கராச்சி கடற்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 17 மணி நேர சண்டையில் பலர் பலி: ஒசாமா சாவுக்கு பழி

Added : மே 24, 2011 | கருத்துகள் (1)
Advertisement
கராச்சி கடற்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 17 மணி நேர சண்டையில் பலர் பலி: ஒசாமா சாவுக்கு பழி

கராச்சி : ஒசாமா பின்லாடன் கொலைக்கு பழி வாங்கும் விதத்தில், பாகிஸ்தானின் கராச்சி கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் தலிபான் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். 17 மணி நேரத்துக்குப் பின் இப்போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில், 13 பாக்., வீரர்கள், நான்கு பயங்கரவாதிகள் பலியாயினர்; 16 பேர் காயம் அடைந்தனர். நான்கு பயங்கரவாதிகள் பிடிபட்டனர்; இரு அமெரிக்க விமானங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.


அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் கடந்த 8ம் தேதி, அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் இஸ்லாமாபாத் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பாக்., ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா மீது கடும் தாக்குதல் நடத்தப் போவதாக தலிபான்கள் மிரட்டியிருந்தனர். அதன்படி, ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் கடந்த மூன்று வாரங்களில் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாக்.,ல் நடந்தவற்றில், சவுதி மற்றும் அமெரிக்கத் தூதரகங்களின் மீதான தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.


புகுந்தனர் பயங்கரவாதிகள்: பாக்., நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், பல்வேறு நவீன ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சிலர், கராச்சி நகரின் புகழ் பெற்ற "பி.என்.எஸ்., மெஹ்ரான் கடற்படைத் தள'த்திற்குள் புகுந்தனர். முதலில், தங்களிடம் இருந்த ஏவுகணை துப்பாக்கிகள் மூலம், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்களைத் தாக்கினர். இதில், இரு விமானங்கள் தீக்கிரையாயின; ஒரு விமானம் பயங்கர சேதமடைந்தது.


தொடர்ந்து, கடற்படைத் தளத்தில் இருந்தவர்களை சிறை பிடித்த பயங்கரவாதிகள், அங்கிருந்த உயரமான கட்டடம் ஒன்றில் புகுந்து கொண்டனர். கண்மூடித்தனமாக நான்கு திசையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


பாக்., வீரர்கள் பதிலடி: சுதாரித்துக் கொண்ட பாக்., கடற்படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் நீடித்தது. அதிகாலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் கடற்படைத் தளத்தின் மீது வட்டமிடத் துவங்கின. தொடர்ந்து குண்டு வெடிப்பு சத்தங்களும், துப்பாக்கி சத்தங்களும் கேட்டபடி இருந்தன. கராச்சி நகரில் ஒருவித பீதி பரவத் துவங்கியது. இச்சண்டையில், 13 கடற்படை வீரர்கள் பலியாயினர்; 16 வீரர்கள் காயம் அடைந்தனர். கடற்படை வீரர்களின் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


17 மணி நேர சண்டை: கடற்படை வீரர்களுக்குத் துணையாக, நேற்று அதிகாலையில் ராணுவம் மற்றும் துணை நிலை ராணுவப் படை வீரர்கள் கடற்படைத் தளத்தில் குவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் பிணையக் கைதிகள் இருந்ததாலும், அவர்கள் தற்கொலை குண்டுகளோடு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதாலும், ராணுவ நடவடிக்கை மிகவும் கவனமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து 17 மணி நேரம் நீடித்த இச்சண்டை ஒருவழியாக நேற்று பாக்., நேரப்படி நண்பகல் 3.40 மணிக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், கடற்படைத் தளத்திற்குள் சில பயங்கரவாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது.


பயங்கரவாதிகள் கைது?
பாக்., உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் சம்பவ இடத்திற்கே நேரில் வந்து பார்வையிட்டார். கடற்படைத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சில பயங்கரவாதிகளை கைது செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், எத்தனை பயங்கரவாதிகள் வந்தனர், எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் பிடிபட்டனர் போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


பாகிஸ்தானி தலிபான் பொறுப்பேற்பு: தலிபான்களின் ஒரு பிரிவான பாகிஸ்தானி தலிபான் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் வெளியிட்ட அறிக்கையில், "ஒசாமாவின் கொலைக்கு பழி வாங்குவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் இன்னும் ஒற்றுமையுடனும், சக்தியுடனும் இருக்கிறோம் என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது' என்று கூறியுள்ளார்.


அணு ஆயுத பாதுகாப்பு கேள்விக்குறி


* "மெஹ்ரான்' கடற்படைத் தளத்தில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள மஸ்ரூர் விமான தளத்தில் தான், பாக்.,ன் 100 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
* இச்சம்பவத்தால், பாக்., அணு ஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
* பயங்கரவாதிகள் தீக்கிரையாக்கிய அமெரிக்க விமானங்களில் ஒன்று, இந்தியப் பகுதிகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
* கடற்படைத் தளத்தின் அடிப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை வழியாக பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
* பாக்.,ன் முக்கிய ராணுவத் தளமே இவ்வளவு பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருக்கும் பட்சத்தில், நாட்டின் பாதுகாப்பு எங்ஙனம் வலுவாக இருக்க முடியும் என்ற சந்தேகம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
* 2009ல் ராவல்பிண்டி ராணுவத் தலைமையகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலை இச்சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளதாக பாக்., பத்திரிகைகள் கூறியுள்ளன.
* கடற்படைத் தளத்தில் இருக்கும் சிலரது உதவியின்றி இத்தகைய தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
24-மே-201102:31:23 IST Report Abuse
KRISHNAMOORTHY Somangili Perumal இந்தியாவிவுக்கு எதிராக வினை விதைத்தவர்கள் [ பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா } இன்று அதனை அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X