அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் உள்குத்து: அணிமாறி ஓட்டுப்போட்ட 2 பேரால் பறிபோனது பதவி| Dinamalar

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் உள்குத்து: அணிமாறி ஓட்டுப்போட்ட 2 பேரால் பறிபோனது பதவி

Added : ஜன 12, 2020

பனமரத்துப்பட்டி: ஒன்றிய குழு தலைவர் பதவியை அ.தி.மு.க.,வும், துணைத்தலைவர் பதவியை தி.மு.க.,வும் கைப்பற்றியுள்ளது. ஆனால், இரு கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கூட்டணி வைத்து, தங்கள் ஓட்டுகளை பரிமாறிக்கொண்டனர். இதனால், போட்டியிட்டவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பனமரத்துப்பட்டியில், 13 ஒன்றிய கவுன்சிலர் உள்ளனர். அதில், அ.தி.மு.க., 6, தி.மு.க., 5, பா.ம.க., - கம்யூ., தலா ஒருவர் அடங்குவர். கம்யூ., கவுன்சிலருடன் சேர்த்து, தி.மு.க., அணியில் ஆறு பேர் இருந்தனர். பா.ம.க.,வுடன் சேர்ந்து, அ.தி.மு.க., அணியில் ஏழு கவுன்சிலர்கள் இருந்தனர். அதனால், அ.தி.மு.க.,வுக்கு, ஒன்றிய குழு தலைவர் பதவி உறுதியானது. ஆனால், அப்பதவியை கைப்பற்ற, இரு அ.தி.மு.க., கவுன்சிலர் இடையே போட்டி எழுந்தது. இதனால், அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், தி.மு.க., கவுன்சிலருடன் கைகோர்த்தார். நேற்று, 13வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜீவிதா உள்பட தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் ஏழு பேர், ஒரு அணியாக, ஒன்றிய அலுவலகம் வந்தனர். அடுத்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர், கவுன்சிலரான ஜெகநாதனுடன் சேர்ந்து, பா.ம.க., உள்ளிட்ட ஆறு கவுன்சிலர்கள், மற்றொரு அணியாக வந்தனர். ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, ஜெகநாதன் வேட்பு மனு அளித்தார். அவருக்கு போட்டியாக, ஜீவிதா, வேட்பு மனு அளித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் கர்ணன், ஓட்டுப்பதிவை நடத்தினார். அதில், ஜெகநாதன் ஏழு ஓட்டு பெற்று, ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். ஜீவிதா ஆறு ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். ஜீவிதாவுடன் சேர்த்து, தி.மு.க., அணியில் ஏழு பேர் இருந்தனர். அதில் ஒருவர், ஜெகநாதனுக்கு ஓட்டுப்போட்டு, அவர் வெற்றி பெற்றார். இதனால், ஜீவிதா உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். மாலை, 3:30 மணிக்கு, அதன் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. அதற்கு, தி.மு.க., கவுன்சிலர் குமார், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., கவுன்சிலர் ராஜேஸ்வரி வேட்பு மனு அளித்தனர். ஓட்டுப்பதிவு முடிவில், குமார் எட்டு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ராஜேஸ்வரி, 5 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார்.

அ.தி.மு.க., அணியில், ஆறு கவுன்சிலர் உள்ள நிலையில், பா.ம.க.,வுக்கு ஐந்து ஓட்டுகளே கிடைத்தன. தி.மு.க., அணியில் ஏழு கவுன்சிலர் உள்ள நிலையில், அக்கட்சிக்கு எட்டு ஓட்டுகள் கிடைத்தன. ஒன்றிய குழு தலைவர் தேர்தலில், தி.மு.க., அணி கவுன்சிலர், அ.தி.மு.க.,வுக்கும், துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., அணி கவுன்சிலர், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டது வெட்ட வெளிச்சமானது. அணிமாறி ஓட்டுப் போட்ட இரு கவுன்சிலர்கள் யாரென, மூன்று கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் புலம்புகின்றனர். தி.மு.க.,வை நம்பி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் ஜீவிதா, அ.தி.மு.க.,வை நம்பி, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ம.க., கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X