பொது செய்தி

தமிழ்நாடு

நிகழ்கால நிஜங்களை ஊடகங்கள் பேச வேண்டும்! சொல்கிறார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் நக்கீரன்

Added : ஜன 13, 2020
Advertisement
 நிகழ்கால நிஜங்களை ஊடகங்கள் பேச வேண்டும்!  சொல்கிறார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் நக்கீரன்

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் எழுத்தின் போக்கு மாறும். அப்படியான போக்கை, ஐந்தாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பக்கம் திருப்பியவர், எழுத்தாளர் நக்கீரன். திருவாரூக்கு அருகில் உள்ள, நன்னிலத்தில் பிறந்த இவரின், 'காடோடிகள்' நாவல், சுற்றுச்சூழல் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவரிடம் பேசியதிலிருந்து:சுற்றுச்சூழல் குறித்து எழுத, உங்களுக்கு களமாக அமைந்தது எது?
நான், 1980களின் பிற்பகுதியில், மலேஷியாவுக்கு அருகில் உள்ள, போர்னியோ தீவுக்கு, வேலைக்குச் சென்றேன். அங்கிருந்த மலை, மரங்களை, ஒரு பன்னாட்டு நிறுவனம், மரச்சாமான்கள் தயாரிப்புக்காக வெட்டிக் கொண்டிருந்தது.வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுப்பது உள்ளிட்ட கணக்கர் பணி தான் எனக்கானது. ஆண்டுகள் செல்லச்செல்ல, காடுகள் இருந்த பகுதி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வெட்டவெளியாவதும், அதிலிருந்த உயிரினங்களும், பழங்குடிச்சமூகமும் நிர்க்கதியாவதும் கண்முன் தெரிந்தது.தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. வேலையை விட்டுவிட்டேன். இப்படியாக என் கண் முன் நடந்த காடழிப்பு சம்பவங்கள் தான், என் எழுத்துக்கான களமாக அமைந்தன. அதிலிருந்து பிறந்தது தான், 'காடோடிகள்' நாவல்.
இந்த காடழிப்பில் அந்த நாட்டின் பங்கு என்ன?
உலக வணிகமயமாக்கலில், எல்லா நாடுகளும், ஏதோவொரு இயற்கை வளத்தை இழந்து வருகிறது. இதில், அந்த நாட்டுக்கு எந்த பயனும் கிடைக்காது. ஏதோ ஒரு பன்னாட்டு பெருநிறுவனம், எந்த நாட்டுக்கான தளவாடத்தையோ செய்வதற்காக, ஏதோ ஒரு நாட்டின் இயற்கையைக் கைப்பற்றுகிறது. காங்கோ, அமேசான் என, பூமிப்பந்து முழுக்கவே, இந்த துர்சம்பவங்கள் நடக்கின்றன. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபமடைகின்றன. இது ஒரு வகை அரசியல். அதில் சிக்கிய நாடுகள் பாதிக்கப்படுகின்றன.
'காடோடிகள்' நாவல் ஏற்படுத்திய தாக்கம்?
நாவல் வெளிவந்த பின், 40க்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில், வாசகர்களுடன் உரையாடல்கள் நடந்தன.காடோடிகள் நாவலுக்கு முன், 'அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்தது' என்பது போல் தான், இயற்கையைப் பற்றி எழுதுவர். ஆனால், என் நாவல் வெளிவந்த பின், மரத்தின் பெயர், பறவையின் பெயர், அதன் வாழ்விடம், வளரியல்பு குறித்தெல்லாம் எழுதுகின்றனர். இப்படி முதலில், எழுத்தாளர்களிடம் மாற்றம் வந்தது.ஒரு நாவலையோ, கட்டுரைத் தொகுப்பையோ படித்தால், வாசகர்கள் அதைப்பற்றி பேசுவது தான் நடைமுறையில் இருந்தது. ஆனால், காடோடிகள் நாவலைப் படித்த பின், நுாறில் பத்து பேர், செயல்பாட்டாளர்களாக மாறினர்.30 ஆண்டுகளாக, காடுகளில், 'ட்ரெக்கிங்' போனவர்கள் கூட, 'நாங்கள் வெறும் அட்வென்சர் டூராகத் தான் போயிருக்கிறோம். அதனால், அந்த காட்டின் தன்மை, உயிர்ப்பு பற்றி அறியவில்லை. உண்மையான காட்டை, நீங்கள் தான் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்' என்றனர்.
நீங்கள் அடிக்கடி மாணவர்களை சந்தித்து பேச என்ன காரணம்? அவர்களின் மனநிலை எப்படி உள்ளது?
எனக்கு சுற்றுச்சூழல் பற்றி யாரும் சொல்லித் தரவில்லை. இப்போது எனக்குத் தெரிவதை, மாணவர்களிடம் சொல்லவே மாணவர்களை சந்திக்கிறேன். நான் பேசத்துவங்கும் போது, அவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி பெரிதாக எதுவும் தெரிவதில்லை.ஆனால், பேசி முடிக்கும் போது, அன்றாட வாழ்வியலிலிருந்து, புவி வெப்பமயமாதல் வரை விளக்குவேன். நான் பேச்சை முடிக்கும் போது, அவர்கள், கேட்கும் கேள்விகளில் இருந்து, அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களாக இருப்பர்.
உங்களைப் பின்பற்றி செயல்பாட்டாளர்கள் வரும் போது எப்படி உணர்கிறீர்கள்?
என் எழுத்து, வெறும் ரசனைக்குரியதாக மட்டுமல்லாமல், செயல்பாட்டிற்கானது என நினைக்கும் போது, நான் எழுத்தாளனாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன்.பலர், என் கதைமாந்தரான, 'பில்லியோ'வாக மாற ஆசைப்படுவதாக கூறுவர். பழங்குடியினரை புரிந்துகொள்வதாக உணர்ச்சிவசப்படுவர். இதைவிட, எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்.
உங்களின் சமீபத்திய படைப்பு?
'நீர் எழுத்து' தான் என், தற்போதைய படைப்பு. வெளியிட்டு ஒரு மாதத்துக்குள் முதல் பதிப்பு தீர்ந்துவிட்டது.
நீர் எழுத்தில் நீங்கள் பேசுவது எதைப்பற்றி?
மழை, நீர் மேலாண்மை, நீர் பண்பாடு, நீர் பங்கீடு, நீர் அறிவியல், நீர் அரசியல், நதிநீர் இணைப்பு, வறட்சிக்கான தீர்வுகள் என, எல்லாவற்றையும் அது பேசுகிறது. அது, தண்ணீருக்கான ஆவணமாக இருக்கும்.
சுற்றுச்சூழல் செயல்பாட்டில் யாரெல்லாம் கைகோர்க்க வேண்டும்?
உயிருள்ள ஒரே கோள் பூமி. அதைப் பாதுகாக்கும் கடமை எல்லாருக்கும் உள்ளது. அதன் முதல் வரிசையில், ஊடகங்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் இருக்க வேண்டும்.
ஊடகங்கள் எதைச் செய்ய வேண்டும்?
பெரும்பாலான ஊடகங்கள், தற்கால நிகழ்வுகளை மட்டுமே பேசுகின்றன. மற்ற விஷயங்களை மறந்துவிடுகின்றனவா அல்லது மறக்கடிக்கிறதா என்பது தெரியவில்லை. கேட்டால், மக்கள் விரும்புவதை கொடுக்கிறோம் என்பர். ஆனால், நிகழ்காலத்தைப் பாதித்த இறந்த காலத்தையும், எதிர்காலத்தைப் பாதிக்கப்போகும் நிகழ்கால நிஜங்களையும், ஊடகம் தானே பேச வேண்டும். அது தானே மக்களுக்கான அறம். அதை மறந்துவிடும் போது வேதனையாக இருக்கிறது. ஒரு காடு பற்றி எரிந்தால், அது அந்த நாட்டுக்கும், காட்டு உயிரிகளுக்குமான பாதிப்பு இல்லை. அது, பூமிக்கான பாதிப்பு. அதனால் உயரப்போகும் வெப்பநிலை, அது நிகழ்த்தப் போகும் மாற்றங்களை ஊடகங்கள் உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும். இப்படி, காற்று, நீர், நிலம், ஆகாயம் என, அனைத்திலும், ஊடகத்தின் பங்கு இருக்க வேண்டும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X