விட்டனர், நம் திராவிடத் தலைவர்கள்.இளைஞர்களின் அறியாமையால், அறிவுச் சுடர்களாக திகழ வேண்டிய அற்புத மாணவர் சமுதாயம், நிர்கதியாக நிற்கிறது. இனிமேலாவது, இளைஞர்கள் மனம் மாற வேண்டும் என்பது தான், இந்த கட்டுரையின் நோக்கம்.அண்டை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, அனாதைகள் போல, வாழ வழியின்றி வாடும் ஹிந்துக்கள், பார்சிகள், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு, இந்தியாவில் குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத்தை, மத்திய அரசு, பார்லிமென்டில் திருத்தியுள்ளது.
இதனால், நம் நாட்டின் முஸ்லிம்களுக்கோ, பிற மதத்தினருக்கோ எந்த பாதிப்பும் இல்லை.மஹாத்மா காந்தி முதல், அன்றைய அசாம் முதல்வர், காங்கிரசை சேர்ந்த, தருண் கோகாய் வரை, இந்த சட்ட திருத்தத்தை விரும்பினர். முதல் பிரதமர் நேரு முதல், காங்., மன்மோகன் சிங் வரை ஆதரித்த சட்டத்தை தான், இன்றைய மத்திய அரசு பின்பற்றியுள்ளது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.இந்திய அரசியல் சட்டம், 130 கோடி மக்களுக்கும் பொதுவானது. ஜாதி-, மத வேறுபாடின்றி, ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி, பல மதங்களை சார்ந்த மக்கள் வாழும் இந்த நாடு, அனைவருக்குமான தேசமாக திகழ வேண்டும். நாட்டின் வளமும், நிலமும், அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்பட முனைவது, எப்படி தவறாகும்?அதுபோல தான், மத்திய அரசு அமல்படுத்த உள்ள, தேசிய குடிமக்கள் பதிவேடும்... ஊடுருவல்காரர்களை மட்டும் விலக்கி, இந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களை உள்ளடக்கி, நாட்டை வளம் பொருந்தியதாக உருவாக்க வேண்டும் என்ற புதிய திட்டமே, தேசிய குடிமக்கள் பதிவேடு.அதை கூட, நாடு முழுவதும் இப்போது அமல்படுத்த போவதில்லை; அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
ஆனாலும், எதை எடுத்தாலும் எதிர்ப்பு, எதற்கெடுத்தாலும் வசை என, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி கட்சிகள், நாட்டு மக்களை துாண்டி விட்டு, வேடிக்கை பார்ப்பது நியாயமே இல்லை.மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய கடமை. 2011 வரை எடுக்கப்பட்ட மக்கள்தொகை, 2021-ல் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது வழக்கமான நடைமுறை தான். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டை போராட்டக் களமாக மாற்றிய, எதிர்க்கட்சிகளின் முகமூடி விரைவில் விலகும்; அப்போது அவர்களால், மக்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியாத நிலை ஏற்படும்.தத்தம் கொள்கை, கோட்பாடுகளை, முறையான செயல் திட்டங்களை, மக்கள் முன் வைத்து, மக்கள் தரும் அதிகாரத்தால், ஆள வேண்டியவை, அரசியல் கட்சிகள். அதை விட்டு, ஒருவரை ஒருவர் குறை கூறி, குற்றம் சாட்டி, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை தவிர்த்து, அரசியல் மட்டுமே செய்து, தங்களை மட்டுமே வளப்படுத்தி கொண்டுள்ள திராவிட கட்சிகள், தமிழகத்தை நாசமாக்க துடிக்கின்றன.இவர்கள், நேற்று பிறந்தவர்கள் போல, புதிய வேஷமிட்டு, தாங்கள் செய்யும் திருட்டுத்தனத்தையும், அபகரித்த சொத்துக்களையும் பாதுகாத்து கொள்ளவே, மக்களையும், இளைஞர்களையும் திசை திருப்பி வருகின்றனர்.இவர்கள் தான், இலங்கை மக்களுக்கு இரட்டை குடியுரிமை கோருகின்றனர். மத்திய அரசிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த இவர்கள், இலங்கை தமிழர்களுக்கு முழு துரோகம் இழைத்து, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தனர்.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பிரச்னை போன்று, இலங்கையில் இல்லை. அவை, மதம் சார்ந்தவை; இவை இனம் சார்ந்தவை. இலங்கை வாழ் தமிழர்கள், தங்கள் நாட்டில் வாழ்வதையே பெருமையாக நினைக்கின்றனர். ஸ்
ரீமாவோ பண்டார நாயகா காலம் முதல் உள்ள, இரு நாடுகளுக்கான ஒப்பந்தப்படி, இதுவரை, 4.6 லட்சம் தமிழர்கள் அவர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்இன்னும், ஒரு லட்சம் பேர் மட்டுமே, இங்கு முகாம்களில் உள்ளனர்; அவர்களும் நாடு திரும்பவே நினைக்கின்றனர். அவர்கள் அங்கு நலமுடன் வாழ, ஆயிரக்கணக்கில் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ரயில் பாதைகளை அமைத்து, தொழில்களும், பிற வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம்.இவ்வாறு தொடர்ந்து செய்வோம். அவர்கள் சுயகவுரவத்துடன் வாழ்வதே, நாம் அவர்களுக்கு செய்யும் தேவையான செயல். இங்குள்ளவர்கள், தமிழ், தமிழன் என்று கூக்குரலிட்டு, மேலும் அவர்களை சிதைக்காமல் இருந்தாலே போதும்.
எனவே, இன்றைய மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தரா விட்டாலும், எதிர்க்காமல், இளைஞர்களை தவறான பாதைக்கு, தமிழக எதிர்க்கட்சிகள் திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.இளைஞர்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும், தி.மு.க., இளைஞர் நலனுக்காக, ஒரு சிறு துரும்பைக் கூட, கிழித்து போட்டதில்லை. கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் அந்த கட்சி, நினைத்திருந்தால், தமிழகத்தை தொழில் வளம் மிக்க மாநிலமாக மாற்றி இருக்க முடியும்.ஆனால், அக்கட்சியின் தலைவர்கள் மட்டும், கோடீஸ்வரர்களாக மாறி, இளைஞர்களை, பசியிலும், பட்டினியிலும் ஆழ்த்தியுள்ளனர். எனவே, இளைய சமுதாயத்தினர், இனிமேலாவது உண்மையை உணர வேண்டும். பகடைக்காய்களாக நினைக்கும், திராவிட கட்சிகளை புறம்தள்ள வேண்டும்.ஊழலை, லஞ்சத்தை உடைத்தெறிய வேண்டும்; ஜாதியை ஒழிக்க பாடுபட வேண்டும்; தீண்டாமையை தீயிட்டு கொளுத்த வேண்டும்; மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை துடைத்தெறிய வேண்டும்.இலவசங்களை ஒழித்து, மக்கள் சொந்த காலில் நிற்க, வழிவகை காண வேண்டும். கல்வியில் சீர்திருத்தம் காண வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க, பிராந்திய, -மொழி வெறி போன்ற குறுகிய சிந்தனைகளை தவிர்க்க வேண்டும்.மறைந்த அண்ணாதுரை, தனித்தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, தேசிய பற்றாளராக மாறியதை போல, அந்த மண், இந்த மண்,- அவர் மண்,- இவர் மண் என்று குதர்க்கம் பேசாமல், ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.சுவாமி விவேகானந்தர், பாரதி கண்ட தேசாபிமானத்தை செயலாக்கி,'இந்திய தேசம், நம் உடல்; அதன் மீதான பற்று, நம் உயிர்' என்று வாழ்ந்த, வாழும் உத்தமர்கள் வழிநடக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.மாணவ செல்வங்களே, எதிர்காலம் உங்களுடையது; இந்த தேசம் உங்களுடையது. இம்மக்களின் வாழ்வும், வளமும் உங்கள் கையில். நீங்கள் நினைத்தால், அது இமயமாகும். அழிவு பாதையை நிராகரித்து, ஆக்கப்பூர்வ வழிக்கு வாருங்கள். புதிய இந்தியாவை படைப்போம்!
இ.பொன்னுசாமி,
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தொடர்புக்கு:
மொபைல்: -94425 51100
இ -மெயில்: eponnuswamy@gmail.com