சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற பெண்ணுக்கு, 'காப்பு!'

Added : ஜன 13, 2020
Advertisement

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, எம்.எஸ்.முத்துநகரைச் சேர்ந்த ராஜேஷ், 30, வெங்கடேச புரத்தைச் சேர்ந்த பத்மா, 55, ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக, போலீசாருக்கு புகார்கள் சென்றன. அவர்களை கண்காணித்து வந்த புளியந்தோப்பு போலீசார், நேற்று, மது விற்க முயன்ற அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இரு சக்கர வாகனம் திருட்டு
கோயம்பேடு: நெற்குன்றம், அகத்தியர் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 35; தனியார் நிறுவன ஊழியர். சில வாரங்களுக்கு முன், புதிதாக டூ - வீலர் வாங்கினார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். நேற்று காலை பார்த்த போது, டூ - வீலர் திருடு போனது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் டூ - வீலரை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கடையில் பணம், 'அபேஸ்'
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த வடகரை, பாடசாலைச் தெருவை சேர்ந்தவர் முத்து, 65; இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, 7:00 மணி அளவில், கடை திறக்க சென்றார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 3,000 ரூபாய் திருடு போயிருந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஐ.டி., ஊழியரிடம் மொபைல் பறிப்பு
ஆயிரம்விளக்கு: பூந்தமல்லி, திருமலை நகரைச் சேர்ந்தவர், ஹாரீஷ், 21. இவர், அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலையில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 10ம் தேதி இரவு பணி முடிந்து, பேருந்து நிறுத்தம் செல்ல, அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். ஆயிரம் விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்றவர்களுக்கு, 'கம்பி!'
மாம்பலம்: மாம்பலம் காவல் நிலைய எல்லையில், லாட்டரி சீட்டு விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், தி.நகர், ரங்கநாதன் தெருவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட, நாகர்கோவில், வடசேரியைச் சேர்ந்த காட்சன், 23, என்பவரை கைது செய்தனர்.
விருகம்பாக்கம்: விருகம்பாக்கத்தில், லாட்டரி விற்பனை நடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், அபுசாலி தெருவில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். பிடிபட்டவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்த வீரபத்திரன், 39, என தெரிய வந்தது. இவர், இணையதளத்தில், லாட்டரி சீட்டுகளை பெற்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அடிதடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
சூளைமேடு: சூளைமேடு, வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார், 41. ராயப்பேட்டையில் உள்ள மாலில் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மகளை, சூளைமேடு, சுபேதர் கார்டனைச் சேர்ந்த கார்த்திக், 24, என்பவர், காதலித்து வந்ததாகவும், இதற்கு, ரமேஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை மது போதையில், ரமேஷ் குமார் வீட்டிற்கு சென்று, கார்த்திக் தகராறில் ஈடுபட்டார். மேலும், உருட்டுக் கட்டையால், ரமேஷ் குமாரை தாக்கினார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூளைமேடு போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.ஏ.டி.எம்., கண்ணாடி உடைப்புஅண்ணா சாலை: அண்ணா சாலையில், தனியார் வங்கியின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு, திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், செக்யூரிட்டியாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஏ.டி.எம்., மையம் அருகே சுற்றித்திரிந்த போதை ஆசாமியை, செக்யூரிட்டி சீனிவாசன் விரட்டினார். இதில், அந்த நபர், அருகில் இருந்த கல்லை எடுத்து, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து, அந்த நபரை மடக்கி பிடித்து, அண்ணா சாலை போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்டவர், ஆயிரம்விளக்கு நடைபாதையில் வசித்து வரும், யுவன், 35, என, தெரிந்தது. அண்ணா சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு
திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சிவபெருமாள், 28; மூன்றாம் அணி சிறப்பு காவல்படை காவலர். இவரது மனைவி செல்வி, 24. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று, வீடு திரும்பிய போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரது, 3 சவரன் செயினை பறித்து தப்பினார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பத்திரிகையாளர் அன்பழகன் கைது
சைதாப்பேட்டை: பூந்தமல்லி, நல்லியம் நரசிம்ம நகரைச் சேர்ந்தவர் அன்பழகன், 50; பத்திரிகையாளர். புத்தக கண்காட்சி அரங்கில், மக்கள் செய்தி மையம் பதிப்பகம் சார்பில், தமிழக அரசுக்கு எதிராக, ஊழல் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளார். 'பபாசி' செயலர் முருகன், 'சர்ச்சைக்குரிய புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது' என, நேற்று முன்தினம், அரங்கில் இருந்த அன்பழகனிடம் பேசி உள்ளார். இதற்கு, அவர், முருகனை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில், சைதாப்பேட்டை போலீசார், நேற்று அன்பழகனை கைது செய்தனர்.
குப்பை கிடங்கில் ஆண் சடலம்
பள்ளிக்கரணை: பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளது. இதன் நுழைவு வாயிலில், நேற்று, 40 வயது மதிக்கத்தக்க ஆண், அமர்ந்த நிலையில் பலியாகி இருந்தார். பள்ளிக்கரணை போலீசார், உடலை மீட்டு, குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி, அவரது, அங்க அடையாளங்களை வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X