சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவோம்!

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவோம்!

கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்...' என்ற சொலவடைக்கு ஏற்ப, காலத்திற்கேற்ப பழைய பொருட்களிலிருந்து மாறி, தேவையான புதுமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக, உபயோகித்த பழைய பொருட்களை எல்லாம், வாசலில் போட்டு பொசுக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நாம் தான் தவறாக, பழமொழியை புரிந்து கொண்டிருக்கிறோம்.தொழிற்சாலைகள் பெருக்கம் மற்றும் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக, டில்லி நகரம், மாசில் சிக்கி, மனித வாழ்க்கையையே அச்சுறுத்தி வருகிறது.

சென்னை மாநகரும், அதிக மாசு கொண்டிருப்பதாகவே, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பனி மூட்டமும், மழை மேகங்களும் சூழ்ந்துள்ள இக்காலத்தில், பழையனவற்றை எரிப்பதால், கார்பன்- - டை -- ஆக்ஸைடு அதிகரிக்கிறது. அது, மேலே செல்லாமல், எரிக்கப்படும் பகுதிகளிலேயே பரவி, மூச்சுத் திணறலுக்கும், பிற நோய்களின் பெருக்கத்திற்கும் வழி வகுக்கிறது.

பனி நேரத்தில், நோய் எளிதாக பரவுவதுடன், விரைவாக குறையவும் செய்யாது. 'வேலியில் போகும் ஓணானை, இடுப்பில் விட்டு கொள்வதை போல' பழைய பொருட்களை வாசலில் எரிப்பதன் வாயிலாக, நோய்களுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ளோரை, புகை மண்டலம் சிரமத்துக்கு உள்ளாக்கும். நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது, புகையே இல்லாத போகி கொண்டாடுவதென்று, இப்போதே முடிவு செய்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்ட வேண்டும்.

இந்த முடிவு, ஏதோ ஊருக்காக எடுப்பதாக தயவு செய்து, யாரும் தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. இந்த முடிவு, நமக்காகவும், நம் குடும்பத்தாருக் காகவும் எடுக்கப்படுகிறது என்பதை, உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, போகி பண்டிகையை புகையில்லாத பண்டிகையாக்கி, மனிதர்களின் ஆரோக்கியம் ஏற்பட வழி செய்வோம். ஆரோக்கியமே, ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் என்பது, யாரும் அறியாததா?

இதை செய்தால் தரமான, 'சீரியல்'கள் வர வாய்ப்பு!
ஆர்.கிருஷ்ணசுவாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்று, பிரபல சினிமா டைரக்டர் சாந்தாராம், தகேஜ் என்ற ஹிந்தி படத்தை தயாரித்தார். அது, வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதைப் பார்த்த பல இளைஞர்கள், 'வரதட்சணை வாங்க மாட்டோம்' என, சபதம் மேற்கொண்டனராம்; அந்த படம் சமுதாய சீர்த்திருத்தத்திற்கே வழி காட்டியது. இன்று, தனியார், 'டிவி' சீரியல்களில், பெண்களை இழிவுபடுத்தும் தொடர்கள் தொடர்கின்றன. பெண்களே சதி செய்வோராகவும், குடும்பத்தில் குழப்பம் விளைவிப்போராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

பெண்களை கொடுமைப்படுத்துவதும், அவமதிப்பதும், பெண்களுக்கு எதிராக பெண்களையே மோத விட்டு வேடிக்கை பார்ப்பதும் சீரியல்களில் நடக்கின்றன. அபத்தமான வசனங்களை உதிர்ப்பதும், அருவருக்கத்தக்க காட்சிகளை காட்டுவதும், தொடர் கதையாகி விட்டது. இன்று, நாட்டு நடப்பை பார்க்கும் போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, சிறுமியர் கொலை செய்யப்படுகின்றனர்.

வயது வந்த பெண்களும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி, கொடிய செயல்களை துணிந்து செய்கின்றனர், சில வக்ர புத்தியுடைய, விபரீத ஆசையுடைய, காமக் கொடூரர்கள். இதுபோன்ற சீரியல்களை காணும், காமக் கொடூரர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி, கொஞ்சமாவது, 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிந்தித்து பார்ப்பது உண்டா? வெள்ளித் திரையாயினும், சின்னத் திரையாயினும், அது வெறும் பொழுதுபோக்கு மட்டும் என நினைக்காதீர்கள். அது, சமுதாயத்திற்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை, தயாரிப்பாளர்களுக்கு இருக்க வேண்டும்.

சமுதாய சீர்கேட்டிற்கு இடம் தராமல், சமுதாய முன்னேற்றத்திற்கு வழி காட்டும் தரமான கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத் தான் மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.சினிமா படங்களுக்கு, மத்திய தணிக்கைக் குழு சான்று தருவது போல, சின்னத்திரையில் புரளும் சீரியல்களுக்கும், சான்று வழங்க வேண்டும். சீரியல்களை, சட்டம் - ஒழுங்கு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான், தரமான சீரியல்கள் வர வாய்ப்பு ஏற்படும்!

கர்நாடக இசையை அனைவரும் ஏற்கணும்!
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, அனைவரும் ஜாதி பேதமின்றி, கர்நாடக இசையை ரசித்தனர். திரை இசை, மக்களின் ரசனையை கவர்ந்தது. சில ஆண்டுகள் முன் வரை, திரை இசை ஜனரஞ்சகமாயிருந்தது, உண்மையே! இதன் வாயிலாக, பல பாடல்கள், 'ஹிட்' ஆகும். அதை முணுமுணுப்பதும், அதை பற்றியே பேசுவதும், மக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்தது. ஆனால் இன்று, திரை இசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு பாடலும் மனதில் நிற்பதே இல்லை. சமீபத்தில், சென்னை இசை விழா இனிதே நிறைவடைந்தது.
மார்கழி முதல் தேதியில் துவங்கி, 40க்கும் மேற்பட்ட சபாக்களில், ஏராளமாக கச்சேரிகள் நடந்தேறின. பல புரவலர்கள் அளித்த நன்கொடைகளை மட்டுமே வைத்து இவ்விழா நடந்தது. வழக்கம் போல், ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே, பெருமளவில் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்து ரசித்தனர். இவ்வளவு இனிய இசையை, மற்றவர்கள் புறக்கணிப்பது வேதனை.கர்நாடக இசையின் நுணுக்கங்கள் புரியாவிட்டாலும், அதில் உள்ள இனிமை, மனதிற்கு பெரும் அமைதி தரக்கூடியது. இறை பக்தியை கருவாக்கி, உருக்கமான ராகங்களில் பாடப்படும் பாடல்கள், கவலைகளை சற்றேனும் மறக்க செய்கின்றன.

ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அதையே பாடி கச்சேரிகளில் பாடகர்கள் மகிழ்விக்கின்றனர். தங்கள் முன்னேற்றத்துக்கும், அதுவே உகந்த வழி என்று புரிந்து கொண்டுள்ளனர். பல மொழிகளில் பாடினாலும், தமிழுக்கு உயர்ந்த ஒரு இடம் கச்சேரிகளில் என்றும் உண்டு. கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், அருணாச்சல கவி போன்றோரின், தமிழ் பாடல்கள் இடம் பெறாத நிகழ்ச்சியே இல்லை.

ராகம், தானம், பல்லவி பாடும் போதும், தமிழிலேயே பல்லவி வரிகளை அமைத்து, பலர் பாடுகின்றனர். கச்சேரி கேட்க பெரிதாக, பார்வையாளர்கள் செலவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. பல முன்னணி கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், பல இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டன. மக்களின் கவனம் பாரம்பரிய இசையின் பக்கம் திரும்பினால் நன்றாக இருக்கும். கர்நாடக இசை ஒரு ஜாதியினரின் உடைமை என்ற நிலை மாறி, அனைவரும் அதில் ஈடுபடும் நிலை வர வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
13-ஜன-202009:03:32 IST Report Abuse
venkat Iyer திரு.கபாலி கூறுவது போல நான் நரம்பு தளர்ச்சி மற்றும் மன அழுத்தம் கொண்ட நோயாளி என்ற நிலையில் என்னால் பொதிகையில் மார்கழி உற்சவத்தில் பல்வேறு கீர்த்தனைகளில் பலர் பாடுவதை தினமும் கேட்டு வருவது எனது மனதுக்கு புதிய உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பல ஜாம்பவான்கள் ஸ்ருதி பிசகாமல் கண்ணை மூடிக்கொண்டு பல் வேறு கீர்த்தனைகளை தமிழ் ,தெலுங்கு மற்றும் பல மொழிகளில் பாடி வருவது மனதுக்கு இனிமையாக உள்ளது.இந்துஸ்தானிய இசையும் கூட கேட்பதற்கு அமைதியை கொடுக்கின்றது. பல்வேறு சமுகத்தினை சார்ந்த இளம் தலைமுறைகள் இதனை விரும்பி ஆர்வத்துடன் கேட்க வேண்டும் .நான் தொலை காட்சியில் பேட்டியில் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நண்பர் ஒருவர் கர்நாடக இசையை கேட்டு அதை பற்றி கூறும்போது இந்த ராகங்கள் அனைத்து வயதினரும் கேட்கும் வகையில் ,மொழி மற்றும் புரிதல் இல்லாத நிலையில் ரம்மியமாக ஏதோ ஒரு விதத்தில் மன நிம்மதியை கொடுப்பதாக கூறியுள்ளார். இளையராஜா அவர்களுக்கு பின்னர் வரும் இசையமைப்பாளர்கள் ,இசைக்கும் பாடல்கள் இந்திய ராகங்களுக்கு அப்பால் பட்டு செல்கின்றது உண்மையில் இது வருத்தப்பட வேண்டிய விஷயம். நண்பர் கூறுவது போல பெரியவர்கள் மொழிகளை கடந்து இளம் சந்ததிகளுக்கு பாடல்களை கற்று கொடுப்பது அவர்களிடத்து கோபமும், வன்முறையும் குறைக்க வழிவகுக்கும். யோசிப்பார்களா?.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜன-202006:24:47 IST Report Abuse
D.Ambujavalli பழைய திரை இசைப் பாடல்களில், வாத்தியங்கள் பின்னணியில் இருந்ததால் பாடல் வரிகள் மனதில் நின்றன. அதிலும் நல்ல கர்நாடக இசையின் மெட்டுக்களில் இருந்தவை இன்றும் சிரஞ்சீவியாக மக்கள் மத்தியில் உலா வருகின்றன நூறு மேற்கத்திய வாத்தியங்களுக்கிடையில், வரிகள், அதுவும் கேட்க சகிக்காத சொல்லடுக்குகள், நெஞ்சில் நிற்பதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X