மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் ஏமாற்றம்

Added : ஜன 12, 2020

தேனி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கடைசி நேரத்தில் மாறியதால் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மனைவி கண்ணீருடன் வெளிநடப்பு செய்தார்.தேனி மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் 8 பேர் அ.தி.மு.க.,கூட்டணி, 2 பேர் தி.மு.க. கூட்டணியினர் வெற்றி பெற்றனர்.மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க.,விற்கு உறுதியானது.பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அன்னப்பிரகாஷ் மனைவி ஈஸ்வரி ,மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றார். இவருக்குத்தான் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி என்றனர். அவரும் தலைவராகும் கனவில் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.தலைவர் தேர்தல் அறிவிப்பின் போது போடி, சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கே. பிரித்தா அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் ஈஸ்வரி அதிர்ச்சி, அதிருப்தி அடைந்தார். மனுத்தாக்கலுக்கு முன் அறையை விட்டு கண்ணீர் சிந்தியவாறு வெளியேறினர். கட்சியினர் அவரை கட்டாயப்படுத்தி உட்கார வைக்க முயன்றும் முடியவில்லை. போட்டி இல்லாததால் மாவட்ட ஊராட்சி தலைவராக பிரித்தா தேர்வு செய்யப்பட்டதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவி பா.ஜ.வை சேர்ந்த ராஜபாண்டிக்கு வழங்கப்படுகிறது. ஈஸ்வரிக்கு தலைவர் பதவி வழங்கினால் தலைவர், துணைத் தலைவர் ஒரே ஒன்றியம், ஒரே ஜாதியாக இருப்பதால் அதிருப்தி நிலவும் என கருதி கட்சி மேலிடத்தால் கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டார் என்கின்றனர். அன்னப்பிரகாஷ் தினகரன், தங்கத்தமிழ் செல்வன் ஆதரவாளராக இருந்து அ.தி.மு.க.,விற்கு வந்தார். சமீபத்தில் நடந்த லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் பெரியகுளம் ஒன்றியத்தில் அ.தி.மு.க., குறைவான ஓட்டுக்கள் பெற்றதால் ஈஸ்வரிக்கு பதவி வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X