சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில் அதன்பின் நடந்த மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அவரது கட்சியினர் கோட்டை விட்டுள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கட்சி மாறிஓட்டுப் போட்டதால் அ.தி.மு.க. அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சிக்கு சாதகமாக 'உள்ளடி' வேலைபார்த்த நிர்வாகிகள் மீது ஸ்டாலின் கோபத்தில் உள்ளார்.
ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் டிச.27, 30ல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 44 சதவீத ஓட்டுகள் பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்கு 38 சதவீத ஓட்டுகள் தான் கிடைத்தன. 'எங்களுக்கு தான் அமோக வெற்றி கிடைத்து உள்ளது; தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கூறினார். மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களாக தி.மு.க. வினர் அதிகளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவிகளை தி.மு.க. பெருமளவு கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்கு தி.மு.க.வினரின் 'உள்ளடி' வேலைகளே காரணம். ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒன்றிய தலைவர் பதவிகளை ஆளுங்கட்சியினர் கைப்பற்ற தி.மு.க. நிர்வாகிகளே மறைமுகமாக உதவியுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் சரிபாதியாக உள்ளனர். தி.மு.க. நிர்வாகி ஒருவரின் பின்னணியில் அங்கு குலுக்கல் முறை தேர்வு நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் இருவர் ஓட்டு போட்ட வினோதமும் அரங்கேறியது. தி.மு.க.வினர் அதிகஅளவில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்ய தி.மு.க. மாவட்டச் செயலர்கள் திட்டமிட்டதாகவும் அதற்கேற்ற வகையில் காய்நகர்த்தினர்.
கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய செயலர்கள் பலர் அந்தப் பதவிக்கு வர விரும்பினர். இதற்கு மாவட்டச் செயலர்கள் சம்மதிக்காததால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களிடம் தி.மு.க. ஒன்றிய செயலர்கள் கைகோர்த்தனர். தங்கள் ஆதரவு கவுன்சிலர்களை அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக ஓட்டுபோட வைத்தனர். இந்த உள்ளடி வேலைகளுக்காக ஆளும் கட்சியினரிடம் கணிசமான தொகையை 'கட்டிங்'காக பெற்றுக் கொண்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்களாக முற்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சி மேலிடத்திடம் புகாரும் தெரிவித்துள்ளனர். இதனால் தி.மு.க. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மீது ஸ்டாலின் கோபத்தில் உள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மற்றும் காலை வாரியவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பு அவரின் நம்பிக்கைக்குரியவர்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். ஜன.21ல் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது. அதற்கு முன் 'கட்டிங்' பெற்ற நிர்வாகிகள் பட்டியல் ஸ்டாலின் கைக்கு கிடைத்துவிடும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE