4 ஒன்றியங்களையும் கைப்பற்றியது அ.தி.மு.க.,! கட்சிக்கு கைகொடுக்காத தி.மு.க.,வினர் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 ஒன்றியங்களையும் கைப்பற்றியது அ.தி.மு.க.,! கட்சிக்கு 'கைகொடுக்காத' தி.மு.க.,வினர் வெற்றி

Added : ஜன 12, 2020

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், அ.தி.மு.க.,வினர் கைப்பற்றியுள்ளனர்.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு, காலை, 11.00 மணிக்கு தேர்தல் துவங்கியது.மொத்தம், 17 கவுன்சிலர்களில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்பது பேரும்; தி.மு.க., கவுன்சிலர் ஒருவர்; ம.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர் தலா ஒருவர் என, 12 பேர் மட்டுமே வந்தனர்.தேர்தல் நடத்தும் அலுவலர்களால், ஒன்றிய தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், அ.தி.மு.க., சார்பில் நாகராணி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார்.எதிர் மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றியக்குழுத் தலைவர் நாகராணி, 34, பிளஸ் 2 படித்துள்ளார். அ.தி.மு.க.,வில் கோதவாடி பாசறை செயலாளராக உள்ளார். முதல் முறையாக ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒன்றிய தலைவராகியுள்ளார்.இவரது கணவர் கனகராஜ் காட்டம்பட்டியில் டாஸ்மாக் விற்பனையாளராக உள்ளார். அ.தி.மு.க., ஒன்றிய மாணவரணி செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்வரன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், விவேகானந்தன் ஆகியோர், மறைமுக தேர்தல் நடத்தினர்.அ.தி.மு.க.,வை சேர்ந்த, திப்பம்பட்டி வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயராணி தலைவர் பதவிக்கும், டி.நல்லிக்கவுண்டன்பாளையம் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஈஸ்வரமூர்த்தி துணைதலைவர் பதவிக்கும் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மனு தாக்கல் செய்தனர்.எதிர்த்து போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில், ஆறு ஒன்றிய கவுன்சிலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.ஒன்றிய தலைவர் விஜயராணி, எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். ஒன்றிய அ.தி.மு.க., மகளிரணி இணைச்செயலாளராக உள்ளார். 2006ல் ஒன்றிய கவுன்சிலர், 2011ல் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர். கணவர் ரங்கசாமி, திப்பம்பட்டி அ.தி.மு.க.,கிளை செயலாளராக உள்ளார்.* ஆனைமலை ஒன்றியத்தில், அ.தி.மு.க., - 5; தி.மு.க., - 4; தலா ஒரு இடத்தில், பா.ஜ., காங்., கட்சிகள்; இரண்டு சுயேட்சை கவுன்சிலர்கள், என, 13 ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் உள்ளனர்.இந்நிலையில், ஆனைமலை ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசுப்ரமணியன், ஆறுமுகம் தலைமையில் மறைமுகத்தேர்தல் நடந்தது.
அ.தி.மு.க., சார்பில் சாந்தி, தி.மு.க., சார்பில் ஜெகதாம்பிகை போட்டியிட்டனர். சாந்தி - 9 ஓட்டுக்கள் பெற்று ஒன்றியக்குழு தலைவராக தேர்வானார். ஜெகதாம்பிகை நான்கு ஓட்டுக்கள் பெற்றார்.ஒன்றியக்குழு தலைவர் ஒன்பது ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதால், யாரெல்லாம் விலை போனார்கள் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.சுயேட்சை கவுன்சிலர் கோபால்ரத்தினம், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இவருக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யாததால், கோபால்ரத்தினம் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.அ.தி.மு.க., ஆனைமலை மேற்கு ஒன்றியச்செயலாளர் கார்த்திக் மனைவியான, சாந்தி பி.இ., (சிவில்) பட்டதாரி. இவர், அ.தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளார்; வேறு பொறுப்புகள் இல்லை. முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, ஒன்றியக்குழு தலைவராகியுள்ளார்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாம்பள்ளியை சேர்ந்த (அ.தி.மு.க.,) லட்சுமி, கட்டுமான தொழிலாளி ஆவார். இவரது கணவர் பழனிசாமி தேங்காய் உறிக்கும் தொழிலாளி. அமைச்சர் ராதாகிருஷ்ணனின் ஆதரவில், ஒன்றிய தலைவராகியுள்ளார்.கூட்டணிக்குள் மோதல்கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., கவுன்சிலர்கள் இடையே போட்டி நிலவியது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று துணைத் தலைவர் பதவிக்கு, மாலை, 3:30 மணிக்கு தேர்தல் துவங்கியது.
அ.தி.மு.க., கவுன்சிலர் துரைசாமியும், கூட்டணி கட்சியான தே.மு.தி.க., கவுன்சிலர் ஜெகன் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மறைமுக தேர்தலில், அ.தி.மு.க., கவுன்சிலர் துரைசாமி - 11 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க., கவுன்சிலர் ஜெகன் ஆறு ஓட்டுகளை பெற்றார். அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க., கவுன்சிலர், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.- நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X