தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement

மதுரை, மதுரையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவருக்கு நடந்த தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த சூர்யகலா, முத்துராமன் ஆகியோர் 14 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கீதா, அய்யப்பன் 9 ஓட்டுக்களை மட்டுமே பெற்றனர்.மாவட்ட ஊராட்சியிலுள்ள 23 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க., 13, பா.பி., 1, அ.தி.மு.க., 9 ல் வெற்றி பெற்றன. நேற்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுகத்தேர்தல் நடந்தது. இதையொட்டி பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அ.தி.மு.க., கவுன்சிலர் அய்யப்பன் முதல் ஆளாக வந்தார். காலை 10:15 மணிக்கு தி.மு.க., மற்றும் பா.பி., கவுன்சிலர்கள் ஒரே சேர வேனில் அழைத்து வரப்பட்டனர். அவர்களது அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எட்டு பேர் வந்தனர். அவர்களது அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டன.கலெக்டர் வினய் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய டி.ஆர்.ஒ., கண்ணன், வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், ஆவின் பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா, நேர்முக உதவியாளர்கள் வீராச்சாமி(தேர்தல்), வானதி(வளர்ச்சி), ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை முன்னிலையில் காலை தலைவர் தேர்தல் நடந்தது.தலைவருக்கு தி.மு.க., சார்பில் சூர்யகலா, அ.தி.மு.க., சார்பில் கீதா வேட்பு மனு செய்தனர். இதனால் தேர்தல் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து 2 பேரது பெயர்களில் ஓட்டுச்சீட்டுகள் உடனடியாக தயாரிக்கப்பட்டு கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 14 ஓட்டுக்கள் பெற்று சூர்யகலா வெற்றி பெற்றார். அவருக்கு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.பின் பகல் 3:30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் முத்துராமன், அ.தி.மு.க., சார்பில் அய்யப்பன் வேட்பு மனு செய்தனர். அதையடுத்து 2 பேரது பெயர்களிலும் ஓட்டுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இதில் முத்துராமன் 14 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அய்யப்பனுக்கு 9 ஓட்டுக்கள் கிடைத்தன.அ.தி.மு.க.,விற்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் தேர்தலில் போட்டியிடாவிட்டால் ஒதுங்கியதாக தகவல் வெளியாக கூடும் என்பதால் தேர்தலை சந்தித்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் தலைமையில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை வரவேற்று கவுன்சிலர்களுடன் வேனில் அழைத்து சென்றனர்.மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா கூறுகையில், ''மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை அரசிடம் பெற்று நிறைவேற்ற முயற்சி செய்வேன்,'' என்றார்.
ரகசியம் காத்த தி.மு.க.,மெஜாரிட்டி இருந்த போதும் அ.தி.மு.க., பணம் அல்லது பதவி ஆசை காட்டி கவுன்சிலர்களை இழுக்கலாம் என கருதிய தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் கவுன்சிலர்களை வெற்றி பெற்ற கையுடன் குற்றாலத்திற்கு அழைத்து சென்றனர். நேற்று காலை தான் அவர்களை அங்கிருந்து அழைத்து வந்தனர். குற்றாலத்திலேயே மாவட்ட ஊராட்சி தலைவராக சூர்யகலாவை உறுதி செய்து தேர்தல் நடந்தால் எப்படி செயல்பட வேண்டும் என கவுன்சிலர்களுக்கு தி.மு.க., நிர்வாகிகள் பயிற்சியளித்தனர். துணைத்தலைவர் பதவியை பல கவுன்சிலர்கள் கேட்டனர். யாரையாவது அறிவித்தால் மற்றவர்கள் அதிருப்தியுற்று தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக மாறக்கூடும் என தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ரகசியம் காத்தனர். தலைவர் தேர்தல் முடிந்த பிறகு தான் துணைத்தலைவராக முத்துராமனை அறிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X