பொது செய்தி

தமிழ்நாடு

கரம் கொடுத்தால் சிறகு விரியும்! புதிய நம்பிக்கையுடன் ஆடை ஏற்றுமதியாளர்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

ஆடை ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்திருக்கின்றனர். இதற்கான நல்ல செய்திக்காக, ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர். 'கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பொங்கல், சிறப்பானதாக இருக்கும்' என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவராக, நான்காவது முறையாக சக்திவேல் பதவியேற்றுள்ளார். திருப்பூர் ஏ.இ.பி.சி., அலுவலகத்தில், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சிவசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், சிறப்பு அழைப்பாளர்கள் சந்திரன், குமார் ஆகியோர், நேற்று, சக்திவேலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.ஏ.இ.பி.சி., துணை இயக்குனர் ஈஸ்வர சுந்தர் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள், அப்பேரல் டிரெய்னிங் அண்டு டிசைன் சென்டர் (ஏ.டி.டி.சி.,) அதிகாரிகள், ஆசிரியர்களுடன், ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து சக்திவேல் கலந்துரையாடினார்.ஆடை தயாரிப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டார். நடப்பு 2019 -- 2020ம் ஆண்டுக்கான திருப்பூர் பின்னலாடை துறையின் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு விவரங்களை சேகரிக்க, ஏ.இ.பி.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சக்திவேல் கூறியதாவது:திருப்பூர் உட்பட நாடு முழுவதும் ஆடை ஏற்றுமதி துறை சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்து, மத்திய ஜவுளி, நிதி அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது; விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
நிதித்துறை அமைச்சர் அறிவித்த ஆர்.ஓ.டி.டி.இ.பி., என்கிற புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, வரும் மார்ச் மாதம் வரை, எம்.இ.ஐ.எஸ்., திட்டம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது. நாடுமுழுவதும் ஏ.இ.பி.சி., சார்பில், 200 ஏ.டி.டி.சி., பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இப்பயிற்சி மையங்களில், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் என்கிற சிறப்பு பாடப்பிரிவு கொண்டுவரப்பட உள்ளது.போர்ட்டல் சேவை துவங்கி, ஏற்றுமதி நிறுவனங்களின் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அடிக்கடி டில்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை சந்திப்பது உட்பட, திருப்பூர் பின்னலாடை துறை மட்டுமின்றி நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.நுால் உற்பத்தி, ஆடை தயாரிப்பு என அனைத்து அம்சங்களுடன், நாட்டின் ஆடை உற்பத்திக்கு முதுகெலும்பாக தமிழகம், திகழ்கிறது. பிற மாநிலங்களைவிட, தமிழகமே, ஆடை உற்பத்தி துறை வளர்ச்சிக்கு உகந்ததாக திகழ்கிறது.ஆயத்த ஆடை துறைக்கு வங்கிகளின் ஆதரவு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியும்கூட, வங்கிகள், நிறுவனங்களில் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கின்றன.வங்கி சார் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்வகையில், அனைத்து வங்கி தலைவர்களை அழைத்து, ஏ.இ.பி.சி., சார்பில் கருத்தரங்கம் நடத்தப்படும். ஜவுளித்துறை சார்ந்து நாடுமுழுவதும் உள்ள சங்கங்களை ஒருங்கிணத்து, தேசிய அளவில் கமிட்டி உருவாக்கப்படும்.
இந்திய ஆடை இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கவேண்டுமென வெளிநாட்டு வர்த்தகர்களை, தங்கள் நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். பிரிட்டன் நாட்டு வர்த்தகர் சிலர், இதுகுறித்து தங்கள் அரசிடம் முறையிடுவதாக உறுதி அளித்துள்ளனர். நமது ஆடைகளுக்கு வெளிநாடுகளில் இறக்குமதி வரி விலக்கு கிடைத்தால், பிற நாடுகளுடனான வர்த்தக போட்டிகளை சமாளிப்பது எளிதாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சக்திவேல் கூறியது போல், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், 'இந்தப் பொங்கல், சிறப்பானதாக இருக்கும்' என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X