பெ.நா.பாளையம்:துடியலுார், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் நடந்த, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.கோவை மாவட்டத்தில் கடந்த மாதம், 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், விடுபட்டவர்கள் மற்றும் ஜன., 1, 2020 தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த, 4 மற்றும், 5ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.கோவை மாவட்டத்தில், 3,048 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன. கோவை மாவட்டத்தில் முதல் நாள் முகாமில், 17 ஆயிரம் பேரும், இரண்டாம் நாள், 36 ஆயிரத்து, 792 பேரும் படிவங்கள் அளித்திருந்தனர்.இதில், 18 முதல், 19 வயது வரை உள்ள வாக்காளர்கள், முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகளவில் பெயர் சேர்க்க படிவங்களை அளித்திருந்தனர். கடந்த, 4ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 4,640 பேரும்; இரண்டாம் நாள், 10 ஆயிரத்து, 35 பேரும் என, மொத்தம், 14 ஆயிரத்து, 675 பேர் படிவம் 6 அளித்திருந்தனர்.பெரியநாயக்கன் பாளையம் துடியலுார் வட்டாரங்களில், கடந்த இரண்டு வாரமாக நடந்த முகாமில், சுமார், 3,000 பேர் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை முகாமில் பங்கேற்று கொடுத்தனர்.பெரிய நாயக்கன்பாளையம் வட்டார வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் பிர்க்காவுக்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர் சேர்க்க இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். இவ்விரு பகுதிகளிலும் சுமார், 3,000 பேர் கடந்த இரண்டு வாரமாக நடந்த முகாம்களில், வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு படிவங்களை அளித்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE