எஸ்.ஐ., பணியில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை:எஸ்.பி., எச்சரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., பணியில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை:எஸ்.பி., எச்சரிக்கை

Added : ஜன 12, 2020

விழுப்புரம்:சப் இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு சிபாரிசு மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 969 பணியிடங்களுக்கான சார்பு, உதவி ஆய்வாளர்கள் பொது பிரிவினருக்கான எழுத்துத் தேர்வு இன்று 12ம் தேதியும், காவல் துறை பிரிவினருக்கான நாளை 13ம் தேதியும் நடைபெற உள்ளது.இந்த தேர்வு விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப்பள்ளி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறுகிறது.இதில், இன்று 12ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,168 பெண்கள் உட்பட 7,081 பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களும், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நாளை 13ம் தேதி 161 பெண்கள் உட்பட 857 காவல் துறை பிரிவு விண்ணப்பத்தாரர்களும் எழுத்து தேர்வு எழுத உள்ளனர்.இந்த தேர்வில் கலந்து கொள்ள வசதியாக நாட்களில் காலை 5:00 மணி முதல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து கப்பியாம்புலியூர் மற்றும் அரசூர் வரையில் அரசு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.தேர்வுக்கு வரும் நபர்கள் காலை 8:00 மணியளவில் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் ஆஜராக வேண்டும். தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதம், பந்துமுனை எழுதுகோல், தேர்வு எழுதும் அட்டை ஆகியவை கொண்டுவர வேண்டும். மேலும், கைப்பை, மொபைல் போன், கால்குலேட்டர் போன்றவற்றை கொண்டு வருதல் கூடாது.தேர்வு மையங்களில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 டி.எஸ்.பி.,க்கள், 29 இன்ஸ்பெக்டர்கள், 88 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 700 காவலர்கள் மற்றும் மூன்று நிர்வாக அதிகாரிகள் உட்பட 59 அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தேர்வு நடைபெறும் இடத்திற்கு அருகிலோ அல்லது வேறு இடத்திலோ சிபாரிசு மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறும் எந்தவொரு இடைத்தரகர்களையும் நம்பவேண்டாம்.அவ்வாறான செயல்களில் எவரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X