பொது செய்தி

தமிழ்நாடு

விரக்தியில் விவசாயிகள்! கண்மாயில் தண்ணீர் வற்றியதால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு... நீர்நிலைகளை பராமரிக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்

Added : ஜன 13, 2020
Advertisement
 விரக்தியில் விவசாயிகள்! கண்மாயில் தண்ணீர் வற்றியதால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு...  நீர்நிலைகளை பராமரிக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்

நரிக்குடி:மாவட்டத்தில், பரவலாக பெய்த பருவமழையால் ஓரளவிற்கு நிரம்பிய நீர்நிலைகளை நம்பி விவசாயிகள் பலர் நெல் பயிரிட்டனர்.
பலன் கொடுக்கும் நேரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியதால் நெற்பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு பருவமழை தொடர்ந்து பெய்ததையடுத்து பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. இதனை நம்பி விவசாயிகள் பலர் நெல் பயிரிட்டனர். தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் பருவமழை பின்வாங்கியது. இந்நிலையில் நடப்பட்ட நெல் பயிருக்கு, நீர்நிலைகளில் இருந்த தண்ணீரை பாய்ச்சி, நன்கு வளர்த்து, மருந்து தெளித்து பக்குவத்திற்கு கொண்டு வந்தனர். பால் பிடித்து கதிராகி விளைச்சல் கொடுக்கும் நேரத்தில் நீர்நிலைகளில் இருந்த தண்ணீர் வற்றியது. பருவமழையும் பொய்த்ததால், பயிர்களை காப்பாற்ற, நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டிராக்டர் மூலமாகவும், கிணற்றுப்பாசனத்தின் மூலமாகவும் அதிக விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சினார். இன்னும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதால் தண்ணீருக்காக விவசாயிகள் படாதபாடுபடுகின்றனர். அவ்வப்போது மேகங்கள் கூடி வருவதால் எப்படியாவது மழை வந்து விடாதா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழை பொய்த்து போனதால் கண்மாய்களில் தேங்கிக்கிடக்கும் சேறு நிறைந்த தண்ணீரை ஆயில் மோட்டார்கள் மூலம் நெல் பயிர்களுக்கு பாய்ச்சி அறுவடை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே பாய்ச்ச தண்ணீர் இருப்பதால் தூரத்தில் இருக்கும் மற்ற வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.
முத்தனேரி, குறையற வாசித்தான் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு வரக்கூடிய வரத்துக் கால்வாய்களை சீரமைக்காததால் மழைநீரை முழுவதுமாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி விவசாயிகள் இருக்கின்ற நீரைக்கொண்டு எப்படியாவது விவசாயம் செய்ய வேண்டும் என நெல் பயிரிட்டனர். பலன் கொடுக்கும் நேரத்தில் கண்மாய்களில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் அதிக விலை கொடுத்து வாகனங்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சும் அவலநிலைக்கு சென்றனர். கண்மாயில் கிடந்த சேறும் சகதியும் நிறைந்த தண்ணீரை ஆயில் மோட்டார் மூலம் பாய்ச்சி ஓரளவிற்கு பயிரை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான். இனிவரும் காலங்களிலாவது வரத்து கால்வாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கோபாலகிருஷ்ணன், விவசாய சங்க செயலாளர், நரிக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X