டில்லி சட்டசபை தேர்தலில் போட்டா போட்டி

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
டில்லி சட்டசபை தேர்தலில் போட்டா போட்டி

டில்லி சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பா.ஜ., - காங்., - ஆம் ஆத்மி கட்சிகள் இடையே, போட்டா போட்டி துவங்கி உள்ளது. வாக்காளர்களை கவரும் வேலையில், அனைத்து கட்சி தலைவர்களும், வியூகம் வகுத்து களம் இறங்க துவங்கி உள்ளனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 8ம் தேதி, சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையம், சமீபத்தில் வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதலே, தேர்தலை சந்திக்க, அரசியல் கட்சிகள் ஆயத்தமாக தொடங்கிவிட்டன. டில்லியில், மொத்தம், 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின்படி, 1.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், சீக்கியர்கள், பூர்வாஞ்சலிகள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இச்சமூகத்தினரின் ஆதரவை பெற, பா.ஜ., - காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.


பூர்வாஞ்சலி சமூகம்


டில்லியில் சீக்கியர்கள், அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். டில்லி வாக்காளர்கள் பட்டியலில், இவர்களின் எண்ணிக்கை, 35 சதவீதமாக உள்ளது. இவர்கள் நினைத்தால், 28 முதல், 30 சட்டசபை தொகுதிகளின் தலையெழுத்தை மாற்ற முடியும். 20 தொகுதிகளில், சீக்கியர்களின் ஓட்டு, 20 சதவீதமாக இருப்பது, இச்சமூகத்தின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பூர்வாஞ்சலி சமூகத்தை சேர்ந்த மக்கள், கிழக்கு உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள், டில்லியில், 25 முதல், 30 சதவீதம் வரை உள்ளனர். இவர்களின் ஓட்டு, 25 சட்டசபை தொகுதிகளின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சக்தி கொண்டது.

இவர்களின் ஆதரவு பெற்ற கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகளை, சுலபமாக பெற்றுவிட முடியும். காங்.,கை சேர்ந்த மறைந்த ஷீலா தீட்ஷித், டில்லி முதல்வராக பதவியில் இருந்த வரை, பூர்வாஞ்சலி சமூகத்தினரின் ஆதரவு, காங்.,குக்கு அமோகமாக இருந்தது. அதன் பின்னர், இவர்களது ஆதரவு, ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்தது. இதையடுத்து, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக, இரு முறை வென்றார்.


தனிப்பெரும்பான்மை


இவர்களுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களின் ஓட்டு, முக்கியமானதாக கருதப்படுகிறது. டில்லியில், 13 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் வசிக்கின்றனர். இவர்களின் ஆதரவு, 10 தொகுதிகளின் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் பலம் கொண்டுள்ளது. இந்த மூன்று சமூகத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து, அரசியல் கட்சியினர் காய் நகர்த்த துவங்கி உள்ளனர். கடந்த, 2015ல் நடைபெற்ற டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி, 67 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து, வரவிருக்கும் தேர்தலில், சீக்கியர்களின் வாக்குகளை கவர, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. எனவே, 1984ல், டில்லியில் நடைபெற்ற, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, பா.ஜ., கிண்டிக்கிளற தொடங்கி உள்ளது. இந்த கலவரத்தில், பல மூத்த காங்., தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து, தகவல்களை கசியவிட திட்டமிட்டுள்ளது. அவர்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர் எனவும் கூறப்படுகிறது. பாடகர் மற்றும் நடிகராக இருந்து, பா.ஜ.,வில் இணைந்த மனோஜ் திவாரி, தற்போது, அக்கட்சியின் டில்லி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இவரது இசை நிகழ்ச்சிகள் மூலம், சீக்கிய மக்களை, பா.ஜ., கவர்ந்து வருகிறது. மேலும், சீக்கிய சமூகத்தை சேர்ந்த, பா.ஜ., மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எம்.பி., பர்வேஷ் வர்மா ஆகியோர் மூலம், சீக்கியர்களின் ஆதரவை திரட்டவும் திட்டமிட்டுள்ளது.


தீவிரம்


இதற்கிடையே, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க, ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தங்கள் ஆட்சி காலத்தில், குறைந்த விலையில் மின் மற்றும் குடிநீர் வசதி, சுகாதார மையங்கள், சாலை வசதிகள் உருவாக்கியதை சாதனைகளாக குறிப்பிட்டு, பூர்வாஞ்சலி மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கவர, ஆம் ஆத்மி வியூகம் வகுத்துள்ளது. காங்.,கை பொறுத்தவரை, இளைஞர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் ஓட்டுகளை கவரும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றது.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசை வீழ்த்தி, பா.ஜ., ஆட்சியை பிடித்துவிடாமல் தடுப்பதே, அவர்களின் தற்போதைய நோக்கமாக உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-ஜன-202006:45:40 IST Report Abuse
blocked user சென்ற முறை காங்கிரஸ் ஓட்டுக்கள் அப்படியே கேஜிரிவாலுக்கு விழுந்தது. இந்தமுறை அது சாத்தியம் இல்லை. ஆகவே அண்ணன் கெஜ்ரியை ஒழித்துக்கட்டி விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X