தமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா| Dinamalar

தமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (3)
Share
இன்று சித்த மருத்துவ தினம் கத்தியம் என்பது ஒரு மரபு. இம்மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறு, உடல் செயலியல், அறுவை, மனநோய், மந்திரம், தந்திரம், மருத்துவம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம், இலக்கணம் என அகத்தியர் பல்வேறு தமிழ் அறிவியல் தந்ததால் முதல் சித்தராக வணங்கப்படுகிறார். கம்போடியா, வியட்நாம் நாடு களிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர்
தமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா

இன்று சித்த மருத்துவ தினம்
கத்தியம் என்பது ஒரு மரபு. இம்மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறு, உடல் செயலியல், அறுவை, மனநோய், மந்திரம், தந்திரம், மருத்துவம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம், இலக்கணம் என அகத்தியர் பல்வேறு தமிழ் அறிவியல் தந்ததால் முதல் சித்தராக வணங்கப்படுகிறார். கம்போடியா, வியட்நாம் நாடு களிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர் பிறந்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரமான இன்று (ஜன.,13) சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.


தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் தொடாத அறிவியலே இல்லை. பண்டைய தமிழ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று, பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றில் சிறப்புடன் விளங்கினர்.


அறுவை சிகிச்சை


7ம் நுாற்றாண்டில் மங்களபட்டி என்ற ஊரில் ராஜாவின் மகள் பிரசவிக்க முடியாமல் தலை திரும்பி கஷ்டப்படும்போது குழந்தையை உயிருடன் எடுத்து தர மங்களை என்ற மருத்துவச்சி முன்வந்தாள். தாயை ஒரு அறையில் வைத்து மகிழ்வூட்டும் அபினி, சாராயம் போன்ற மருந்துகளை கொடுத்து, வயிற்றைக் கிழித்து குழந்தையை உயிருடன் எடுத்து பழையபடி வயிற்றை தைத்து புண்ணை ஆற்றி தாயை பிழைக்க வைத்து அறுவை சிகிச்சை செய்தார். இதனை கொங்குசதகம் என்ற நுால் குறிப்பிடுகிறது.

போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற வீரர்களின் மார்பு சதையை வெள்ளி ஊசி கொண்டு தையல் போடுவது தமிழர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊசி தோலின் வெளிப்புறத்திலிருந்து காயத்தின் உள்ளே சென்று குத்தி தைத்து வெளியே வரும்போது வெள்ளி ஊசியின் நிறம் சிவப்பாக மாறி இருக்கும். ஊசியின் நுனியில் தையல் நாரும் ஒட்டி வரும். இது பார்ப்பதற்கு மீனைக் கொத்திக் கொண்டு நீரில் இருந்து எழும் சிரல் என்ற மீன்கொத்திபோல இருக்கும் என்பதை “மீன்தேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிரல்-பெயர்ந் தன்ன நெடுவெள்சி” என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.


தமிழ் மருத்துவத்தில் பழங்காலத்தில் வெட்டுப்பட்ட உறுப்புகள் மற்றும் சதையையும் தைக்கும் அறுவை தையல் முறை சிகிச்சை இருந்தது என்பதை அறிய முடிகிறது.மகளிர் செவிலியர் “மெல்இயல் மகளிர் நல்அடி வருட, செம்முகச் செவிலியர் கைம்மிக குழிஇ” என நெடுநல் வாடையும், “அஞ்சுவரு நோயோடு துஞ்சாததேனே” என அகநானுாறும் அழகிய இளம்பெண்கள் அரசியருக்கு உடலை மென்மையாக பிடித்து வருடும் தொக்கண சிகிச்சை செய்து துாங்க வைத்தனர் என தமிழ் மருத்துவத்தின் சிறப்பை வெளிப் படுத்துகிறது.

“நல்லாரிழிது சோ கவளம் வைத்துப் புதுமுகன் பாவை மார்பி ணெய்கிழி பயிலச் சேர்த்தி” என சீவக சிந்தாமணி பெண் செவிலியர்கள், காயமடைந்த போர்வீரர்கள் புண் ஆற்ற நெய்யால் செய்யப்பட்ட மருந்துகளை துணியில் தடவி கட்டு போட்டனர் எனக் குறிப்பிடுகிறது. மருத்துவப் புலவர்கள் சங்க காலத்தில் பல மருத்துவப் புலவர்கள் இருந்தனர். கடுகுபெருந்தேவனார், காபட்டனார், வெள்ளெருக்கிலையார், காரியாசான், மதுரை வேலாசான், சல்லியக்குமரன், மருத்துவன் தாமோதரனார், மருத்துவ நல்லச்சுதனார் போன்ற மருத்துவப் புலவர்கள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்பவர்களின் மருத்துவ குறிப்புகளை பாடல்களாக தங்கள் நுால்களில் எழுதியுள்ளனர்.


தமிழ் மருத்துவர்கள்
சங்க கால தமிழ் மருத்துவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டனர். அறம் சார்ந்த முறையில் சிகிச்சை அளிப்பதால் அறவோன் என நற்றிணை, மெய்மையின் அடிப்படையில் சிகிச்சை வழங்குவதால் சான்றவர், துயரத்தை நீக்குவதால் அரஞர், நோய்களைக் களைவதால் களைநர் என கலித்தொகை, அறுவை சிகிச்சை மூலம் உடலில் தங்கியுள்ள அம்பு, வாள் போன்ற உலோகங்களை நீக்குவதால் சல்லியன் என திருமுக்கூடல் கல்வெட்டு, கசப்பான மருந்தைக் கூட தேன் சுவை மருந்தாக மாற்றி தருவதால் மருந்தாளர் என பெருங்கதை, மருந்துகளை உரைத்து வழங்குவதால் மருந்துறையோன், இன்னுயிரை காப்பதால் இன்னுயிர் போத்தர், தங்கள் அறிவுத் திறமையால் பல்வேறு இயற்கை பொருட்களை மருந்தாக மாற்றி தருவதால் அறிவனார் என சங்க நுால்கள் மருத்துவர்களின் வேறு பெயர்களை குறிப்பிடுகின்றன.


மருத்துவமனை மருத்துவமனை மருத்துவனில்லம் என்றும் ஆதுரகச் சாலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதுரர் என்பவர் ஆதரவு அற்றவர். நோயினால் பீடிக்கப்பட்டவர். நோயினால் பீடிக்கப்பட்ட ஆதுரர் களை தங்கவைத்து கவனிக்கும் இடம் என்பதால் ஆதுரகச்சாலை என்று அழைக்கப்பட்டது. மருத்துவத்திற்காக வருடாந்திர பட்ஜட் போட்டு நிதி ஒதுக்குவது போல் ஆதுரகச் சாலையில் ஓர் ஆண்டுக்கான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டிருந்ததை சுந்தர சோழ விண்ணாசுர ஆதுரகச்சாலை பற்றிய திருமுக்கூடல் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அறிவியல் மருத்துவம்
சங்ககால தமிழ் மருத்துவர்கள் போரில் அடிபட்ட காயங்களை தழும்பின்றி ஆற்றும் திறமை பெற்றிருந்தார்கள். “மருந்துகொள் மருந்தின் வாழ்வடு மயங்கி வடுவின்றி வரிந்த யாக்கையான்” என புறநானுாறு குறிப்பிடுகிறது. அத்திப்பாலைத் தடவி வடுவின்றி புண்களை ஆற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை முறையை தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்திய வழக்கம் கண்டறியப்பட்டுள்ளது.


பல்வேறு இலக்கிய நுால்களில் புண்களுக்கு பஞ்சு வைத்து கட்டி புண்களை ஆற்றுதல், உடலில் சென்று விட்ட உலோகத் துண்டுகளை காந்தம் மூலம் பிடித்து வெளியேற்றுதல், நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் வெண்கடுகை எரித்து புகை மூட்டுதல், வெண்கடுகுடன்நெய்யை சேர்த்து அரைத்து கிருமிகள் தொற்றா வண்ணம் நோயாளி உடல் மற்றும் அவர் தங்கியிருந்த இடங்களை சுத்தம் செய்தல் என தமிழ் மருத்துவம் அறிவியல் சார்ந்த மருத்துவ முறையாக தொன்று தொட்டு திகழ்ந்து வருகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சை
கம்பராமாயணத்தில் அனுமன் சீதையை பார்க்க பல்வேறு மலைகளை கடந்து செல்லும்போது பல்வேறு மருத்துவ முறைகள் அக்காலத்தில் தமிழ்க்குடி வழக்கில் இருந்ததை கம்பராமாயண அடிகளின் மருத்துப்படலத்தின் மூலம் கம்பர் விளக்குகிறார். உடம்பில் பாய்ந்த அம்பு, வாள் போன்ற ஆயுதங்களை கவனமாக நீக்கும் சல்லிய மருத்துவம், உடைந்து அல்லது கழன்றுபோன மூட்டு களை மறுபடியும் பொருத்தும் மூட்டு மாற்று சிகிச்சை, காயத்தினால் உடல் அழுகி உயிர் போகும் நிலையில் உயிரை மீட்டு தரும் அவசரகால மருத்துவம் மற்றும் விபத்தினால் உருக்குலைந்த தோல் காயங்களை ஆற்றி மறுபடியும் நன் நிறத்தை மீட்டுத்தரும் நெகிழுறுப்பு மருத்துவம் என்ற பிளாஸ்டிக் சர்ஜரி ஆகிய நான்கு வகை தமிழர் சல்லிய மருத்துவ முறையை குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்கது.


உறுப்புகளை நீக்கிய பின்பு செயற்கை உறுப்புகளை பொருத்தும் சிகிச்சை முறைகளிலும் தமிழர்கள் சிறப்பு பெற்றிருந்தனர். தான் இழைத்த தவறுக்கு தனது கையை வெட்டிய பாண்டிய மன்னன் ஒருவன், அரண்மனை வைத்தியர்கள் மூலம் பொற்கையை பொருத்தி பொற்கை பாண்டியன் ஆனதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. மனநோய், அழகு மருத்துவம்பழங்காலத்தில் தமிழர்கள் உடல் மற்றும் மனநோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். “பையளும் சிறுமையும் நோயின் பொருள்” என உடலில் தோன்றும் நோயை பையள் என்றும் உள்ளத்தில் தோன்றும் நோயை சிறுமை என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.


தமிழ் மருத்துவத்தில் அழகு சிகிச்சை பெரும் பங்கு வகித்தது. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மருந்துகளை பயன்படுத்தினர். பெண்களுக்கு அழகு சிகிச்சை செய்வதற்காக வண்ண மகளிரும், ஆண்களுக்கு அழகு சிகிச்சை செய்வதற்காக கோல வித்தகர்களும் இருந்ததாக பெருங்கதை குறிப்பிடுகிறது. சீவக சிந்தாமணியில் முகத்திற்கு அழகு செய்யும் தமிழ் மருத்துவ முறைகள், பெருங்கதையில் உதடுக்கு சாயம் இடும் தமிழ் மருந்துகள், நகம் வெட்டி அதனை அழகுபடுத்துவதற்காக செய்யும் பூச்சு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


கண்களுக்கு மையிட்டு அழகு படுத்தும் முறையை ஐங்குறு நுாறு மற்றும் புறநானுாறும், கூந்தலில் உள்ள பொடுகு, சிக்கு போன்றவற்றை நீக்க துாப புகை போடுதலை பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகிறது.

சித்தர்கள் கண்ட மெய்
அறிவியல் பல்வேறு ஓலைச் சுவடிகளிலும், குரு-சீடர் உபதேச மாகவும் சொல்லி வைத்தது, சித்த மருத்துவ நுாற்களாக இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. மெய்யியல் தமிழ் மருத்துவமே சித்த மருத்துவமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பிரபலமடைகிறது. சித்தமருத்துவம் நமது தாய் மருத்துவம். தாய் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வது போல் இம்மருத்துவம் நம்மை என்றென்றும் காக்கும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவ எழுத்தாளர்மதுரை 98421 67567


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X