வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பாடப் புத்தகத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய தவறான கருத்தை நீக்க கோரிய வழக்கில், 'வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மாநில செயலர், பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:
சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாடுபடுகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, சமூக அறிவியல் பாடத்தில், 'சுதந்திர போராட்டத்தின் போது, ஹிந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தன' என, கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பொய்யானது; அடிப்படையற்றது.
இளைய தலைமுறையினர் மனதில், விஷத்தை கலப்பதாக உள்ளதால், இந்த வார்த்தையை நீக்கும்படி கோரினோம். ஆனால், பள்ளி கல்வித் துறை, பாடநுால் கழகம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சமூக அறிவியல் பாடத்தில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., குறித்த இந்த பகுதியை நீக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தை இடம்பெறாது,'' என்றார். அதை, மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும், ௨௨ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.