அரசியல் செய்தி

தமிழ்நாடு

கண்டிக்க முடியலை; தண்டிக்க முடியலை தவிக்கிறது அ.தி.மு.க., தலைமை

Added : ஜன 12, 2020
Advertisement

அமைச்சர்களை எதுவும் கேட்க முடியாமல், முதல்வரும், துணை முதல்வரும் தடுமாறுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிராமப்புறங்களில், அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலைக்கு, தனி மவுசு இருப்பதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தினால், எளிதாக வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், முதலில், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தியது, அ.தி.மு.க., அரசு.ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளாட்சி வேட்பாளர்களை முடிவு செய்யும் பொறுப்பை, மாவட்ட செயலர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ஒப்படைத்தனர். பாரபட்சமின்றி, வெற்றி வாய்ப்புள்ளோரை, தேர்தலில் நிறுத்தும்படியும், கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை, அவர்களுக்கு வழங்கும்படியும், கட்சி தலைமை அறிவுறுத்தியது.அதை, பெரும்பாலான அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை, களம் இறக்கினர். மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற, கட்சி தலைமையின் உத்தரவு குறித்து கவலைப்படாமல், கூட்டணி கட்சியினரையும், சொந்த கட்சியினரையும் நோகடித்தனர்.எனினும், எங்கும் பிரச்னை பெரிதாக எழாததால், கட்சி தலைமை அமைதி காத்தது. குற்றச்சாட்டுஜெயலலிதா இருந்தவரை, தேர்தலில் ஒழுங்காக பணியாற்றாத நிர்வாகிகள் பதவி, தேர்தல் முடிந்ததும் பறிக்கப்படும். அதிலும், அமைச்சர்களாக இருந்தால், அனைத்து பதவிகளும் பறிக்கப்படும்.

எனவே, அனைத்து அமைச்சர்களும், வரிந்து கட்டிக்கொண்டு, சொந்த காசை செலவு செய்து, தேர்தல் பணி பார்த்தனர். ஆனால், இம்முறை பல அமைச்சர்கள், தங்கள் பாக்கெட்டில் இருந்து பைசா எடுக்கவில்லை. இதன் காரணமாக, பல இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் உறவினர்கள் பலர், தேர்தலில் தோல்வியை தழுவினர். தேர்தல் முடிந்ததும், பெரும் தோல்வியை சந்தித்த மாவட்ட அமைச்சர்களை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் அழைத்து பேசியுள்ளனர். அப்போது, அவர்கள் தோல்வி குறித்து, எவ்வித கவலையுமின்றி, எதிர் தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர்கள் செய்த தவறுகளை, கட்சியினர், தலைமைக்கு புகாராக அனுப்பியும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அமைச்சர்கள், தோல்வி குறித்த கவலையின்றி வலம் வர, கட்சியினர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஜெயலலிதா, கட்சியினரை அதிகம் சந்திக்காவிட்டாலும், தவறு செய்தவர்கள் குறித்து, கட்சி அலுவலகத்திற்கு வரும் புகார்களை, முறையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுத்தார். அவ்வப்போது, கட்சியினரை அழைத்து பேசுவார்.

ஓரளவு வெற்றி

ஆனால், முதல்வரும், துணை முதல்வரும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் மீது, எந்த புகார் வந்தாலும் விசாரிப்பதில்லை. கட்சி அலுவலகத்திற்கு, அவர்கள் வரும்போது, பலர் மனுக்களுடன் வரு கின்றனர்; எந்த மனுவையும் வாங்குவதில்லை. உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' பெற்றவர்கள், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என, சொந்த பணத்தை செலவழித்துள்ளனர். இதனால், கட்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தொண்டர்களை மதிக்காத போக்கு தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் வெற்றி கனவாகி விடும். எனவே, கட்சியினர் அளிக்கும் புகார்களை விசாரித்து, தவறு செய்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X