பொது செய்தி

தமிழ்நாடு

கையகப்படுத்துமா? ஸ்தலசயனர் கோவிலை தொல்லியல் துறை... சீரழிவதை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 கையகப்படுத்துமா? ஸ்தலசயனர் கோவிலை தொல்லியல் துறை... சீரழிவதை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தொல்லியல் பகுதியில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் சீரழிவை தவிர்க்க, அக்கோவிலை, தொல்லியல் துறை கையகப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கலைச்சிற்பங்கள், உள்ளன. சர்வதேச பாரம்பரிய கலை, சுற்றுலா இடமாக விளங்குகிறது.பயணியர் குவிகின்றனர்இங்குள்ள, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் காண, உள், வெளிநாட்டுப் பயணியர் குவிகின்றனர்.இது ஒருபுறமிருக்க, ஆன்மிக இடமாகவும், இவ்வூர் சிறப்பு பெற்றது. 108 வைணவ கோவில்களில், 63வதாக விளங்கம் ஸ்தலசயன பெருமாள் கோவில்,இங்கு தான் உள்ளது.பல்லவர்கள், கடற்கரைக் கோவிலை, சைவ, வைணவ என, தனித்தனி சன்னிதிகளுடன் அமைத்தனர். வைணவ சன்னிதியில், அதே பகுதி பாறையில், ஸ்தலசயன பெருமாளுக்கு, தரையில் சயன நிலையில் சிலை வடித்து, பக்தர்கள் வழிபட்டனர்.ஆட்சி மாற்றங்களைத் தொடர்ந்து, வழிபாடு இன்றி, கோவிலை மணல் சூழ்ந்தது. ஆங்கிலேயர், இதை வெளிக்கொணர்ந்து, தற்போது, தொல்லியல் துறை, கலைச்சின்னமாக பராமரித்து, பாதுகாக்கிறது.
கடற்கரை கோவிலை கடல் சூழலாம் என, கருதி, விஜயநகர அரசின், பராங்குச மன்னன், இதற்கு மாற்று கோவிலாக, ஸ்தலசயன பெருமாளை கோவிலை அமைத்தார்.இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை, ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்டோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நில தோஷ பரிகார கோவிலாகவும், சிறப்பு பெற்றுள்ளது. பூதத்தாழ்வார், கோவில் அருகில் அவதரித்ததும் குறிப்பிடத்தக்கது.தொல்லியல் துறை நிர்வகிக்கும் அர்ச்சுனன் தபசு சிற்பம், சிறப்பாக பராமரிக்கப்படும் நிலையில், அதை ஒட்டியுள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறை, முறையாக பராமரிக்காததால், சீரழியும் அவலத்தில் உள்ளது.
தொல்லியல் சின்னம்
தொல்லியல் பகுதி கோவில் என்பதாலும், பல நுாற்றாண்டு பழமை என்பதாலும், கோவிலை கையகப்படுத்த முடிவெடுத்து, தொல்லியல் துறை, 2012ல் அறிவித்தது. தொல்லியல் சின்னம் அருகில், 100 மீ., சுற்றளவு பகுதியில், கட்டுமானம் அமைக்க கூடாது என்பது விதி.ஆதலால், தொல்லியல் துறை பராமரிப்பில் கோவில் செல்ல கூடாது என, சிலர் முடிவெடுத்து, இதற்கு எதிராக மக்களை துாண்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது.
இச்சூழலில், தனியார் ஒருவர், கோவில் நிர்வாக அனுமதி பெறாமல், தொல்லியல் விதிகளுக்கு புறம்பாக, கோவில் வளாகத்தில், புதிய மண்டபம் அமைத்து, அதற்கு மட்டும், கும்பாபிஷேகம் நடத்தினார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின் பிங், முறைசாரா மாநாடாக, இங்கு சந்தித்தபோது, கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப் பட்டது.
ஆக்கிரமிப்பு
தற்போது, மீண்டும், நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சுற்றுப்புற உணவக, பயணியர் வீசும் குப்பை குவிக்கப்படுகிறது. இரவில், சமூகவிரோத அவலம் அரங்கேறுகிறது.கோவிலை கையகப்படுத்துவதை எதிர்த்து, சுயநலத்துடன் போராடியவர்கள், தற்போதைய சீரழிவை கண்டுகொள்ளவில்லை.திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலை, தொல்லியல் துறை பராமரிக்கிறது. வழிபாட்டு நிர்வாகமோ, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளது.அதேபோல், பாரம்பரிய பகுதி தன்மை, ஸ்தலசயன பெருமாள் கோவில் பராமரிப்பு கருதி, தொல்லியல் துறை, இக்கோவிலையும் கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X