மக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம்: ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி ஆதிக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம்: ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி ஆதிக்கம்

Added : ஜன 12, 2020
Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.பொங்கல் பரிசாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், இரண்டு அடி கரும்பு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் நடந்தது. நெகமம், சின்னநெகமம், என்.சந்திராபுரம் கிராமங்களில், பொங்கல் பரிசு பொருள் தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது.பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் மற்றும் குடிமைப் பொருள் தனி தாசில்தார் விஜயகுமார், முன்னாள் அமைச்சர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.சூளேஸ்வரன்பட்டியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். ரேஷன் கடைகளில் பொதுமக்கள், பொங்கல் பரிசு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 168 ரேஷன் கடைகளில், 87 ஆயிரத்து, 340 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. மேலும், வேட்டி, சேலையும் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டுதாரர்களுக்கு முறையாக வழங்கப்படும்,' என்றனர்.ரேஷன் கடைகளில், ஆளுங்கட்சியினர் உடன் இருந்து பல இடங்களில் மக்களிடம் நேரிடையாக வழங்கினர். ஒரு சில வார்டுகளில், ஆளுங்கட்சியினர், பொங்கல் பரிசு வாங்க டோக்கன் வினியோகித்தனர். அந்த டோக்கனை கொண்டு சென்றவர்களுக்கு, ரேஷன் கார்டு இல்லாமலும் பொருட்களை வழங்கப்பட்டது.நெய் கொடுத்த தி.மு.க.,!பொங்கல் பரிசு வழங்கிய அரசு, பொங்கல் தயாரிக்க முக்கியமான நெய் வழங்கவில்லை என கூறி, பொள்ளாச்சி நகர, 21வது வட்ட தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக நெய் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இதில், வட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X