சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வீணானவற்றில் புதுபொருட்கள் தயாரிக்கலாம்!

Added : ஜன 11, 2020
Advertisement
வீணானவற்றில் புதுபொருட்கள் தயாரிக்கலாம்!

வீணாகும் பொருட்களில் இருந்து, வியத்தகு பொருட்களை உருவாக்குவதன் மூலம், மாற்றுத் திறனாளிகள் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும், சென்னை, மயிலாப்பூரில், 'ஏகாகிரதா' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் கவிதா நரசிம்மன்: தைத்து முடித்து, மிச்சமுள்ள பிட் துணிகள், வீட்டில் வீணாகும் தேங்காய் சிரட்டை, பயன்பாடு இல்லாத மரக்கட்டைகள் போன்ற, கைவிடப்பட்ட பொருட்களை பயன்படுத்தி, பயன்பாடு மிக்க துணிப்பைகள், பெண்கள் அணியும் ஆபரணங்கள், கூடைகள், வீட்டு அலங்கார பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறோம்.

முதலில் நான், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப துறையில் தான் பணியாற்றி னேன். ஊனமுற்ற குழந்தைகளுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில், தொண்டு நிறுவனம் ஒன்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு இருக்கும் போது தான், மாற்றுத் திறனாளிகள், வயதான பெண்கள், திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் என, பலரையும் பார்த்தேன். இத்தகையவர்களுக்கு உதவ வேண்டும்; அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், புதிதாக பொருட்களை படைக்க வேண்டும் என்ற நினைப்பில் உருவானது தான், 'ஏகாகிரதா!'

நான் நினைத்த மாதிரியே, மாற்றுத் திறனாளிகள் பலரின் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளோம். எங்களிடம் இருக்கும் பணியாளர்களில் பலர், 50 சதவீதத்திற்கும் குறைவான பார்வைத் திறன் கொண்டவர்கள். பொறுமையாகத் தான் வேலை பார்ப்பர்; ஆனால், ரொம்ப கச்சிதமாக செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள். இத்தகைய முயற்சிக்காக, தமிழகம் முழுக்க பயணம் செய்தேன். நெல்லை மாவட்டத்தில் செயல்படும், லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனங்கள் சில, இந்த மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காட்டின. அவர்களை வைத்து, பல பொருட்களை தயாரித்து வருகிறேன்.

மேலும், அவர்களுக்கும் தனியாக செயல்பட, நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறேன். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பிளாஸ்டிக்கை அறவே பயன்படுத்தாத வகையில், இதை நிறைவேற்ற முடியும். பிளாஸ்டிக் இல்லாமல் வாழவும் முடியும். உதாரணமாக, நம் வீட்டுக்கு, ஒரு மாதத்திற்கு, 1 கிலோ பருப்பு தேவை என்றால், அதை மூன்று மாதங்களுக்கு சேர்த்து வாங்கினால், ஒரே பையில் வாங்கி விடலாம். அதையே, தேவைக்கு ஏற்ப, கால் கிலோ, அரை கிலோ என வாங்கினால், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கவே செய்யும். இப்படி, சின்னச் சின்ன விஷயங்களிலும், முன்யோசனையோடு செயல்பட்டால், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம்.

அடுத்த, ஐந்தாண்டுகளில், எங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களில், குறைந்தது, 30 பேராவது சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்! தொடர்புக்கு: 88257 49536


சிறு வயது முதல் சிக்கனமாக வாழ்கிறேன்!


தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த, ௮௦ம் ஆண்டுகளின் கதாநாயகிகளில் ஒருவரான, நடிகை ஸ்ரீபிரியா: பாரம்பரிய இசைக் குடும்பத்தை சேர்ந்தவள் நான். பெற்றோர், பரத நாட்டிய ஆசிரியர்கள். என் அக்கா, தம்பிக்கும் இசை, நடனம் மீது தான் அதிக ஆசை.

ஆங்கில வழியில் படித்ததால், நடிக்க வந்த புதிதில், சரியாக தமிழ் பேசி, நடிக்க தெரியாது. தமிழ் உச்சரிப்பு, நடிப்பு, டான்ஸ் என, பல விஷயங்களை, நடிகர் கமலிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

அதனால் தான், நண்பர் என்பதை விடவும், ஆசிரியர் என, அவரை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கண்ணதாசன், கருணாநிதி, வாலி ஆகியோரிடமும், தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழில் எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும், கவிஞர் முத்துகுமாரிடம் தான் கேட்பேன். அவர் மறைவுக்கு பின், கமலிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். நான், கமல், ரஜினி மூவரும் சினிமாவில் ஒரே கால கட்டத்தில், ஒன்றாகவே வளர்ந்தோம். மூவரும் ஒரே இடத்தில் இருந்தால், அங்கு செம ரகளை தான்.

ரஜினியுடன் சேர்ந்து, 30 படங்கள், கமலுடன், 25 படங்களில் நடித்துள்ளேன். ரஜினி, கமலின் வெற்றி சரித்திரத்தை யாரும் எழுத முற்படும் போது, என்னை நீக்கி விட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு, இருவருடனும் நடித்துள்ளேன். அதுபோல, சிவகுமார் உடன், 15 படங்களில் நடித்துள்ளேன். இருவருக்கும் சின்ன மனஸ்தாபத்தால், பேசிக் கொள்ளாமல் இருந்தோம்.

எனினும், அப்படியே, 10 படங்களில் நடித்தோம். அதன்பின், இருவரும் பேசி, நண்பர்களாகி விட்டோம். சிவாஜி, ஜெய்சங்கர் ஆகியோருடனும், அதிக படங்களில் நடித்த நடிகையரில் நானும் ஒருத்தி. மலையாள நடிகராக இருந்த ராஜ்குமார் தான் என் கணவர். இப்போது அவர், பிசினஸ் செய்கிறார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

மகள், சட்டம் படித்துள்ளாள்; மகன், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறான். குடும்ப சூழலால், இளமை காலத்தில் இருந்தே, சிக்கனமாக வாழ பழகி விட்டேன்; இப்போதும் கடைபிடிக்கிறேன். சினிமா வாய்ப்புக்காக, யாரையும் நான் அணுகியதில்லை. வாழ்க்கையில் எப்போதும், பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை; அதனால், ஏமாற்றமும் கிடைத்ததில்லை. சினிமா துறை உட்பட எந்த துறையிலும், பெண்களுக்கு இன்னமும் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. மக்களை பாதிக்கும் விஷயங்களுக்காக, இப்போதும் தைரியமாக குரல் கொடுக்கிறேன்.

'சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு, கட்டுப்பாடுகள் வேண்டும். 'ஆதார் எண் போன்றவற்றை குறிப்பிட்ட பிறகே, சமூக வலைதளங்களை பயன்படுத்த, சட்டம் கொண்டு வர வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறேன்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X