சேலம்: சேலம் மாவட்டத்தில், 3.7 லட்சம் குழந்தைகளுக்கு, வரும், 19ல், போலியோ சொட்டு மருந்து வழங்க, 2,270 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கவுள்ளது. அதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அதில், கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வரும், 19ல், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், 3.7 லட்சம் குழந்தைகளுக்கு, மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 2,270 மையங்களில், காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணிவரை, சொட்டு மருந்து விடப்படும். ஏற்கனவே, மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் கூடுதல் தவணையாக விடலாம். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையம், பள்ளிக்கூடம், ஊராட்சி அலுவலகம், தனியார் மருத்துவமனை, நடமாடும் முகாம் மூலம், சொட்டு மருந்து விடப்படும். தவிர, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சுங்கச்சாவடி, சினிமா தியேட்டர், சந்தை, வணிக வளாகம், போக்குவரத்து முகாம் என, மக்கள் கூடுமிடங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். அதனால், குழந்தைகளை அழைத்துச்சென்று, சொட்டு மருந்து விட, பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE