பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஊராட்சி, எல்லைகள் மாற்றம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

Added : ஜன 12, 2020
Advertisement
 புதிய ஊராட்சி, எல்லைகள் மாற்றம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

விழுப்புரம்;விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிய ஊராட்சி உருவாக்குதல் மற்றும் ஊராட்சி எல்லைகள் மாற்றம் செய்தல் தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் வரவேற்றார்.
ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சீத்தாபதி சொக்கலிங்கம் உட்பட அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.காலை 11.00 மணிக்கு நடந்த கூட்டத்தில், மணலுார்பேட்டையை மையமாக வைத்து, தனி ஊராட்சி ஒன்றியம் அமைப்பதோடு, இங்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க வேண்டும்.கொடியூர், டி.குன்னத்துார், வீரணாம்பட்டு கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்தோடு சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ.,: செஞ்சி ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளை இரண்டாக பிரித்து ஆலம்பூண்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும். மேல்மலையனுார் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளை பிரித்து வளத்தியை தலைமையிடமாக கொண்ட ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.சீத்தாபதி எம்.எல்.ஏ.,: வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு 18ல் ஓமந்துார், மொளசூர் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இரு ஊராட்சிகளை முன்பு இருந்தது போல மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு 7 ல் சேர்க்க வேண்டும்.
ரவிக்குமார் எம்.பி.,: விழுப்புரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கோட்டக்குப்பம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.கூட்டத்தினைத் தொடர்ந்து, கலெக்டர்அண்ணாதுரை, கோரிக்கை மனுக்களை பெற்றார்.அதனைத்தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு, கருவேப்பிலைபாளையத்தை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைத்தது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது, கருவேப்பிளைபாளையம் கிராமம், சிறுத்தனுார் ஊராட்சியோடு சேர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இருந்தது. இதில், சிலர் செய்த சூழ்ச்சியால், கருவேப்பிள்ளைபாளையம் கிராமம், காந்தலவாடி ஊராட்சியோடு சேர்க்கப்பட்டு, தற்போது விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு மாவட்டங்களுக்கும் அல்லல்படும் சூழல் உள்ளது.எனவே, கருவேப்பிலைபாளையம் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும்.
கலெக்டர் அண்ணா துரை : உங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளோம். இரண்டாம் கட்ட கூட்டம் ஒரு மாதத்தில் நடைபெறும். அப்போது மீண்டும் கருத்துகள் கேட்கப்படும். அதனடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்.பி.,யிடம் வாக்குவாதம்
கருவேப்பிலைபாளையம் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்கக் கோரி, கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து, கூட்டத்தில் குறைவான நபர்களே அனுமதிக்கப்படும் அனைவரும் செல்ல அனுமதியில்லை என்றனர். இதனால், பொதுமக்கள் எஸ்.பி., ஜெயக்குமாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, திரும்பிச் சென்றனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி தலைமையில் பங்கேற்றனர்.
இதற்கிடையே கருவேப்பிலைபாளையம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைத்ததற்கு நன்றி தெரிவித்து ஒரு தரப்பினர், முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெ., பேனருக்கு பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி ஆரவாரம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X