8 வயது சிறுவனின் வாக்குமூலம்: சத்தியில் தாய், தந்தை தப்பினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 வயது சிறுவனின் வாக்குமூலம்: சத்தியில் தாய், தந்தை தப்பினர்

Added : ஜன 12, 2020

சத்தியமங்கலம்: சத்தியில், பாட்டி தூக்கு மாட்டியதை பார்த்த, 8 வயது சிறுவனின் வாக்கு மூலத்தால், அவரது தாயும்-தந்தையும் தப்பினர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி,63. இவரது கணவர் ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன் கேன்சர் நோயால் இறந்துள்ளார். இதையடுத்து தன் மகன் செந்தில்குமார் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். தன் கணவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மனஅழுத்ததில் இருந்த இந்திராணி, நேற்று முன்தினம் வீட்டின் ஒரு அறையில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தொங்கினார். இதை கண்ட மகன் செந்தில்குமார், கதவை உடைத்து, தன் தாய் இந்திராணி கழுத்தில் இருந்த கயிற்றை அறுத்து பார்த்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீசார் இந்திராணி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் இந்திராணியின் பின் தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. அவரை, செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், தீவிர விசாரணை செய்ததில், அது கொலையாக இருக்கலாம் என போலீசார் முடிக்கு வந்தனர். கடைசியாக செந்தில்குமாரின், 8 வயது மகன் ஆதர்ஷை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது ஆதர்ஷ் கூறுகையில், ' என் பாட்டி கையிற்றில் தொங்கி கொண்டிருந்தபோது, என் அப்பா கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று கத்தியால் கையிற்றை அறுத்தார். அப்போது, பாட்டி அப்படியே கீழே விழுந்ததில் மண்டையில் அடிப்பட்டு காது மற்றும் மூக்கில் ரத்தம் வந்தது. இதை நான் நேரடியாக பார்த்தேன்' என கூறினார். இதை தொடர்ந்து, இந்திராணி தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் முடிவுக்கு வந்தனர். தன், 8 வயது மகனின் வாக்குமூலத்தால் தாயும்-தந்தையும் தப்பியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X