கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிரஸ் கவுன்சில் போல் தமிழகத்திலும் சட்டப்பூர்வ அமைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை: 'பிரஸ் கவுன்சில் போல சட்டப்பூர்வ அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சிலை திருட்டு வழக்குகளில் பொய்யான தகவலை தனி அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பத்திரிகையாளர் என குறிப்பிட்டு இம்மனுவை தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதிகள் கிருபாகரன் வேல்முருகன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அருள் ''மனுதாரர் போலி நிருபர்; அவர் நடத்துவதாக கூறப்படும் இதழ் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற போலி நிருபர்களை கட்டுப்படுத்த வழிமுறை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பல ஆண்டுகளாக அரசு வழங்கும் அடையாள அட்டை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் நீதிபதிகளிடம் அளிக்கப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது. இதுகுறித்து நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.

இவ்வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிலை திருட்டு வழக்கை திசை திருப்ப சிலரின் துாண்டுதலின்படி பத்திரிகையாளர் எனக்கூறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாரோ என்ற சந்தேகம் உள்ளது.

காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது என மனுதாரர் பதில் அளிக்க வேண்டும்.பத்திரிகையாளர் எனக்கூறி குற்றச் செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். அரசு அதிகாரிகளையும் தொழில் அதிபர்களையும் 'பிளாக்மெயில்' செய்கின்றனர். பத்திரிகையாளர் என கூறுவதற்கு அந்த பத்திரிகை இதழின் குறைந்தபட்ச விற்பனை எண்ணிக்கையை வரையறுக்க வேண்டும்.அடையாள அட்டை வழங்கும் முன் அவரது பின்னணியை ஆராய வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் தங்களை பத்திரிகையாளர் எனக்கூறி அதை கேடயமாக்கி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே உண்மையான பத்திரிகையாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் இந்த துறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வழக்கில் செய்தி துறை செயலர் பிரஸ் கவுன்சில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு சென்னை பிரஸ் கிளப் ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர்.கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
கடந்த ௧௦ ஆண்டுகளில் எத்தனை பத்திரிகை இதழ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; எத்தனை பேருக்கு பத்திரிகையாளர் அடையாள அட்டையை அரசு வழங்கி உள்ளது; எத்தனை நிருபர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

பத்திரிகை நிருபர்கள் என கூறிக்கொண்டு 'பிளாக்மெயில்' மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனரா; விபத்து மரணம் நேரிட்டால் பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகை என்ன?

பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கும் குழுவில் யார் யார் உறுப்பினர்கள்; எந்த அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்; அவர்கள் சார்ந்துள்ள பத்திரிகை நிறுவனம் எது; அந்த நிறுவன பத்திரிகையின் விற்பனை எண்ணிக்கை எவ்வளவு?

தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரஸ் கவுன்சில் இருப்பது போல சட்டப்பூர்வ அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது; தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்கள் எவை?

சென்னை பத்திரிகையாளர் சங்கம் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு சென்னை பிரஸ் கிளப் ஆகியவற்றில் உறுப்பினர்களாக பதிவு செய்த நிருபர்கள் எத்தனை பேர்; சங்க நிர்வாகிகள் விபரங்கள்; அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள்; சங்கங்களுக்கு எப்போது தேர்தல் நடந்தது; போலி நிருபர்கள் அதிகாரம் செலுத்துகின்றனரா என்பதற்கு சங்கங்கள் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X